Print this page

ஒழுக்கத்துக்கே முதலிடம். 3-2-1956

Rate this item
(0 votes)

நம் நாட்டில் இன்னமும் சரியான முறையில் மக்கள் நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதே கிடையாது. திருமண நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள்கூட கொஞ்சங்கூட ஒழுங்குமுறையைப் பின்பற்றுவதில்லை. இங்கே உட்கார்ந்திருப்பவர்களில் முன்னே உள்ளவர்கள் பின்னே வந்தவர்களாக இருப்பார்கள். பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் முன்பாக வந்தவர்களாக இருப்பார்கள். எனவே இந்த முறையிலேயே ஒழுங்கு இல்லை. மேலும் திருமணத்தை நடத்துபவர்கள் வருகிறவர்களை வரவேற்று, யார் யாருக்கு எப்படி எப்படி உபசரித்து அனுப்பவேண்டும் என்பதில்கூட சரியாகக் கவலைகொள்வதில்லை. ஏதோ கூட்டம் வந்தது, நடந்தது காரியம் என்பதை மட்டும் விரும்புகிறார்கள்.

இங்கே இப்போது கூட்டம் நிறைந்திருக்கிறதே தவிர முன்பாக உட்கார்ந்திருக்கும் சிறு குழந்தைகள் எல்லாம் கொஞ்சம்கூட ஒழுங்கற்றவைகள். அதுவும் நம்முடைய குழந்தைகளுக்கு ஒழுங்குமுறை வரச்செய்வதற்கு பெற்றோர்களாலும் முடிவதில்லை கவர்மெண்டினாலும் முடிவதில்லை.

பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு முதன்முதலில் ஒழுங்கு முறையைப் புகட்டுவதில்தான் கவலை வேண்டும். அதுதான் முக்கியம். பிறகு அடுத்தபடியாக உள்ளதுதான் கல்வி. முதலில் எப்படிப் பழக வேண்டும் என்ற நல்லொழுக்கத்தைப் புகட்ட வேண்டும். நல்லொழுக்கம்தான் ஒரு மனிதனைப் பிற்காலத்தில் சிறந்த பண்புடையவனாக ஆக்குகிறது.

அயல்நாடுகளில் எல்லாம் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏராளமான மக்கள் கூடினால் அதில் ஆண்களும் இருப்பார்கள் பெண்களும் இருப்பார்கள். பெண்கள் கொண்டுவரும் குழந்தைகளினால் அந்த நிகழ்ச்சியில் ஒருவிதத் தொந்தரவும் இருக்காது! காரணம் அப்போது முதற்கொண்டே பெற்றோர்கள் குழந்தைக்கு ஒழுங்கு முறையைப் புகட்டுகிறார்கள். அந்தக் குழந்தைகள் தினமும் இன்ன நேரத்தில்தான் மலஜலம் கழிக்க வேண்டும் என்ற முறைக்கேற்ப வளர்ப்பார்கள். அந்த நேரத்திற்கு முன்போ பின்போ எந்தக் குழந்தையும் மலஜலம் கழிப்பது கிடையாது! கண்டதற்கெல்லாம் கத்துவது கிடையாது. எந்தெந்த நேரத்தில் என்னென்ன முறையில் குழந்தைக்கு போஷனைகள் செய்ய வேண்டுமோ அதற்கேற்ப பட்ஜெட் அமைத்து அதன்படி செய்வார்கள். ஆகவே அதனால் குழந்தையும் டைம்டேபிள் பிரகாரம் ஒவ்வொன்றையும் பின்பற்றுவதுபோல் நடந்துகொள்ளும். இதனால் குழந்தைக்கும் உடல்நலம் அமைவதுடன் பெற்றோர்களுக்கும் குழந்தையை வளர்ப்பதில் கஷ்டம் இருப்பதில்லை.

இங்கு அப்படி இல்லை. ஒரு குழந்தையை, கொஞ்சம் சுயபுத்தி வருகிறவரை வளர்ப்பதற்குள் பெற்றோர்கள் எவ்வளவோ சிரமம் அடைகிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இங்கு எத்தனை குழந்தைகள் உள்ளதோ அத்தனையும் ஒன்றுவிட்டு ஒன்று அழுதுகொண்டே இருக்கும். காரணம் பெற்றோர்கள் அதற்கான முறையில் குழந்தைகளுக்கு அந்தந்த நேரத்தில் அதற்காக வேண்டியவைகளைக் கவனித்துக் கற்பிக்காததே காரணமாகும்.

இப்படியே நம் மக்களுக்கு எதிலும் ஒழுங்குமுறையைப் பின்பற்றுவதற்கு வழியின்றிப்போய் விட்டது.

3-2-1956 அன்று தென்னார்க்காடு மாவட்டம் திட்டக்குடியில் திருமணம் ஒன்றில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை

Read 47 times