Print this page

கடவுள் உண்டு என்று சொன்னேனா? விடுதலை- 24,25-11-1959

Rate this item
(0 votes)

"சென்ற மாதம் 30 ஆம் தேதி நான் கும்பகோணம் நிதி அளிப்புக் கூட்டத்தில் பேசுகையில் நான் ஒரு கடவுள் உண்டு என்றும் அதனைக் கும்பிடும்படிக் கூறினேன் என்றும் எல்லாப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும், பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள். 'மெயில்' போன்று பொறுப்பு வாய்ந்த பத்திரிக்கைகள் கூட இந்த அயோக்கியத்தனமான வேலையைச் செய்துள்ளன. 'ஆனந்த விகடன்' கார்ட்டூன் போட்டுள்ளான். "கண்ணீர்துளி" பத்திரிக்கை ஒன்று "அண்ணா பாதையில் பெரியார்" என்று ஈனத்தனமான முறையில் சேதி வெளியிட்டுள்ளது.

"கண்ணீர்துளிகள்" அதுவரை ஒரு கடவுள் உண்டு என்று கூறினார்களாம்! நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம்! இன்றுதான் தவற்றை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கிறேனாம்! பத்திரிக்கைக்காரன்களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கியனாகத்தான் ஆகிவிடுகின்றான். நானும் மானங்கெடத்தான் இவர்களைப் பற்றிப் பேசுகின்றேன். ஒருவனுக்காவது மான ஈனத்தைப் பற்றி கவலையே இல்லையே.

 நான் கும்பகோணத்தில் என்ன பேசினேன் நான் இங்கு குறிப்பிட்டதுபோலத்தான் அங்கும் கடவுள், மதம் இவை பற்றி பேசினேன். நம் மக்கள் கடவுள், மதம் இவை பற்றிய முட்டாள்தனங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும். உங்களுக்கு கடவுள் இருந்தாக வேண்டுமென்று எண்ணுவீர்களேயானால் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனது இயக்கத்தை சேர்ந்த தோழர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை கிடையாது. அதுபோலவே நீங்கள் இருந்தாக வேண்டும் என்று நான் என்றும் கட்டாயப்படுத்த வரவில்லை.

 கடவுள் இல்லையென்று கூற, அதன்படி நடக்க ரொம்ப அறிவு வேண்டும். தெளிவு வேண்டும். எப்படி இல்லை? என்று எந்தவிதக் கேள்வி கேட்டாலும் தெளிவுபடுத்தக்கூடிய முறையில் அறிவாற்றல் ஆராய்ச்சி வல்லமை வேண்டும். இவையெல்லாம் நம் மக்கள் எல்லோரிடமும் இருக்கிறதென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடவுளிருக்கின்றது என்று கூற அறிவு தேவையில்லை. சுத்தமடையன் அடிமுட்டாள் கூட கடவுள் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்கலாம். அறிவுக்கு வேலையே இல்லை. அப்படி கடவுள் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற நீங்கள் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்; உலகத்தில் முஸ்லீம், கிறித்துவர்கள் கடவுள் நம்பிக்கை வைத்து இருப்பது போலாவது நடந்து கொள்ளுங்கள் என்றுதான் விளக்கம் சொன்னேன்."

விடுதலை- 24,25-11-1959

 
Read 69 times