Print this page

பகுத்தறிவும் அதன் விரோதிகளும். குடிஅரசு கட்டுரை - 03-02-1929

Rate this item
(0 votes)

மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிர்ம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.

உதாரணமாக, மேல் நாட்டில் ஒரு பெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கை கூடாது என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாஸ்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை என்று சொன்னாராம். கூட்டத்திலிருந்தவர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லுகின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால், அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறித்தவ மதமோ ஆண்டவனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோகித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா?

ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்கவேண்டுமானால் நம்பிக்கை இருக்க வேண்டும். பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாஸ்திகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கியங்களைப் பின் வாங்கிக் கொண்டு நாம் சொன்ன மகாபாதகமான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப் படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 100க்கு ஒன்றரை பெண்களும் படித்திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங்களுக்கும் வேதங்களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்குமென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாஸ்திகன் என்று எழுதி வைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாஸ்திகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?


தந்தை பெரியார் -

குடிஅரசு கட்டுரை - 03-02-1929

 
Read 50 times