Print this page

சைமன் கமிஷன் யாதாஸ்து (குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.06.1930)

Rate this item
(0 votes)

சைமன் கமிஷன் யாதாஸ்த்தின் முதல் பாகம் வெளியிடப்பட்டு விட்டது. அதைப்பற்றி நாம் இப்போது எவ்வித அபிப்பிராயமும் கூற முற்படவில்லை.

அன்றியும் அதிலிருந்து இந்தியர்களுக்கு எம்மாதிரியான அரசியல் உரிமை கிடைக்கப் போகின்றது என்பதைப் பற்றியும் நாம் சிறிதும் கவலைப்படவில்லை. ஏனெனில் அதெல்லாம் உத்தியோகமும் பதவியும் அனுபவிக்கக் கருதி அதற்காகவே பல ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு காத்திருப்பவர்களுக்கே விட்டு விடுகின்றோம்.

 

நம்மைப் பொறுத்தவரை சைமன் கமிஷன் முடிவான யாதாஸ்த்தில் தீண்டப்படாதவர்கள், பெண்கள், ஜாதி வித்தியாசத்தினால் இழிவுபடுத்தப்பட்டவர்கள் ஆகியவர்கள் விடுதலை விஷயத்திலும் முகமதியர்களும், கிருஸ்தவர்களும் “இந்து”க்களிடம் அவநம்பிக்கை கொண்டு எதிரிகளாயில்லாமல் ஒற்றுமையாய் வாழவும் பொதுவாக எல்லோருக்குமே சமமாக கல்வி கிடைக்கும்படி செய்யவும் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றியும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தில் தீண்டாதார்கள், பெண்கள், கிருஸ்துவர்கள், மகமதியர்கள் ஆகியவர்களுக்கு எவ்விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என்கின்ற விஷயத்திலுமே தான் கமிஷனின் சிபார்சை அறிந்து அதன் மேல் அது மக்களின் சமத்துவத்திற்கும், விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் ஏற்றதா, அல்லவா என்பதைப்பற்றி யோசிக்கக்கூடும்.

 

அன்றியும் இந்தியாவில் உள்ள சகல அரசியல் ஸ்தாபனங்களும் சைமன் கமிஷனை எதிர்த்தும், நாம் மாத்திரமே ஆரம்பத்தில் இருந்தே அவ்வெதிர்ப்புகளை எதிர்த்து கமிஷனை வரவேற்றதுடன் மற்ற மக்களையும் வரவேற்றுத் தங்கள் குறைகளைத் தெரியப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது இக் கருத்தைக் கொண்டேயாகும். ஆதலால் முடிவு யாதாஸ்த்தை எதிர்பார்க்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.06.1930)

 
Read 69 times