Print this page

வைதிகர்களின் இறக்கம் (குடி அரசு - கட்டுரை - 11.08.1929)

Rate this item
(0 votes)

பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவனையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது என்று சனாதன தருமத்தின் பேராலும், சாஸ்திரத்தின் பேராலும், கடவுளின் பேராலும் இதுவரை கண் மூடித்தனமாகக் கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாகப் புத்தி உதயம் ஆகி வருவதாகத் தெரிகிறது.

நமது சுயமரியாதை இயக்கத்தைப் பார்ப்பனர்களும் அவர்களுடைய கூலிகளும், “நாஸ்திக” இயக்கம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரசாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேகமில்லை. நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங்கள் செய்தும் போராடி வருவது எல்லாருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடி பெண்மக்கள் முன்னேற்றத்திற்கான சில தீர்மானங்கள் செய்திருக்கின்றனர். அவையாவன :-

1. அவிபக்தமாகவோ, விபக்தமாகவோ உள்ள நமது ஹிந்துக் குடும்பங்களில் சாஸ்திரியமாக விவாகம் செய்யப்பட்ட பெண்களுக்கு விவாக சமயத்திலிருந்து புருஷனது குடும்பச் சொத்திலும் அவனது ஸம்பாதனத்திலும் அப்படியே ஸ்திரிகளின் சொத்திலும் அவர்களின் சம்பாதனத்திலும் புருஷர்களுக்கு சமபாகமும், ஏற்படுத்துவதற்கு வேண்டிய முறையை நமது ஆரியர்கள் யாவரும் சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படுத்திக் கொள்ளுவது அவசியம்.

 

2. சாஸ்திரீயமாக விவாகம் செய்து கொண்ட பெண்ணைத் தகுந்த காரணமின்றித் தள்ளிவிட்டு மறு விவாகம் செய்பவரைச் சமூகப் பகிஷ்காரம் செய்வதற்கு வேண்டிய கட்டுப்பாட்டை அமைத்துக் கொள்ளுவது அவசியம்.

3. ஒரு குடும்பத்தில் புருஷர்களுக்குப் போலவே ஸ்திரிகளுக்கும் குடும்பச் சொத்தில் பாகம் கிடைக்குமாறு வழி தேட வேண்டும்.

4. ஒரு குடும்பத்தில் ஒரு பிதாவுக்கு ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்து பெண்ணுக்குக் கல்யாணமாகிப் புத்திரனுக்கு கல்யாணமாவதற்குள் பிதா முதலியோர் இறந்த சில நாளைக்கெல்லாம் அந்த ஆண்பிள்ளை இறப்பானானால் பிதா மூலம் கிடைத்த அவனது சொத்தும் ஸ்வார்ஜித சொத்தும் அவனது தாயாதிகள் அடைவது என்ற கெட்ட முறையை மாற்றி அவனது சகோதரியும், அவளது குழந்தைகளும் அனுபவிக்கும் படிக்கான முறையை ஏற்படுத்தி அதை அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.

ஆகவே இவ்வழியை ஆரியர் யாவரும் சமூகக் கட்டுப்பாடு மூலம் ஏற்படுத்திக் கொள்ளத் தவறினால் அதன் மூலம் ஸ்திரீகளுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்க வேண்டி நமது காருண்யக் கவர்ன்மெண்டாரை அவ்வழியில் கடுமையான சட்டமியற்றி அதை உடனே அனுஷ்டானத் துக்குக் கொண்டு வந்து ஸ்திரீகளைக் காக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களேயாகும்.

குறுகிய கால அளவில் இவ்வளவு தூரம் பெண் மக்கள் விஷயத்தில் வைதிகர்களின் விடாப்பிடியைத் தளரச் செய்த நமது சுயமரியாதை இயக்கம் இன்னும் கூடிய விரைவில் பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலியவற்றிற்கும் எவ்வித எதிர்ப்பும் நாட்டில் இல்லாமற் செய்து தக்க ஆதரவு தேடிவிடும் என்று உறுதி கூறுகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 11.08.1929)

 
Read 74 times