Print this page

உதிர்ந்த மலர்கள் (குடி அரசு - பொன்மொழிகள் - 18.05.1930)

Rate this item
(0 votes)

1. கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.

2. கடவுள் ஒருவர் உண்டு அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்த்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக் கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தான் இச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிரரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன். பார்ப்பன பிரசாரம்

 

3. ஆழ்வார்கள் கதைகளும் நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரசாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப்பட்டதாகும்.

4. புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

5. வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால் அவர்கள் படித்தது எல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பையுமேயாகும். ஆகவே பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதிகளாவார்கள்.

 

6. எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போலாகும்.

7. நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மிடம் வந்து நானும் சுயமரியாதைக் காரன் தான் என்னிடம் மூடப்பழக்க வழக்கம் கிடையாது புராணங்களெல்லாம் பொய் என்றும் சமயங்களெல்லாம் ஆபாசம் என்றும் பேசி மேடையில் இடம் சம்பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு புராண பிரசாரத் தையே செய்பவர்களாயிருக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால் பண்டிதர்களை கிட்ட சேர்க்கும் விஷயத்தில் வெகு ஜாக்கிறதையாகயிருக்க வேண்டும்.

- ஈ.வெ.ரா.

(குடி அரசு - பொன்மொழிகள் - 18.05.1930)

 
Read 60 times