Print this page

சென்னையில் நிரபராதிகள் கொல்லப்பட்டனர் (குடி அரசு - செய்தி விமர்சனம் - 04.05.1930)

Rate this item
(0 votes)

திரு.காந்தியின் உப்பு சத்தியாக்கிரக குழப்பத்தின் பயனால் பல நிரபராதிகள் போலீசாரால் அடிபட்டும், சுடப்பட்டும் கஷ்டப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும் நாம்மிக்க துக்கத்துடன் அநுதாபப்படுகின்றோம்.

இம்மாதிரியான சம்பவங்களில் சர்க்கார் தங்களுடைய புத்திசாலித்தனத்தை உபயோகித்துத் தக்க பொருப்பு எடுத்து நிரபராதிகளுக்குத் துன்பம் நேராமல் படிக்கு இயக்கத்தைச் சமாளிக்காமல் வெரும் துப்பாக்கி பலத்தையும், தடிப்பலத்தையும் கொண்டே அடக்க நினைத்ததானது கவலையற்ற தன்மை என்பதும், கடமையைச் சரியாய் உணராத தன்மை யென்பதும் நமது அபிப்பிராயம்.

 

இச்சம்பவத்திற்கு தேசீயவாதிகள் சர்க்காரை கண்டபடி வைது விடுவதினாலேயே பரிகாரம் தேடிவிட்டவர்களாகி பெரிய பெரிய தேசீய வாதிகளாகி விடலாம். சர்க்காராரும் சட்டத்தையும் அமைதியையும் காப்பாற்றுவதற்கு இதைவிட வேறு மார்க்கங்கள் பயன்படாமல் போய்விட்டது என்று சொல்வதினாலேயே “சர்வ வல்லமையுள்ள” அரசாங்கத்தாராகி விடலாம்.

இந்த இரண்டினாலும் கஷ்டப்பட்ட - மாண்ட - பரிகொடுத்த நிரபராதிகளான மக்களுக்கு என்ன சமாதானம் ஏற்படும் என்று கேட்கின்றோம்?

அரசியல் சாமார்த்தியம் இல்லாமல் இம்மாதிரியாக நிரபராதிகள் கஷ்டப்படும்படி தடியையும். துப்பாக்கியையும் உபயோகிப்பதின் மூலமே சட்டத்தையும் சமாதானத்தையும் காப்பாற்றுவது இன்றைய அதாவது 20வது நூற்றாண்டின் அரசியல் முறையானால் - அதிலும் நாகரீகம் பெற்று முன்னணியில் நிற்கும் மக்களின் அரசாட்சி முறையானால் மனுராஜ்யத்தையும், ராமராஜ்யத்தையும், கூன்பாண்டியன் ராஜ்யத்தையும் நாம் எப்படி குற்றம் சொல்ல முடியும்? என்று கேட்கின்றோம்.

ஆகவே சர்க்காரார் இதற்கு என்ன தான் சமாதானம் சொல்லுவதானாலும் தங்கள் கடமையைச் சரியான படி சரியான காலத்தில் செலுத்தவில்லை என்பதே நமது அபிப்பிராயம்.

(குடி அரசு - செய்தி விமர்சனம் - 04.05.1930)

 
Read 62 times