Print this page

ஆத்மா நம்பிக்கை ஒழிந்தால் கடவுள் நம்பிக்கை ஒழியும் - விடுதலை - 7.9.1950

Rate this item
(0 votes)

இயற்கையெய்தல் என்கின்றதின் தத்துவம் அதாவது மனிதனின் அவயங்கள் தத்தமது வேலைகளைச் செய்யும் சக்தியை இழப்பதோடு, மனிதனின் காற்றை உள்ளே வாங்கி வெளியே விடக்கூடிய காற்று வாங்கிப் பொறியின் இயக்கம் நின்று போய்விடுகிறபோதுதான் மனிதன் இயற்கையெய்தினான் அல்லது முடிவெய்தினான், செத்துப் போய்விட்டான் என்று சொல்லப்படுகின்றது. 

இது மனிதனுக்கு மட்டுமல்லாமல், மிருகங்கள் - முதல் புழு, பூச்சி, கிருமி, புல் பூண்டு, தாவரங்கள் முதலியனவின் தன்மையும் இந்தப்படியேதான் இருக்கின்றன. என்னவெனில், இயற் கையெய்துதல் என்பதில் பொது விதியாக இருக்கின்றது. இயற்கையெய்துதல் என்பதன் பொருள் என்னவென்றால், காணப்படும் பொருள், ஜீவன் உள்பட எல்லாமே தோன்றுதலும், தோன்றியவை யாவும் மறைவதுமான குணத்தை இயற்கையாகக் கொண்டவை ஆனதால் மாற்றமடைந்ததையும், மறைந்ததையும் இயற்கை எய்திற்று என்கின்றோம்.

"மனிதன் இயற்கையெய்திய பின்னர் அவனுடைய ஆத்மா இங்கேயே உலவி வருகிறது அல்லது அவரவர்கள் செய்த வினைப்பயனின்படி பரலோ கத்தில் அவையவைகள் பெறக்கூடிய இடங் களைப்பெற்று, அதாவது மோட்ச நரகங்களை அடைந்து விடுகின்றன அல்லது பிதுர்லோகத்தில் இருக்கின்றது அல்லது மறு ஜன்மம் அடைந்துவிட்டது அல்லது பிசா சாக ஆகிவிட்டது'' என்பதெல்லாம் அசல் முட்டாள்தனமாகும். 

உலகத்தில் ஏறக்குறைய எல்லா மதத்தார்களும் ஆஸ்திகர்களும், ஆத்மா என்கின்ற ஒரு வஸ்து உண்டு என்றும், அது சூட்சும தன்மை, அதாவது கண்களுக்குத் தென்படாதது என்றும், மனிதன் செத்த பிறகு, மனிதன் ஆத்மாவோடு இருந்த காலத்தில் அந்த சரீரத்தால் செய்யப்பட்ட காரியங்களின் பலாபலன்களை அது அனுபவிக்கிறது என்றும் கருதுகிறார்கள். உலகத்திலே ஆத்மா என்கிறதைப்பற்றி நம்பிக்கையில்லாதவர்கள் பவுத்தர்கள்தான். அவர்கள் மதத்தில் தான் 'ஆத்மா' என்கிற ஒன்று இல்லை. மனிதன் இறந்தால் அத்தோடு அந்த மனித சம்பந்தமான யாவும் தீர்ந்தது என்றே கருத்து இருந்து வருகிறது. இந்த பவுத்தர்கள் இன்று உலகில் 60, 70 கோடிப் பேர்கள் இருக்கிறார்கள்.

ஒரு கடிகாரத்திற்கு அதன் சாவியின் அதாவது விசைத் தகட்டின் வளைவு சக்தி இருக்கும் வரையிலே கடிகாரம் இயங்குகிறது. மணி காட்டுகிறது. அந்த சாவியின் சக்தி நின்றவுடனே கடிகாரமும் நின்றுவிடுகிறது. அப்போது அந்த கடிகாரத்தின் 'ஆத்மா' மேலே போயிற்றென்றா சொல்ல முடியும்? முடியாதே. கடிகாரத்தின் விசை தீர்ந்து அசைவு நின்றுவிட்டது என்பதுதானே உண்மை. அதுபோலத்தானே மனிதர்களின் அசைவு சக்தி, இயற்க சக்தி அற்றுப் போனால், செத்துப் போனால் வெறும் பிணம் ஆகிவிட்டான் என்கிறோம்.

இந்து மதத்தில் மனிதரின் சாவைப்பற்றியும், ஆத்மாவின் தன்மையைப்பற்றியும் ஏராளமான புளுகு மூட்டை உண்டு. இவையெல்லாம் ஒரு கூட்டத்தார் நோகாமல் பாடுபடாமல் வாழ்வதற்காக, நம்முடைய முட்டாள் தனத்தையே கைமுதலாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட சங்கதிகளாகும். அதை கொஞ்சங் கூட சிந்தித்துப் பார்க்காமல், பகுத்தறிவு கொண்டு யோசித்துப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி வருகிறார்கள். ஆத்மா, மோட்சம், நரகம் என்கின்ற சொற்கள் தமிழ் சொற்களே அல்ல. தமிழிலும் அவைகளுக்கு ஏற்ற சொற்களே கிடையாது.

சாதாரணமாக இந்து மதத்திலே ஆத்மா வைப்பற்றி பலவித கருத்துக்கள் கூறப்படு கின்றன. அவற்றில் ஒன்று என்னவென்றால், "ஒரு ஆத்மாவானது இன்னொரு உடலில் போய் ஒட்டிக்கொண்ட பிறகுதான் ஒரு உடலை விடுகிறது' என்பது ஆகும். அப்படி இருக்கும்போது. இறந்தவர்களுக்கு ஆக நாம் செய்யம் திதி, திவசம், சடங்கு எதற்கு ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். இரண்டாவதாக, “இறந்த பின் உடனேயே அவரவர்களின் வினைப் பயனுக்கேற்ற மாதிரியில் மறுபிறவி எடுத்து விடுகிறார்கள்" என்று கூறப்படுகிறது.

அப்படிப் பார்த்தாலும் உடனே பிறவி எடுத்து இந்த லோகத்துக்கு வந்துவிடுகின்ற "ஆத்மாவுக்கு" நம்முடைய திதியைக் கொண்டு என்ன பலன் ஏற்படப் போகிறது? மற் றொரு கொள்கை என்னவென்றால், செத்தவன் ஆத்மா உடனே மோட்சத்திற்கோ, நரகத்திற்கோ போய் விடுகிறது என்று சொல்லப்படுகிறது. அந்தப்படி நரகத்துக்கோ, மோட்சத்திற்கோ போய்விட்ட ஆத்மாவுக்கு நாம் செய்வது, கொடுப்பது எப்படி பயன்படும்?

பார்ப்பானுக்குச் சலிக்காமல் கொடுப்பதுமாகிய காரியத்தைச் செய்தால், மேலுலகத்தில் இருக்கும், இங்கிருந்து போன உயிர்க்கு நல்ல கதி கிடைக்கும் என்றால், இங்கே இருக்கிற எல்லோரும் செய்கிற அயோக்கியத்தனங்களையெல்லாம் பித்த லாட்டங்களையெல்லாம் செய்துவிட்டு, தான் இறந்தபின் தனக் காக தானம் முதலியவைகள் ஏராளமாக பார்ப்பானுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு அயோக்கியத்தனங்களை கொஞ்சங்கூட அஞ்சாமல் செய்யக்கூடும் அல்லவா? அப்படியானால், "கடவுள்'' ஒரு ஏமாந்த முட்டாளா? 

நாம் இங்கே பார்ப்பானுக்கு கொட்டியழுதால் நம்முடைய "பிதிர்கள்'' நலமுறை முடியுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

''ஆத்மா'' என்கிற நம்பிக்கை இருப்பதனால் தான் கடவுள், மோட்ச நரகம், பேய், பிசாசு முதலிய நம்பிக்கைகள் இருக்கின்றன.

போகிற உலகிற்கு புண்ணியம் கொண்டு செல்லவேண்டும் என்பதற்குத்தான் மனிதன் கடவுளை வணங்குகிறான். 'ஆத்மா' என்கிற நம்பிக்கை இருப்பதினால்தான் அந்த 'ஆத்மா' செய்திருக்கிற காரியங்களுக்கு ஏற்ற முறையில் அவைகள் வாழ இரு லோகங்கள் கற்பிக்கப்பட்டும், அந்தந்த ஆத்மாக்களுக்கு 'தீர்ப்பு' கூறும் கடவுளர்களும் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆத்மா என்கிற நம்பிக்கை இல்லாவிட்டால், சாதாரணமாகவே கடவுள் நம்பிக்கை எடுபட்டுப் போய்விடும்; மன்னிப்பு பெறலாம் என்கின்ற நம்பிக்கையும் போய்விடும். மனிதர்கள் யாவரும் யோக்கியமாய் நடப்பார்கள். எவரும் பணம் சேர்க்கமாட்டார்கள்.

(6.9.1950 அன்று சென்னை பெத்துநாய்க்கன்பேட்டையில் நடைபெற்ற நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி )

விடுதலை - 7.9.1950

Read 61 times