Print this page

பார்வதிக்கும் பரமசிவனுக்கும் சம்பாஷணை. குடி அரசு - உரையாடல் - 17.06.1928

Rate this item
(0 votes)

பார்வதி :- எனது பிராணநாதனாகிய ஓ சிவபெருமானே! ஆகாயத்தில் பறக்கின்ற, கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்து பலர் காலையிலும், மாலையிலும் கன்னங்கன்னமாய் போட்டுக் கொள்ளுகின்றார்களே, அது எதற்காக நாதா?

பரமசிவன் :- கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக் கண்டால் கன்னத்தில் அடித்துக் கொள்ளுகிறார்கள்.

periyar 550பார்வதி :- ஓ ஹோ அப்படியா சங்கதி! சரி அப்படியானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும்போது, நம்முடைய வாகனமாகிய காளை மாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டியில் கட்டி ஓட்டுகிறார்கள், ஒடை அடிக்கிறார்கள், செக்கில் கட்டி ஆட்டுகிறார்கள், அடித்துக்கூட தின்று விடுகிறார்களே அது ஏன்?



பரமசிவன் :- நம்முடைய பக்தர்களுக்கு அவ்வளவு பக்தி இல்லை. நன்றாக சாம்பலை பூசிக் கொள்ளத்தான் தெரியும். நமது வாகனத்தினிடத்தில் பக்தி காட்டத் தெரியாது.

பார்வதி :- அதுதான் போகட்டும், நமது குமாரனாகிய கணபதியின் வாகனமாகிய பெருச்சாளியைக் கண்டால் ஏன் கன்னம் கன்னமாய் அடித்துக் கொள்ளாமல் தடி எடுத்து அடித்துக் கொன்று விடுகிறார்கள்? அய்யோ பாவம்!

பரமசிவன் :- கணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது. ஏனென்றால் கணபதிக்கு அபிஷேகம் செய்யும்போது அவனது வாகனமாகிய கல்லுப் பெருச்சாளிக்கும் அபிஷேகம் செய்வார்கள். அதற்கும் பால், நெய், தயிர் ஊற்றி கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன் காணும்போது ஓடி ஓடி அடிப்பார்கள். நம் பக்தர்கள் யோக்யதையே இப்படித்தானே! இந்த வெட்கக் கேட்டை யாருடன் சொல்லுவது!

பார்வதி :- அதுதான் போகட்டும், தங்களுடைய மற்றொரு வாகனமாகிய நாயைக் கண்டால் ஒருவரும் கன்னத்தில் அடித்துக் கொள்ளாமல் எல்லோரும் சோடு சோடு என்று விரட்டுகின்றார்களே அது என்ன காரணம் நாதா?

பரமசிவன் :- கண்மணி அதுவும் பக்தர்களின் அறியாத்தனம் தான். ஆனாலும் அது மலம் சாப்பிடுகின்றதல்லவா? அதனால் அதன் மீது சிலர் அசுசிப்படுகின்றார்கள் போல் இருக்கின்றது.

பார்வதி :- என்ன நாதா, வைரவக் கடவுள் வாகனம் மலம் சாப்பிட்டால் மகாவிஷ்ணுவின் வாகனம் அதிலுள்ள பூச்சி, புழு, நத்தை, நண்டு முதலிய அசுசியமான வஸ்துக்களையெல்லாம் சாப்பிடுகின்றதே! அதையெல்லாம் அந்த பக்தர்கள் மன்னிக்கும் போது மலம் சாப்பிடுவதை மாத்திரம் ஏன் நமது பக்தர்கள் மன்னிக்கக்கூடாது?

அதுதான் போகட்டும் நமது குமாரன் வாகனமாகிய மயிலைக் கண்டால் ஏன் முருக பக்தர்கள் கன்னங் கன்னமாய் போட்டுக் கொள்ளுவதில்லை, அன்றியும் அதைக் கண்டால் அடித்துத் தின்று விடுகிறார்களே!. அவன் கொடியாகிய சேவலைக் கண்டால் அறுத்துத் தின்று விடுகிறார்கள்? இது என்ன அநியாயம்?

பரமசிவன் :- அது அந்த பக்தர்களின் பக்திக் குறைவு. அதற்கு நாம் என்ன செய்யலாம்.

பார்வதி :- நாதா! சரி சரி, இதையெல்லாம் பார்க்கும் போதுதான் எனக்கு மிகவும் வெட்கக் கேடாயிருக்கின்றது. நமக்குக் கீழ்ப்பட்ட விஷ்ணுவின் வாகனத்திற்கு மாத்திரம் உலகத்தில் இவ்வளவு கௌரவமும் அவர் பக்தர்களுக்கு மாத்திரம் இவ்வளவு பக்தியும் இருப்பதும் நமது வாகனங்களுக்கு இவ்வளவு மரியாதைக் குறைவும், நமது பக்தர்களுக்கு இவ்வளவு பக்திக் குறைவும் இருப்பதும் எனக்கு வெளியில் தலை நீட்ட முடியவில்லையே தவிர, விஷ்ணுவின் பெண்ஜாதியான மகாலக்ஷ்மி கூட இதனாலேயே அடிக்கடி என்னைப் பார்த்து பரிகாசம் பண்ணுகின்றாள். தவிர நம்முடைய பக்தர்களிலும் பலர் அறிவில்லாமல் நம்ம வாகனத்தை மரியாதை செய்யாமல் இருப்பதோடல்லாமல் விஷ்ணு வாகனத்திற்கு விஷ்ணு பக்தர்களைப் போலவே கன்னங்கன்னமாய் போட்டுக் கொண்டு மரியாதை செய்கிறார்களே இது என்ன மானக்கேடு! தாங்களே யோசித்துப் பாருங்கள்.

பரமசிவன் :- என்ன செய்யலாம் சகி? நம் தலையில் பிரம்மன் இப்படி அவமானப்படும்படியாக விதித்துவிட்டான். விதி யாரை விட்டது? சொல் பார்ப்போம் என் கண்மணி! நீ இதற்காக அழவேண்டாம். உன்னைப் பார்த்தால் எனக்கும் அழுகை வருகிறது.

பார்வதி :- சரி சரி, இதற்காக நான் ஒருத்தி அழுவது போதாதாக்கும். இனி நீங்கள் வேறு அழுக வேண்டும்! போனால் போகட்டும் இம்மாதிரி நம் தலையில் எழுதிய அந்த பிரம்மாவை பேசிக் கொள்ளலாம். வாருங்கள் நம்ம வேலையைப் பார்க்க நாம் போவோம்.

சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது;

குடி அரசு - உரையாடல் - 17.06.1928

 
Read 58 times