Print this page

சுயமரியாதைக்காரன் கடவுளைப்பற்றி - பேசுவதேன்? குடி அரசு - 11.8.1135

Rate this item
(0 votes)

இன்றுள்ள இந்நாட்டு மக்கள் நிலையை யும், உலக நிலையையும் உணர்ந்து பார்த்து, இன்று நடைமுறையில் உள்ள மதம், ஜாதி, கடவுள் முதலியவைகள் ஒழியாமல் மனித சமூகத்துக்கு விமோசனமும், சாந்தியும் இல்லை.


என்னைப் பொறுத்தவரை நான் அவைகள் ஒழியப்படவேண் டும் என்று சொல்வதோடு, அவற்றையெல்லாம் ஆதரிக்கும் அரசியல் கிளர்ச்சிகளும், அரசியல்களும் ஒழியவேண்டும் என் றும் சொல்லுபவன். ஏனெனில், அரசியலும், அரசியல் கிளர்ச்சிக ளுமே மேற்கண்டதான கெடுதிகளை ஆதரித்துக் காப்பாற்றி வருகின்றன.
இந்தப்படி சொல்லுவதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது.


இந்த தேசத்து கடவுள்களின் யோக்கியதைகளை நீங்கள் சிறிது யோசித்துப் பாருங்கள். அவையும் தானாகவே உண்டான வைகளாக இருந்தாலும் சரி, மனிதர்களாலேயே உண்டாக்கப் பட்டவைகளாகவே இருந்தாலும் சரி, அவைகளால் நமது நாட்டுக்கும், மனித சமூகத்துக்கும் எவ்வளவு கேடுகள் ஏற்பட்டி ருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.


இந்த நாட்டுப் பொருளாதாரக் கேட்டுக்கும், கல்வி அறிவற்ற தன்மைக்கும் யார் ஜவாப்தாரி என்பதை யோசியுங்கள்.


இந்தக் கடவுள்கள் நம் நாட்டு செல்வங்கள் எவ்வளவை பாழ்படுத்துகின்றன?


தென்னாட்டுக் கோயில்களுக்கு வருஷம் இரண்டரை கோடி ரூபாய் வருமானம். இது சர்க்கார் கணக்கு. அதற்காக மக்களு டைய பணம் செலவாவது மேற்கண்டு 4, 5 கோடி ரூபாயாக இருக்கலாம். உங்கள் திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சை ஆகிய ஜில்லாக்களை மாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வரும்படிகளும், அதற்காக மக்கள் செய்யும் செலவுக ளும் என்ன பயன் அடைகின்றன?


இவ்வளவு பணம் பாழாகியும் இந்த நாட்டில் 100-க்கு 8 பேர்தானே கையெழுத்துப் போடத் தெரிந்த வர்களாய் இருக்கிறார்கள்.


100-க்கு 75 பேருக்கு மெய் உழைப்பாளி கள், தரித்திரர்களாய் இருக்கிறார்கள். இத் தனை கோடி ரூபாய் பாழாகும்படியாக இருந்துகொண்டு, அனாவசியமான போக யோக்கியத்தை அனுபவித்து வரும் கடவுள் கள், இந்த நாட்டு மக்களில் 100-க்கு 92 பேர்களை தற்குறிகளாக வைத்து இருக்கின்றன என்று சொல்லப் படுமானால், இக்கடவுள்கள் நன்றி கெட்டவைகள் அல்லவா என்று கேட்கின்றேன்.


கல்விக்கும், கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லப்ப டுமானால், இக்கடவுள்களுக்காக இவ்வளவு கோடி ரூபாய் செலவாகும்படி ஏன் பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என் பதை யோசித்துப் பாருங்கள்.


வீணாக பகுத்தறியும் யோசனையும் இல்லாமல், “சுயமரியா தைக்காரர்கள் கடவுளை வைகிறார்கள்" என்று சொல்லுவதில் பயன் என்ன?

இந்திய நாட்டையே இந்தக் கடவுள்கள்தானே இக்கதியாக்கி இருக்கின்றன.


கடவுள்களுக்கு பெண்டு, பிள்ளை , வீடு, வாசல், சொத்துக் கள், நகைகள், தாசி, வேசிகள், வைப்பாட்டிகள் எல்லாம் எதற்கு? இதைப் பார்த்துதானே ஒவ்வொரு மனிதனும் நடந்து கொள்ளுகிறான். 


நமது கடவுள்களுக்கு உற்சவம் என்பெதல்லாம் பெரிதும் வருஷம்தோறும் கல்யாணம் செய்வது என்பதற்கு ஆகவே நடைபெறுகின்றன. கடவுளுக்கு கல்யாணம் எதற்கு? சென்ற வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று?


ஏதாவது தவறிவிட்டதா? அல்லது எந்தக் கோர்ட்டின் மூலமா வது கல்யாண ரத்து ஆகிவிட்டதா? இது சிரிப்புக்கிடமான கல்யாணமல்லவா? இந்தக் கல்யாணங்கள் சுயமரியாதை முறைப்படி நடப்பதாயிருந்தால் நமக்கு கவலை இல்லை. அப்படிக்கில்லாமல், எவ்வளவு செலவு, எத்தனை காலமெனக் கீடு, எத்தனை பேர்களுக்கு கஷ்டம்! பெரிய ராஜா வீட்டுக் கல்யாணத்துக்குமேல் நடக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த் தால், இந்தக் கடவுள்கள் எல்லாம் ஒழியா மல் எப்படி மனிதன் சீர்பட முடியும்? எப்படி அறிவு பெற முடியும்? எப்படி இந்த நாட்டு செல்வமும், நேரமும் பயனுள்ள காரியத்துக்கு உபயோகப்படுத்தப்பட முடி யும்?


கோபிப்பதில் பயன் என்ன? எங்களை நாஸ்திகர்கள் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். மற்ற நாட்டார்கள், மற்ற மதக்காரர்கள், இந்துக்களை யும், இந்துக் கடவுள்களையும் பார்த்து, நாஸ்திகர்கள், அஞ்ஞா னிகள் என்று சொல்வதோடு மாத்திரமல்லாமல், காட்டுமிராண் டிப் பிராயமுள்ளவர்கள் என்று சொல்லுகிறார்களே, யாருக்கா வது மானமோ, வெட்கமோ இருக்கின்றதா? எந்தக் கடவுளாவது இதற்காக நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துவிட்டதா? அல்லது அவர்களை இப்படிச் சொல்ல வேண்டாம் என்றாவது சொல்லி வைத்ததா?


ஒன்றும் இல்லையே. ஆஸ்திகம், நாஸ்திகம் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் கையில் வலுத்தவன் கதையாகத்தானே இருக்கின்றது.


ஆஸ்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட் டக்காரன், எண்ணத்துக்கும், பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லாத திருட்டுப் பயல் என்றெல்லாம் சொல்லும்படி யாகத்தானே மக்கள் நடந்து காட்டுகின்றார்கள். 


ஆதலால், தோழர்களே! கடவுளையும், இந்த ஆஸ்திகத் தன்மையையும் ஒழிக்காமல் மனிதன் மனிதத் தன்மையை அடைய முடியாது என்பது எங்களது அபிப்பிராயமாகும்.


மற்றும், மனிதனுடைய இழிவும், தரித்திரமும், அதாவது ஒரு மனிதனை மற்றொரு மனிதன் இழிவாய் நடத்துவதும், ஒரு மனிதனது உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக் கொண்டு, உழைத்தவனை தரித்திரனாய், நோயாளியாய், அடி மையாய் வைத்திருப்பதும் கடவுள் செயல் என்று சொல்லப்படு மானால், அப்படிப்பட்ட கடவுளையாவது ஒழிக்கவேண் டாமா? என்று உங்களைக் கேட்கின்றேன். 


ஆகவே, நீங்கள், சுயமரியாதைக்காரர்கள் ஏன் கடவுளைப்பற் றிப் பேசுகின்றார்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறேன். 


அனாவசியமாய், உங்களுக்கே புரியாத வார்த்தையாகிய கடவுள் என்கின்ற வார்த் தையைக் கட்டி அழுதுகொண்டு “எல்லாம் இருக்கட்டும், கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இல்லையா?'' என்கின்ற அசட்டுத்த னமும், முட்டாள்தனமுமான கேள்வியைக் கேட்பதில் உங்கள் புத்தியை செலவழிக்காதீர்கள்.

அதனால் எங்களை மடக்கிவிடலாம் என்றோ, எங்களை பழிப்புக்கு உள்ளாக்கிவிடலாம் என்றோ கருதி விடாதீர்கள்.


உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?


நீங்கள் எப்படி பிறந்திருந்தால்தான் அதைப்பற்றி உங்களுக்கு என்ன வேலை? உலகில் உள்ள வஸ்துக்கள்.

உலகில் நடக்கும் செய்கைகள் எல்லாம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது, எப்படி நடைபெறுகின் றது என்பதை எந்த மனிதனாவது அறிந்திருக்கின்றான் என்று நீங்கள் சொல்லிவிட முடியுமா? அது யாரால், எப்படி நடந்தால் என்ன?


உங்களுக்கும் எனக்கும் தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கிறது. இன்று பாடுபட்டாலும் தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களும் எவ்வளவோ இருக்கின்றன.

அவற்றைப்பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டும், தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டும் இருக்கின்றவர் கள், சமுத்திரத்து அலைகளையும், மணலையும், மழைத் துளிகளையும் எண்ண ஆசைப்படும் மூடசிகாமணிகளுக்கே ஒப்பாவார்கள்.


மக்கள் படும் கஷ்டங்கள் நமது கண்களுக்குத் தெரிகின்றன.

மற்ற மக்களால் நாம் இழிவும், துன்பமும் அனுபவிப்பதை நாம் உணர்கின்றோம். இதுவே முதலில் ஒழிக்கப்படவேண்டும்.

எந்தக் காரணத்தாலானாலும் சரி, இவற்றிற்கு ஆதாரமாய் இருக்கும் கடவுள் உள்பட எல்லாம் அழிக்கப்படவேண்டும் என்றுதான் நாங்கள் சொல்லுகின்றோம்.

 

இது சரியா, தப்பா என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.


8.8.1035 அன்று குற்றாலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமை உரையில் ஒரு பகுதி.


குடி அரசு - 11.8.1135

 
Read 60 times