Print this page

ஈரோடு உண்மை நாடுவோர் சங்கம் மதம் மாறுதல் (குடி அரசு - சொற்பொழிவு - 20.10.1929)

Rate this item
(0 votes)

சரஸ்வதி பூஜை

தலைவரவர்களே! சகோதரர்களே! இன்று மூன்று விஷயங்களைப் பற்றி பேச நான் தலைவரால் கட்டளை இடப்பட்டிருக்கின்றேன். ஒன்று சீலையம் பட்டியில் 69 பேர்கள் மகம்மதியரானது, இரண்டு சரஸ்வதி பூஜை, மூன்று நெல்லூர் மகாநாடு.

முதலாவது விஷயமாகிய ஆதிதிராவிடர்கள் மதம் மாறி மகம்மதியரான விஷயத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகின்றேன்.

 

முதலில் மத சம்பந்தமான என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், எந்த மதமானாலும் அதன் கொள்கைகள் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராய முடையவையானாலும் அம் மதமும் கொள்கைகளும் மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கைக்கு அவனுடைய பிரத்தியட்ச அனுபவத்திற்காக வகுக்கப்பட்ட கொள்கைகளுடையவைகள் என்றால் அதைப் பற்றி யோசிக்க நான் எப்போதும் தயாராயிருக்கின்றேன்.

அப்படிக்கின்றி மதமும் அதன் கொள்கைகளும் “மேல் லோகத்திலோ” அல்லது “கீழ் லோகத்திலோ” அல்லது செத்த பிறகு “சூட்சும” சரீரத்துடனேயோ அனுபவிக்கும் அனுபவத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டது என்றால், அது எப்படிப்பட்ட மதமானாலும் யார் செய்ததானாலும் அதற்கு என்ன ஆதாரம் சொல்லுவதானாலும் அதனால் என்ன விளைவதானாலும் நான் அதைக் கடின நேரம் கூடத் திரும்பிப் பார்க்கமாட்டேன்.

 

இது விஷயத்தில் என்னைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் எனக்கு அதைப் பற்றி கவலையில்லை, ஏனெனில் இந்தப்படி நினைப்பதற்கு எனக்குப் பூரண சுதந்திரம் இருக்கின்றது என்று நினைத்திருகிறேன்.

அதோடு எந்த லோகத்திலானாலும் இந்த உலக வாழ்க்கை அனுபவத்திற்கு விபரீதமான பலன் இருக்க முடியாதென்றுங் கருதுகின்றேன். இதை அனுசரித்தே தான் இவ்வாரத்தில் சீலையம்பட்டியில் 69 பேர்கள் மகமதியரான விஷயத்தைப் பற்றி எனது மகிழ்ச்சியை தெரிவிக்க சில வார்த்தைகள் பேசப் போகின்றேன், சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் மகம்மதியர்களாகி விட்டதால் அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு “மோட்சலோகம்” கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ “கடவுளோடு கலந்துவிட்டார்கள்” என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை.

 

இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்கள் நம்பும்படி சொல்வதும் இல்லை. அன்றியும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாச முண்டென்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.

எந்த மதக்காரனாயிருந்தாலும் தனது செய்கைக்குத் தகுந்த பலன் ஒன்றாகவேதான் இருக்கும். இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும் மகம்மதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும் மதத்தின் காரணமாகக் கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை.

உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூடநம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. ஆகையால் பாவபுண்ணியத்தையும் மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை மற்றென்னவென்று கேட்பீர்களேயா னால் இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாக சொல்லப்படும் 69- ஆதிதிராவிடர்களும் பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு பாமரத்தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

 

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களை பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூறமுடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி’ ‘சாமி’ ‘புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை.

மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல் குடிக்க தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான் நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும் கரடி போல் மயிர் வளர்த்துக் கொண்டும் பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழ வேண்டியதில்லை. இனி எந்த பொது தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மதசம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போகத் தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

இவ்வளவையும் விட, இனி அவர் கல்லையும், செம்பையும், கூடை யையும், முறத்தையும்; விளக்குமாற்றையும் கடவுள் என்று வணங்க வேண்டியதில்லை.

 

மற்றும், அவர்கள் பாடுபட்டுச் சம்பாதித்த சிறிது பணத்தையும் கடவுளுக்கென்றும், கல்லுக்கென்றும் கருமாதிக்கென்றும் செலவு செய்யவேண்டியதில்லை. எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும் அறிவு வளர்ச்சித் தடையிலும் சமூக இழிவிலும் சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்கு குறைவிலிருந்து ஒருவாறு விடுதலை அடைந்துவிட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை.

ஏனெனில், தீண்டாமை நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

இம்மாதிரி சுமார் ஆயிரம் வருஷங்களாக நினைத்துக் காரியத்தில் நடந்த பெரியவர்கள்தான் இன்றைய தினம் இந்தியாவில் 8 கோடி மகமதியர்களாகவும் ஒரு கோடி கிறிஸ்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு மகம்மதியர்களும் கிறிஸ்தவர்களும் எங்கிருந்து வந்தார்கள்? இந்த எண்ணிக்கையை பார்த்து பயந்தே நானும் திருவாளர்கள், தங்கபெருமாள், ஈஸ்வரன், மாரியப்பன் முதலியவர்களும் கோயம்புத்தூர் ஜெயிலிலிருக்கும் போதே ஜெயிலில் இருந்து விடுதலையானதும் தீண்டாமையை அடியோடு ஒழித்து விடுவதுடன் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்குப் போனவர்களை எல்லாம் திரும்பவும் இந்துக்களாக்கும் முயற்சியில் வேலை செய்வது என்று முடிவுகட்டிக் கொண்டு வந்தோம்.

நாங்கள் வெளிவந்ததும் திரு.காந்தி கைது செய்யப்பட்டு சிறைசென்று விட்டதால் இந்த சமயத்தில் ஒத்துழையாமை விட்டுப் போகக் கூடாது என்று சில பார்ப்பனத் “தலைவர்கள்” கேட்டுக் கொண்டதால் மறுபடியும் காங்கிரஸ் வேலையை செய்தோம்.

 

பிறகு “குருகுல நடவடிக்கையையும் அது சம்பந்தமாக பார்ப்பனத் தலைவர்கள் மனப்பான்மையையும் அவர்களது உள் எண்ணத்தையும் தெரிந்த பிறகு “இந்து” மதமே அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்துவிட நேர்ந்தது.

அதன் பேரில் இந்து மதத்தை விட்டாலும் பிறகு தங்களுக்கு ஏதாவது ஒரு மதம் இருந்துதான் தீர வேண்டு மென்று கருதும் மக்களுக்குக் கிறிஸ்துவ மதத்தை சிபார்சு செய்யலாமா? மகம்மதிய மதத்தைச் சிபார்சு செய்யலாமா என்று கருதி யோசித்து பார்த்தேன்.

கடைசியாக கிறிஸ்தவ மதமும் நமது நாட்டில் நான் பார்த்தவரை அதுவும் மற்றொரு பார்ப்பனீய மதமாகவே காணப்பட்டது. கிறிஸ்துவ மதப் பிரசாரத்தின் கருத்தெல்லாம் அரசியல் விஷயத்தை அடிப்படையாகவும், அந்தரங்க லட்சிய மாகவும் கொண்டு செய்யப்படுகின்றதே ஒழிய மக்கள் சமத்துவத்தையோ ஒற்றுமையையோ கொண்டதாகத் தெரியவில்லை என்கின்ற முடிவிற்கு வரவேண்டியதாயிற்று.

எப்படியென்றால் இன்றைய தினமும் கிறிஸ்துவ மதத்தில், ‘பறக் கிறிஸ்தவன்’, ‘சக்கிலிக் கிறிஸ்தவன்’, ‘வேளாளக் கிறிஸ்தவன், ‘உடையார் கிறிஸ்தவன்’, ‘நாயுடு கிறிஸ்தவன்’, ‘நாடார் கிறிஸ்தவன்’, ‘பார்ப்பனக் கிறிஸ்தவன்’ என்கின்ற பாகுபாடுகளும் குடியிருப்பு வசதி வித்தியாசங்களும் சர்ச்சு முதலிய பிரார்த்தனை இடங்கள் வித்தியாசம் காணப்படுவதைப் பார்த்தால் நன்றாய் தெரியவரும்.

ஆகையால் மகம்மதிய மதத்தை தழுவுவதினால் தான் தீண்டாதவர்களுக்கு இதுசமயம் சீக்கிரத்தில் உடனேயே சமூக சமத்துவத்தை அளிக்க முடியும் என்று கருதுகிறேன். இந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் எவ்வளவோ பாடுபட்டு பார்த்தேன்.

 

ஈரோடு தேவஸ்தானத்தில் சகல இந்துக்களுக்கும் கோயில் நுழைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதின் பேரில் சில மேல் ஜாதிக்காரர்கள் என்பவர் களும், வெள்ளைக்கார அதிகாரிகளும் பார்ப்பன அதிகாரிகளும் கொண்ட மாதிரியானது எனக்குத் தீண்டப்படாத மக்களுக்கு சமத்துவம் கொடுப்பதற்கு அவசரமாய் இதைவிட வேறு வழியில்லை என்கின்ற முடிவு ஏற்படுத்தச் செய்துவிட்டது. நமது நாட்டில் ஜாதி வித்தியாசம் ஒழியவும் சமத்துவம் ஏற்படவும் வெள்ளைக்காரர்களும் சிறப்பாக பாதிரிமார்களும் சுலபத்தில் சம்மதிக்கமாட்டார்கள்.

ஆகையால் தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும் ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்து உள்ளவர்களுக்கும் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்து உள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை முதலில் தீண்டப்படாதவர்கள் மகம்மதியாராவதை ஆnக்ஷபியாதிருப்பதேயாகும் என்பது எனது தாழ்மையானதும் கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க, சிலர் மகம்மதிய மதம் முரட்டுச் சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதியிருக்கிறார்கள். அது வாஸ்தவமானால் தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய மகமதிய மதத்தை சிபார்சு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்று கருதுகிறேன்.

இப்பொழுது நமது தீண்டப்படாதவர்கள் தங்கள் தீண்டாமை நிலை நிற்கும்படி தாங்களாகவே அளவுக்கு மீறி ஒடுங்குகிறார்கள். காலில் விழுந்து கும்பிடுகிறார்கள்.

அடிக்க அடிக்க ஓடுகிறார்கள். கீழ்ப்படியவே தங்களை கடவுள் பிறப்பித்திருப்பதாய் கருதுகிறார்கள்; எவ்வளவு திட்டினாலும் ரோஷப்படுவதே இல்லை; கோபிப்பதேயில்லை; “முரட்டு சுபாவம் இல்லாத இந்துமதம்” இவர்களை இப்படிச் செய்துவிட்டதால் தங்களைப் பிறர் இழிவுபடுத்துவது தங்களுக்குத் தெரிவதில்லை.

ஆதலால், மகம்மதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால் அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மை யாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற் படும் அல்லவா? அன்றியும், மகம்மதியர்களைப் பற்றி இந்து மதத்தின் சார்பாய் இந்துக்கள் நினைத்துக் கொண்டிருந்ததென்னவென்றால், துருக்கியர் மிலேச்சரென்றும் மிக்க தாழ்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு ஆதாரமாய் இப்போதும் இந்து சாஸ்திரமும் நிகண்டும் இருக்கிறது. ஆனால், தீண்டப்படாதவர்களைப் போலவே மகம்மதியர்களும் ஒடுங்கி இருந்திருப்பார்களானால் இந்தியாவில் இந்திய தீண்டப்படாதார் 6 கோடியும், மகம்மதியர் தீண்டப்படாதார் 8 கோடியும் என்று சொல்ல வேண்டியதாய் இருந்திருக்கும்.

இப்போது அந்த நிலை மாறியிருப்பதற்கு மகம்மதியர்களின் முரட்டு சுபாவம் என்று சொல்லக் கூடாதானாலும், ஒடுங்க முடியாத, தாழ்மையையும் இழிவையும் ஒப்புக் கொள்ள இஷ்டமில்லாத தைரிய சுபாவம் என்றாவது சொல்லியாக வேண்டும்.

அந்த சுபாவம் இப்போதுள்ள தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு வந்துவிட்டால் கூடப் போதுமானது என்றும், மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லலாம். ஆனால் அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை சுலபத்தில் அவர்களுக்கு அந்த சுபாவம் வராது என்பதோடு மேல் வகுப்புக்காரர்கள் என்பவர்கள் சுலபத்தில் வர விடமாட்டார் கள் என்றே சொல்லுவேன்.

ஆகையால் இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும் வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் மகம்மதியர் ஆவதை தவிர வேறு மார்க்கமில்லையாதலால் நாம் அதை ஆnக்ஷபிக்க முடியாதவர் களாய் இருக்கின்றோம்.

தவிரவும், மதத்தினிடத்திலோ, இந்து சமூகத்தினிடத் திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதா யிருந்தால் அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கிருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன் வரட்டும்: அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன். மற்றபடி வீண் சோம்பேறி ஞானம் பேசிக் கொண்டிருப்பதனால், இனி யாதொரு நன்மையும் அடைய முடியாது.

அந்தக் காலம் மலையேறிவிட்டது. ஆதலால் ‘உண்மை நாடுவோர் சங்கத்’தின் இன்றைய கூட்டமானது சீலையம்பட்டியில் இந்துக்களில் உயர்ந்த வகுப்பார் என்பவர்களின் கொடுமையைச் சகிக்க மாட்டாமல், மகம்மதிய மதத்தை தழுவினதின் மூலம் தங்கள் இழிவிலிருந்து விலகிய 69 ஆதிதிராவிடர்களை மனமாரப் பாராட்டுகின்றது என்கின்ற தீர்மானத்தை நான் பிரேரேபிக்கின்றேன்.

பிறகு திருமதி. இலட்சுமி அம்மாள் அவர்கள் மகமதிய மதத்தில் பெண்களுக்கு உள்ள பெருமையையும் சுதந்திரத்தையும் எடுத்துச் சொல்லி ஆமோதித்தார்கள். மத்தியில் ஒருவர் மகம்மதிய மதத்தில் உள்ள கோஷா முறையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று ஒரு சீட்டு எழுதி அனுப்பினார்கள்.

அதற்கு திரு.ஈ.வெ. ராமசாமி தான் பதில் அளிப்பதாக முன் வந்து “கோஷா முறையை தான் ஒப்புக் கொள்ளுவதில்லை என்றும் சில படித்த மகம்மதிய கனவான்கள் கோஷா முறை குரானில் இல்லை என்று சொன்னார்கள் என்றும், தான் இங்கு குரானைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவரவில்லை என்றும், தனக்கு அதைப் பற்றி தெரியாது என்றும், இந்த நாட்டில் கோஷா இல்லாத மகம்மதிய பெண்கள் அநேகர் இருக்கிறார்கள் என்றும், மலையாளத்தில் 100-க்கு 75 மகம்மதிய பெண்களுக்கு கோஷா இல்லை என்றும், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் இந்த பக்கங்களில் காடுகளில் வேலை செய்வதைப் பார்த்ததாகவும் தனக்குத் தெரிந்தவரை கோஷா ஒரு அந்தஸ்தாக கருதப்படுகின்றதே தவிர முழுதும் மதக் கட்டளையாகக் கருதுவதாகச் சொல்ல முடியாது என்றும், இப்பொழுது அந்த மதத்தில் சேர்ந்த பெண்கள் கோஷாவாயில்லாவிட்டால் தள்ளிவிட மாட்டார்கள் என்றும், விதவாவிவாகம், கல்யாணரத்து, பெண்கள் படிப்பு, சொத்துரிமை ஆகியவைகள் பெண்களுக்கு அந்த மதத்தில் இருப்பதால் கோஷா ஒரு சமயம் இருந்தாலும் அந்த கஷ்டத்தை விட பல பங்கு மேல்பட்ட அதிக லாபமிருக்கின்றது என்றும், அன்றியும், துருக்கியைப் போலும் ஆப்கானிஸ்தானத்தைப் போலும் இங்கும் சமீபத்தில் சீர்திருத்தம் ஏற்படலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றதென்றும் சொன்னார். கரகோஷத்தினிடையே தீர்மானம் நிறைவேறியது.

Read 50 times