Print this page

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.01.1930)

Rate this item
(0 votes)

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் 27 ² நடைபெறக் கூடும் என்று தெரியவருகின்றது. அத்தேர்தலில் நமது நண்பரும் சுய மரியாதை இயக்க சங்கத்தின் உப தலைவருமான ராவ்பகதூர் உயர்திரு. எ. டி. பன்னீர் செல்வம் அவர்களே அநேகமாய் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கின்றோம். ஆயினும் அவரது வெற்றிக்கு விரோதமாய் ஒரு உணர்ச்சிமிக்க முயற்சியாய் வேலை செய்து வருவதாயும் தெரியவருகின்றது.

திரு. செல்வம் அவர்கள் வெற்றிக்கு விரோதமாய் வேலை செய்கின்ற உணர்ச்சிக்கு நியாயமான தகுந்த காரணங்கள் ஏதாவது இருந் தாலும் இருக்கலாம். ஆயினும் நாம் திரு. செல்வம் அவர்கள் வெற்றியையே மன, மொழி, மெய்களால் கோர வேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.

 

ஏனெனில், பொதுவாக தஞ்சை ஜில்லா பொதுமக்களைப் பொறுத்த வரையி லும் குறிப்பாக பார்ப்பனரல்லாதார் நன்மையைப் பொறுத்த வரையிலும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைப் பொறுத்த வரையிலும் திரு எ. டி. பன்னீர் செல்வம் அவர்களே தஞ்சை ஜில்லா போர்டுக்கு இது சமயம் மறுபடியும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியமான தென்பதே நமது அபிப்பிராயமாகும்.

அன்றியும், இந்த அபிப்பிராயத் தையே தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கத்தில் பற்று கொண்ட சில செல்வந்தர்களும் ஆயிரக் கணக்கான தொண்டர்களும் கொண்டுள்ளார்கள்.

 

தவிர, பார்ப்பனரல்லாத சமூகப் பிரமுகர்களில் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட்ட பொறுப்பும் நாணயமும் அற்ற சிலர் தங்கள் சுயநலம் காரணமாக ஒருவரை ஒருவர் கெடுக்க எண்ணியதும் அதனால் ஒருவருக்கொருவர் தற்காப்பிற்கு பத்திரங்கள் தேடிக்கொள்ள ஏற்பட்டதுமான காரியங்களால் இனி தென்னாட்டில் நடந்தேறும் ஒவ்வொரு தேர்தல்களிலும் நியமனங்களிலும் இவ்விதமான எதிர்ப்புகளையும் தொல்லைகளையும் எதிர்பார்த்துத் தீரவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதைக் குறித்து நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை.

அன்றியும் இந்நிலைமை காரணமாக பார்ப்பன ஆதிக்கத்தை மறுபடியும் வளர்க்க ஒருவருக்கொருவர் போட்டி போடுவதைப் பார்த்து நாம் வெட்கப்படாமலிருக்கவும் முடிய வில்லை.

நெல்லூர் மகாநாடானது எப்படியோ நமக்கு இந்நிலைமையை அளித்து விட்டது. நம்மைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாத சமூகத்திற்குள் ஜஸ்டிஸ் கட்சி என்பவர்களிடமிருந்தாவது அதற்குள் ஏற்பட்ட உள் கட்சியாகிய ஒழுங்கு முறைக்கு உட்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் என்பவரிடமிருந்தாவது மந்திரி கட்சியாரிடமிருந்தாவது மற்றும் இவைகளின் சார்புக் கட்சியாரிடமிருந்தாவது அவரவர்கள் கட்சிக் கொள்கைகள் முழுமையுமோ, அல்லது, அதிலுள்ளவர்களின் நடத்தைகள் முழுவதையுமோ அடியோடு ஒப்புக் கொண்டு நாம் அதில் கலந்திருக்கவில்லை என்பதையும் அல்லது வேறு எந்த விதமான சுயநல லட்சியத்தைக் கொண்டோ அல்லது யாருக் காவது பயந்தோ நாம் அவற்றை ஆதரிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆனால் நமது சுயமரியாதைக் கொள்கைகளுக்கு மற்ற கட்சியார் மற்ற ஸ்தாபனங்கள் ஆகியவைகளை விட இவைகள் எத்த னையோ மடங்கு மேலானது என்பதாகவும், வசதியுள்ளது என்பதாகவும் கருதி நமது இயக்கத்தின் நன்மையை உத்தேசித்தே நாம் அவற்றில் களங்கமறக் கலந்திருந்ததுடன் கூடுமானவரை ஒத்துழைத்தும் வந்தோம்.

எனவே, இந்த முறையில் தான் தஞ்சை ஜில்லா போர்டு தலைமைப் பதவியானது திரு பன்னீர் செல்வம் கையை விட்டுப் போக நேருமானால் கண்டிப்பாய் அது பார்ப்பன ஆதிக்கத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுமே அல்லாமல் மற்றப்படி அதற்கு இடையில் வேறு இடமில்லை என்று கருதுவதுடன் திரு. பன்னீர் செல்வம் தோல்வியானது பார்ப்பனரல்லாத மக்கள் தோல்வியாகுமென்றும் கருதுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.01.1930)

 
Read 57 times