Print this page

கடவுள்கள் யோக்கியதை. விடுதலை - 14.7.1857

Rate this item
(0 votes)

  கடவுள் என்றால் மூடநம்பிக்கைக்கு ஆளாகக்கூடாது; சாணி கடவுள், அரசமரம், வில்வமரம், கல், படம், பொம்மை எல்லாம் நம் கடவுள்கள் என்றால் என்ன நியாயம்? ஆறறிவு உள்ள மனிதனா இவ்வளவு காட்டுமிராண்டியாயிருப்பது?

 கடவுள் வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்களேன். அந்தக் கடவுளுக்கு உருவம் கிடையாது, எங்கும் இருப்பார், பேர் இல்லாதவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். மகமதியரும் கிறிஸ்துவரும் அப்படித்தானே வைத்திருக்கிறார்கள்? ஒரு கடவுள் என்றுதானே எல்லோரும் பேசியிருக்கிறார் கள்? நம்மவர்களும் பேசியிருக்கிறார்கள். இருந்தும் எப்படி இவ்வளவு கடவுள் உண்டாயின?

  சுயமரியாதை இயக்கம் தோன்றியிராவிட்டால் இதுவரை மைல்கல், ஃபர்லாங்குக்கல் எல்லாம் சாமியா கியிருக்குமே! அவற்றிற்கு நாமம் போட்டு பொட்டு வைத்து மைலீசுவரர், ஃபர்லாங்கீசு வரர் என்றெல்லாம் சொல்லியிருப்பானே! 

  இந்தச் சாமிகளுக்குப் பன்றிமுகம், பாம்பு முகம் எல்லாம் எப்படி வந்தன? தோற்ற மெல்லாம் குத்துகிற மாதிரி, வெட்டுகிற மாதிரி உள்ளதே; எதற்காக இந்தப் போக்கிரித்தனமான வேடம்? கடவுளுக்குப் பெண்டாட்டி எதற்காக? போதாது என்று வைப்பாட்டி, பள்ளி அறைத் திருவிழா, ஊர்வலம் வருவது, இவையெல்லாம் எதற்கு? இவற்றையெல்லாம் வெளி நாட்டிலே போய்ச் சொல்லிப் பாரேன். உன்னை காட்டுமிராண்டி என்பான்! 

  ஒருவன் சொல்கிறான்; கிருஷ்ணன் தங்கை அண்ணனிடம்சென்று 'உலகத்திலிருக்கிற பெண்கள் எல்லாம் உன்னை - அனுபவிக்கிறார்கள்; நான் அப்படிச் செய்ய முடியவில்லையே'' என்கிறாள். அவனும் ஜெகநாதத்திற்கு வா என்கிறான். இதுதானே இன்றைக்கும் ஜெகநாதத்தில் இருக்கிறது? துரோ பதை முதலியவர்கள் எல்லாம் அவன் தங்கைகள் என்று இன்னொருவன் சொல்லுகிறான்! துரோபதை யோக்கியதை எப்படி? சினிமாவிலே வேண்டுமானால் இப்படியெல்லாம் செய்யேன்! 

  ஆண் பிள்ளை சாமி பெண் பிள்ளை சாமி எல்லாவற்றிற்கும் கையிலே சூலாயுதம் வேலாயுதம் சக்தி - இவை எதற்கு? இப்படிச் சாமிகளே யோக்கியதையாக நடக்கவில்லையென்றால் மனிதன் எப்படி யோக்கியதையாயிருப்பான்? காசு பிடுங்கினா லும் பரவாயில்லை, நம்மை மடையனாக்கி விட்டானே. 1957-லே எப்படி நடந்து கொள்வது என்று வேண்டாமா? நமக்குச் சரித்திரம் இல்லை; பார்ப்பான் வருவதற்குமுன் நம்ம. சங்கதியைக் காட்டுவதற்குச் சரித்திரம் இல்லையே! பார்ப்பான் வருவதற்கு முன்னாலே கடவுள் இருந்ததாகக் கதைகூட இல் லையே! பார்ப்பான் வந்த பிறகுதானே கடவுள் வந்தது? யாராவது மறுத்துச் சொல்லட்டுமே பார்க்கலாம். 

  பாரதம் பாகவதம் போன்ற இவற்றிலே வருவதுதானே இன்றைக்குக் கடவுள்? என்ன யோக்கியதை? பெண்டாட்டி, புவைப்பாட்டி, ஆணும் கூடி பிள்ளை பெறுவது போன்றவை!

  என்ன அநியாயம்? இவற்றையெல்லாம் இன்னொரு நாட்டானிடம் போய்ச் சொன்னால் நம்மை மதிப்பானா? ஒழுக்கமுள்ள சாமி என்று ஒரு சாமியை யாராவது சொல் லட்டுமே! இராமாயணத்திலே வருகிற இரா மன், அவன் மனைவி, வேலைக்கார அனுமான் எல்லாம் கடவுள்! இராமன் கடவுள் என்கிறதற்கு ஆதாரம் வேண்டாமா? எதிலே யோக்கியதையாக நாணயமாக நடந்தான்   என்று யாருக்கும் தெரியாது. 1957- லேயா இராமாயணத்தைக் கடவுள் சம்பந்தமானது என்று நினைப்பது? பாரதத்திலோ எல்லாம் அயோக்கியர்களே! இன்றைக்கு எல்லோரையும் தெய்வீகத் தன்மையுள்ளவர்களாகச் செய்து வைத்திருக்கிறான்! பாரதத்தை ஒரு விபச்சாரிக் கதை என்றே சொல்லலாம். ஒருவனாவது அதிலே அவன் அப்பனுக்குப் பிறக்கவில்லையே! கண்ட வர்களுக்குப் பிறந்தவர்கள் பங்கு கேட்டார்கள்; கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டதாகக் கதை!

      கதை நடந்தது என்று சொல்லவில்லை; குப்பைக் கதையை எழுதிவிட்டு அய்ந்தாவது வேதம், அப்படி இப்படி என்று சொல்லி நம்மை மட்டம் தட்டி வைத்திருக்கிறான் பார்ப்பான்.

     இராமன் ஏன் காட்டுக்குப் போனான்? ஏன் அவன் தாயார் காட்டுக்குப் போகச் சொல்கிறாள்? கதைப்படி இராமனுக்கும் அவனப்பனுக்கும் சொத்தில் உரிமையில்லை. பரதனின் அம்மா வைக் கல்யாணம் பண்ணும் போதே இராச்சியத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டான். தசரதன் மரியாதையாக அவளுக்கே நாட் டைக் கொடுத்திருக்கவேண்டும். துரோகத்திற்குச் சம்மதித்தாலே "காட்டுக்குப் போ' என்று சொன்னாள் அப்பன் சொன்னதுக்காகப் போனான் என்று திரித்துச் சொல்லுகிறான் பார்ப்பான் இன்றைக்கு! 

      இராமனும் அவனப்பனும் காட்டுக்குப் போகாமலிருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்தார்கள்! இராமனே சொல்கிறான், பரதனிடம்: ''உன் அம்மாவுக்கே இராச்சியம் சொந்தம்" என்று. சோமசுந்தர பாரதியார் "தசரதன் குறையும் கைகேயி நிறையும்'' என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதைப் படித்தால் தெரியும். இராமாயண ஊழல் பற்றிப் பேச ஒருநாள் போதாதே! 

     நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இப்படியெல்லாம் வெட்கம் இல்லாமலே எழுதியிருக்கிறானே என்றுதான் சொல்கிறேன். 

    வால்மீகி எழுதியபடி சீதையே இராவ ணன் பின்னாலே போயிருக்கிறாள் ! அவன் வந்தது தெரிந்தே இலட்சுமணனைப் போகச் சொல்லி வேலையிடுகிறாள். இராமாயணத் தில் வர்ணித்து எழுதியிருக்கிறான். "படுக்கை யெல்லாம் சிதறிக் கிடந்தது. சின்னா பின்னப்பட்டிருந்தது" என்று வால்மீகிப்படி இராவணன் சீதையை அவள் இஷ்டமில்லாமல் தொட்டிருக்க முடியாதே? இரண்டு சாபங்கள் இருக்கின்றன. வால்மீகி சாடை காட்டுகிறான். சாபம் ஞாபகத்துக்கு வந்து அவள் கூந்தலையும், தொடையையும் பிடித்துத் தூக்கினான் என்று! வால்மீகி ஒன்றையும் மறைக்காமலே எழுதியிருக்கிறான். நாங்கள் சொல்வதிலே பொய்யிருந்தால் பார்ப்பான் விட்டுவிடுவானா? உப்புக்கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்தி மாதிரி விழித்துக் கொண்டே நம்மை ஒழித்துக்கட்டப் பார்க்கிறானே? இராமன் ஓடித்த வில் முன்னாலேயே ஒடிக்கப்பட்டவில் என்கிறதற்கு அபிதான சிந்தாமணியில் 5 இடங்களிலே ஆதாரங்கள் இருக்கின்றன. 

 (5.7.1957 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி)

விடுதலை - 14.7.1857

Read 59 times