Print this page

கடவுளை மறுக்க அறிவு ஆராய்ச்சி தேவை. விடுதலை - 24, 25.11.1050

Rate this item
(0 votes)

சென்ற மாதம் 30-ஆம் தேதி நான் கும்பகோணம் நிதி அளிப்புக் கூட்டத்தில் பேசுகையில் நான் ஒரு கடவுள் உண்டு என்றும், அதனை கும்பிடும்படிக் கூறினேன் என்றும் எல்லா பத்திரிகைக்கார அயோக்கியர்களும் பத்திரிகையில் முக்கியத்து வம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள். 'மெயில்' போன்ற பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகள்கூட இந்த அயோக்கியத்தன மான வேலையைச் செய்து உள்ளது. 'ஆனந்த விகடன்' காட்டூன் போட்டு உள்ளான். "கண்ணீர்த்துளி" (கண்ணீர்த் துளி என்றால், தி.மு.க.வைக் குறிப்பிடுகிறது.) பத்திரிகை ஒன்று, 'அண்ணா பாதையில் பெரியார்'' வந்து விட்டார் என்று ஈனத்தனமான முறையில் சேதி வெளியிட்டுள்ளது. ''கண்ணீர்த் துளிகள்'' அதுவரை ஒரு கடவுள் உண்டு என்று கூறினார்க ளாம்! நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம்! இன்றுதான் தவறை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கின்றேனாம்! பத்திரிகைகாரன்களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கி யனாகத்தான் ஆகிவிடுகின்றான்.

 நானும் மானங்கெடத்தான் இவர்களைப்பற்றிப் பேசுகின் றேன். ஒருவனுக்காவது மான ஈனத்தைப்பற்றிய கவலையே இல்லையே. நான் கும்பகோணத்தில் என்ன பேசினேன். நான் இங்கு குறிப்பிட்டது போலத்தான் அங்கும் கடவுள், மதம் இவை பற்றிப் பேசினேன.

நம் மக்கள் கடவுள், மதம் இவை பற்றிய முட்டாள்தனங் களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும். உங்களுக்கு கடவுள் இருந்தாக வேண்டுமென்று எண்ணுவீர்களே யானால் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனது இயக் கத்தைச் சார்ந்த எங்கள் தோழர்களுக்கெல்லா மும் கடவுள் நம்பிக்கை கிடையாது.

அதுபோலவே நீங்கள் இருந்தாக வேண் டும் என்று நான் என்றும் கட்டாயப்படுத்த வரவில்லை. கடவுள் இல்லையென்றுகூற, அதன்படி நடக்க ரொம்ப அறிவு வேண்டும், தெளிவுவேண்டும். எப்படி இல்லை? என்று எந்தவிதக் கேள்விகள் கேட்டாலும் தெளிவுபடுத்தக்கூடிய முறையில் அறிவாற்றல், ஆராய்ச்சி வன்மை வேண்டும். 

இவையெல்லாம் நம் மக்கள் எல்லோரிடமும் இருக்கின்ற தென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடவுள் இருக்கின்றது என்று கூற அறிவு தேவையில்லை. சுத்தமடையன், அடிமுட் டாள்கூட கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்கலாம். அறிவுக்கு வேலையே இல்லை, அப்படி கடவுள் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற நீங்கள் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்; உலகத்தில் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து இருப்பது போலாவது நடந்து கொள் ளுங்கள் என்றுதான் விளக்கம் சொன்னேன். 

இன்று உலகில் 250 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் 100 கோடி மக்களுக்குக் கடவுள் கிடையாது. ரஷ்யாக்காரர்கள் 20 கோடிப் பேர்கள். அவர்கள் கம்யூனிஸ்டுகள்; அவர்களுக்குக் கடவுள் இல்லை. பைபிளைக் கையில் எடுத்துக் கொண்டு வீதியில் நடப்பதுகூட குற்றம். சீனாக்காரன் 40 கோடிப் பேர். அவர்களுக்குக் கடவுள் இல்லை . ஜப்பானியர் 8 கோடி, சயாமில் ஒன்றரை கோடி, பர்மாவில் இரண்டு, இரண்டரை கோடி மற்றும் திபேத், சிலோன் ஆகிய நாட்டில் வாழும் மக்களுக்கெல்லாம் கடவுள் இல்லை. இவர்கள் எல்லாம் பவுத்தர் கள், அவர்களுக்கு கடவுள் கிடையாது. மற்றபடி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் ஏராளமான அறிவாளி கள், நாஸ்திகக் கருத்து உடையவர்களாக இருக்கின்றார்கள். இப்படி கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் ஏறக்குறை 100 கோடிக்குக் கம்மியில்லாமல் உள்ளார்கள். 

அதுபோலவே கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஏறக்கு றைய 120 கோடிக்குமேல் உள்ளார்கள். கிறிஸ்துவர்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் உலகத்தில் 60, 65 கோடிக்குமேல் உள்ளார்கள். அதுபோ லவே முஸ்லீம் மக்கள் 40, 45 கோடிக்கு மேல் உள்ளார்கள். இதையல்லாமல் இந்துக் கள் என்று கூறப்படுகின்ற நம் காட்டுமிராண் டிகள் இந்த நாட்டில் ஏறக்குறைய 25 கோடிக்குமேல் உள்ளோம். இவர்களை

நான் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் என்ற கணக்கில் சேர்க்க வில்லை . இவர்கள் கிறிஸ்துவர், முஸ்லீம்கள் தங்கள் கடவு ளுக்கு இலக்கணம் வகுத்து வரையறைப்படுத்தி இருப்பது போல் இல்லாதவர்கள்; தெளிவில்லாக் காட்டுமிராண்டிக் காலத் துக் கடவுள் கொள்கையையே கைக் கொண்டு ஒழுகுபவர்கள். 

 எனவே, உலகத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை விட கடவுள் நம்பிக்கை உடையவர்களே அதிகமாக உள்ளார்கள். உங்களுக்கு ஒரு கடவுள் வேண்டுமானால் இப்படி பெரும் பகுதியான மக்கள் கொண்டுள்ள மாதிரியாவது வைத்துக் கொண்டு தொலையுங்களேன்.

 முஸ்லீமும், கிறிஸ்துவனும் கடவுளை எப்படி வைத்துள் ளான்? கடவுளுக்கு என்ன இலக்கணம் வகுத்துள்ளான்? ஒரே கடவுள், அவர் உருவமற்றவர், பிறப்பு இறப்பு இல்லாதவர், விருப்பு வெறுப்பற்றவர், மக்களிடம் எதையும் எதிர்பார்க்கதவர், ஒன்றும் வேண்டாதவர், அருளானவர், அன்பானவர். அவரை வணங்க ஒரு காசும் செலவு செய்ய வேண்டியதில்லை. இப்படித் தானே கிறிஸ்துவனும் முஸ்லீமும் தம் கடவுளின் இலக்கணத்தை வகுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், நீ வணங்கும் கடவுள் இப்படி கிறிஸ்துவனும் முஸ்லீமும் சொல்லுகின்ற மாதிரி எந்த ஓர் இலக்கணத்தையாவது கொண்டி ருக்கின்றதா? கிறிஸ்துவனும் முஸ்லீமும் ஒரே கடவுள் என்கிறான். அப்படிக் கூறத்தக்க முறையில் உன்னிடம் கடவுள் உள்ளதா?

 சிவன், விஷ்ணு, பிரம்மா, பிள்ளையார், சுப்ரமணியன், அவர்கள் பெண்டாட்டிகள், பிள்ளை குட்டிகள், வைப்பாட்டி கள்; இது மட்டுமா! மாடு, கழுகு, காக்கை, குரங்கு, பாம்பு, வேப்பமரம், அரசமரம் இதெல்லாம் கடவுள்கள் ! குப்புறக்கிடக் கும் கல்லை நிமிர்த்தி வைத்தால் அதெல்லாம் கடவுள்கள் ! எங்களது பிரச்சாரம் இல்லாவிட்டால் ரோட் டில் உள்ள மைல்கற்கள், பர்லாங்குக் கற்கள் எல்லாவற்றையும் கூட இந்தப் பார்ப்பனர் கள் கடவுளாக்கி இருப்பார்கள். எழுத்துக் களை அழித்துவிட்டு அதற்கு நாமத்தையோ பட்டையையோ போட்டுவிட்டு இது மைல் ஈஸ்வரர், இது பர்லாங்கு ஈஸ்வரர், விழுந்து கும்பிடுங்கள் என்றால் மூடமக்கள் 

கும்பிடாமலா இருப்பார்கள்? அதற்கு மூன்று மூன்று காசு வைத்து விழுந்துதானே கும்பிடுவார்கள்?

கிறிஸ்துவனும் முஸ்லீமும் கடவுள் உருவம் அற்றவர் என் கின்றனர். உன் கடவுளுக்கு எத்தனை உருவம்? மீன் உருவம், கழுகு உருவம், குரங்கு உருவம், பன்றி உருவம், காக்கை உருவம், உடல் மனிதன் மாதிரி தலை யானையாகவும், தலை மனிதன் மாதிரி உடல் மாடாகவும், மீனாகவும், புலியாகவும், பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றிய மாதிரி இப்படி கணக்கற்ற வகைகளில் தான்தோன்றித்தனமாகவே எல்லாம் உள்ளது!

துணி கட்டத் தெரியாத சின்ன குழந்தைகள் மண்ணில் மூத்திரத்தைவிட்டுப் பிசைந்து அதை கொட்டாங்குச்சியில் போட்டு அடித்து எடுத்து இது இட்டிலி, இது தோசை, இது வடை, இரு பெண்ணு, இது மாப்பிள்ளை என்று விளையாடும் விவரம் அறியாத குழந்தைகளுக்கும், இப்படி கடவுள் விளை யாட்டு விளையாடும் வேட்டி புடவை கட்டிய வயதுவந்தவர்க ளுக்கும் என்ன வித்தியாசம் காண முடியும்? 

கிறிஸ்துவனும் முஸ்லிம் கடவுள் பிறக்காதவர், சாகாதவர் என்கின்றனர். இப்படிக் கூறுகின்ற முறையில் உன்னிடத்தில் எந்தக் கடவுளாவது இருக்கிறதா? விரலை விடுங்களேன் பார்ப்போம்! 

உன்னுடைய கடவுள்கள் அத்தனையும் பிறந்தவைகள்; தாய் தந்தையர்களுக்குப் பிறந்தது மட்டுமல்லாமல், இயற்கைக்கு மாறாகவெல்லாம் பிறந்து இருக்கின்றன! முக்கிய கடவுள்கள் என்று கூறப்படும் சிவன், விஷ்ணு, பிரம்மா, சுப்பன், பிள்ளை யார் இவர்கள் யார் யாருக்கு பிறந்தவர்கள் என்பது பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. ஒரு புராணத்தில் சிவன், விஷ்ணுவைப் பெற்றான் என்றும், இன்னொரு புராணத்தில், விஷ்ணு, சிவனைப் பெற்றான் என்றும், இந்த விஷ்ணு, சிவன் இருவரையும் பிரம்மா பெற்றான் என்றும், சிவனும், விஷ்ணுவும் பிரம்மாவைப் பெற்ற னர் என்றும் இப்படி தகராறாகவே உள்ளது.

கடவுளுக்கு ஜாதகங்கள் வேறல்லவா ஏற் படுத்தியுள்ளனர்! ராமன் நவமியில் பிறந் தான், கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான், சுப்ரமணியன் சஷ்டியில் பிறந்தான், சிவன் திருவாதிரையில் (ஆருத்திராவில்) பிறந்தான், 

பிள்ளையார் சதுர்த்தியில் பிறந்தான் என்று ஜாதகங்கள் வேறு வைத்திருக்கின்றீர்கள். உற்சவம் வேறு அது அதற்குக் கொண்டாடுகின்றாகள்.

இப்படி பிறந்த உங்கள் கடவுள் எல்லாம் செத்தும் இருக்கின்ற னவே. கிருஷ்ணன் காட்டிலே யாரோ ஓர் வேடன் எறிந்த அம்பு காலில் பட்டு புண்ணாகி புழுபுழுத்துச் செத்திருக்கின் றான். ராமன் தன் அந்நிய காலத்தில் சரயூ நதியில் விழுந்து இறந்திருக்கின்றான்! இல்லையென்று எவரும் சொல்ல முடி யாதே - கிருஷ்ணன் செத்ததை பாகவதத்திலும், ராமன் செத்ததை ராமாயணத்திலும் பார்த்தாலே தெரியம் !

மற்றவன் கடவுள் எல்லாம் வல்லவர் என்கின்றான். ஆனால், உன் கடவுள் அப்படியா? ஒரு கடவுள் இன்னொரு கடவுளை நோக்கித் தவம் பண்ணி இருக்கின்றது. ஒரு அவதாரம் இன் னொரு அவதாரத்துடன் சண்டையிட்டு இருக்கின்றது. உதை வாங்கி இருக்கின்றது, சாபம் பெற்று இருக்கின்றது. கண்டவன் மனைவியைப் பிடித்திழுத்து உதை தின்னு இருக்கின்றது. இதுவா சர்வ வல்லமை படைத்த கடவுளின் லட்சணம்? 

(வியாசர்பாடி, தர்மபுரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் - 1959-ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரைகளில் ஒரு பகுதி)

விடுதலை - 24, 25.11.1050

Read 40 times