Print this page

இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம். குடிஅரசு துணைத்தலையங்கம் - 31-03-1929

Rate this item
(0 votes)

சுதேசமித்திரன் இந்து பத்திரிகைகளின் பத்திராதிபரும் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஜில்லா மக்களுக்கு இந்திய சட்டசபை பிரதிநிதி மெம்பரும், காங்கிரஸ் காரியதரிசியாயிருந்தவரும், இந்தியாவின் 33 கோடி பொது மக்களுக்கு சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்க உயிர் விட்டுக் கொண்டு பத்திராதிபராயிருப்பதில் மாதம் 2000 ரூபாய் சம்பாதிப்பவருமான திரு. எ.ரங்கசாமி அய்யங்கார் என்னும் பார்ப்பனர் இந்திய சட்டசபையில் சென்னை மந்திரி திரு.முத்தையா முதலியார் விஷயமாக சில கேள்விகள் கேட்டாராம்!

அதாவது சென்னை சுகாதார மந்திரி ரிஜிஸ்ட்ரேஷன் இலாகாவில் உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்துவதில் வகுப்புவாரி உரிமை ஏற்படுத்தியிருப்பது இந்திய அரசாங்கத்திற்கு தெரியுமா? அது சட்டவிரோதமல்லவா? அதனால் அரசாங்கத்தார் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரியுமா? அதைப்பற்றி இந்திய அரசாங்கத்தார் விசாரித்து அந்த உத்தரவை ரத்து செய்ய முடியுமா? என்பது பொருளாக பல கேள்விகள் கேட்டாராம்,

இதற்குப் பதில் சொல்லும் சமயத்தில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாத ஒரு பிரதிநிதி (திரு.ஆர்.கே. சண்முகம்) தவிர மற்ற எல்லோரும் பார்ப்பனர்களானதால் யாரும் ஒன்றும் பேசாமல் கேள்விக்கு அனுகூலமாயிருந்தார்களாம். அரசாங்க மெம்பர் பதில் சொல்லுகையில் இதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும், சென்னை அரசாங்கத்தை விவரம் கேட்டுப் பதில் சொல்லுவதாயும் சொல்லிக் கொண்டிருக்கும் போது திரு. ஆர்.கே.சண்முகம் அவர்கள் எழுந்து அதைப்பற்றி சர்க்கார் மீது யாருக்கும் அதிருப்தி இல்லையென்றும், மேலும் அநேகருக்குத் திருப்தி என்றும் சொன்னாராம் உடனே திரு.எ.ரங்கசாமி அய்யங்கார் இது உண்மையல்ல என்றாராம்.

உடனே திரு.சண்முகம் எழுந்து சென்னை சட்டசபையில் இதைப்பற்றி விவாதம் கிளப்பி அங்கத்தினர்கள் எல்லோராலும் வகுப்புவாரி உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டும், அநேக பொதுக்கூட்டங்களில் அரசாங்கத்தையும் மந்திரிகளையும் ஆதரித்தும் பாராட்டியும் தீர்மானங்களும் செய்யப்பட்டும் இருக்கின்றது என்று சொன்னாராம். இந்த சமயம் அரசாங்க மெம்பரும், சட்டசபை மெம்பர்களும் அய்யங்கார் முகத்தைப் பார்த்தார்களாம்; அய்யங்கார் முகம் பூமியை பார்த்ததாம். உடனே அரசாங்க மெம்பர் எழுந்து நல்ல சமயத்தில் தனக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி உதவி செய்ததற்காக திரு. சண்முகத்திற்கு வந்தனம் செலுத்துவதாய்ச் சொன்னாராம். இந்திய சட்டசபை அங்கத்தினர்கள் கைத்தட்டினார்களாம்.

இவற்றை அசோசியட்பிரஸ், பிரீபிரஸ் பிரதிநிதியும் பார்த்து கொண்டே இருந்தும் கூட இதை எந்தப் பத்திரிகைக்கும் தெரியப்படுத்தவேயில்லை. எனவே பார்ப்பன ஆதிக்கம் பத்திரிகைகளுக்கு விஷயங்கள் அனுப்புவதில் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கின்றது என்பதை இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். அன்றியும் இந்திய சட்டசபை ஸ்தானங்களை பெரிதும் பார்ப்பனர்கள் கைப்பற்றி இருப்பதால் அவர்களால் நமக்கு எவ்வளவு துரோகங்கள் நடைபெறுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இனியாவது இந்திய சட்டசபை ஓட்டர்களுக்கு புத்திவருமா?

 

தந்தை பெரியார் -

குடிஅரசு துணைத்தலையங்கம் - 31-03-1929

 
Read 23 times