Print this page

உதிர்ந்த மலர்கள் (குடி அரசு - துணுக்குகள் - 04.05.1930)

Rate this item
(0 votes)

1. பரம், ஆத்மார்த்தம், விதி, அல்லது கடவுள் செயல் - என்று சொல்லப்படும் இம்மூன்றையும் அழிக்க தைரியமும் சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள்.

ராஜ வாழ்த்தும் கடவுள் வாழ்த்தும் மனிதனின் அடிமைத்தனத்திற்கு அஸ்திவாரக் கல் நடுவதாகும்.

 

2. திரு. காந்தியவர்கள் தனது சத்தியாக்கிரகம் தோல்வியுற்றால் “இந்தியா விடுதலை பெற கடவுளுக்கு விருப்பமில்லை போல் இருக்கின்றது” என்று ஒரு வார்த்தையில் ஜனங்களுக்கு சமாதானம் சொல்லி விடுவார். அல்லது உண்மையில் அப்படியே அவர் நினைத்தாலும் நினைப்பார்.

3. தொட்டதெற்கெல்லாம் கடவுள் செயல் கடவுள் செயல் என்று சமாதானம் சொல்லுகின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள் அல்லது தங்கள் தவறுதல்களை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள்.

 

4. எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப்பட்டாய் விட்டது. அவைகள் ஒவ்வொன்றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாய் விட்டது.

குரங்குப் பிடியாய் இவற்றைப் பிடித்துக் கொண்டு சமய ஞானம் பேசுகின்றவர்களிடம் காலத்தைக் கழிப்பது வீண் வேலையாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குப் போய் கொண்டேயிருக்கிறார்கள்.

மண்ணையும் சாம்பலையும் குலைத்து பூசுவதே சமயமாய் விட்டது.

5. பார்ப்பானுக்கும், பாளாண்டிக்கும் அழுவதே தர்மமாகி விட்டது.

கூடா ஒழுக்கங்களும், அண்டப் புரட்டுகளும், ஆகாயப் புரட்டுகளும் நிறைந்த புராணக் குப்பைகளைத் திருப்பித்திருப்பிப் படிப்பதே காலட் சேபமாகி விட்டது.

ஒழுக்கத்தினிடத்திலும், சத்தியத்தினிடத்திலும் மக்களுக்குள்ள கவலையே அடியோடு போய் விட்டது.

வலிவுள்ளவன் வலிவில்லாதவனை இம்சிப்பதே ஆட்சியாய் விட்டது.

பணக்காரன் யேழைகளை அடிமைப் படுத்துவதே முறையாய் விட்டது.

தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவதே வழக்கமாய் விட்டது.

அயோக்கியர்கள் யோக்கியர்களை உபத்திரவப்படுத்துவதே நீதியாகி விட்டது.

வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திர சாலியாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமே இல்லாமல் போய்விட்டது.

இவைகளை சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?

இதனால் கலகம் உண்டாகுமானால் அதற்காகப் பின் வாங்க வேண்டுமா?

திருந்தினால் திருந்தட்டும், இல்லாவிட்டால் அழியட்டும் என்கிற இரண்டிலொன்றான கொள்கையிலேயே இறங்கி இருக்கின்றோம்.

மானங் கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டுவதில்லை.

- ஈ.வெ.ரா.

(குடி அரசு - துணுக்குகள் - 04.05.1930)

 
Read 55 times