Print this page

தமிழ்நாடு மாகாண மகாநாடு (குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.07.1929)

Rate this item
(0 votes)

தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண்யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும், ஆடம்பரங்களும் நடைபெற்றன. தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926-ல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக்கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர்களால் வேதாரண்யத்தில் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரசாரமும் செய்யப்பட்டது என்றாலும், அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்பனரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டு விட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும், அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரசாரம் செய்து திரு.சத்தியமூர்த்தியைத் தேர்ந்தெடுத்தாய் விட்டதாக ஏற்பாடு செய்தாய் விட்டது. ஆனால் இந்தச் செய்தியை இன்னும் இரகசியமாக வைத்திருக் கின்றார்கள். வரமுடியாத ஒருவர் பெயரை முதலில் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி பிறகு திரு.மூர்த்தியின் பெயரை வெளியிடு வார்கள்.

 

திரு.வரதராஜுலுவைத் தெரிந்தெடுக்க சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தொண்டர்களும் சில பொது ஜனங்களும் பாடுபட்டார்கள். ஆனால், பார்ப்பனர்களும், காங்கிரஸ் ஆபீசுகளும், சிப்பந்திகளும் யோக்கியமாய் தங்கள் பிரசாரத்தைச் செய்திருந்தால் திரு.வரதராஜுலுவே தெரிந்தெடுக் கப்பட்டிருப்பார். ஆனால் பார்ப்பன சூழ்ச்சியால் அவர் பெயர் இரண்டொரு கமிட்டி தெரிந்தெடுத்தும், திருப்பி அனுப்பி திரு.சத்தியமூர்த்தியைத் தெரிந்தெடுக்கப்பட வேண்டியதாயிற்று. இதன் பலனாய் மகாநாட்டின் போது பெருத்த கலகமேற்படும் போல் தெரிய வருகின்றது. ஆனால் இருதிறத்தாரும் கலகத்திற்குக் காரணம் சுயமரியாதைக் கட்சியார்கள் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யார் பேரில் வந்தாலும் சரி, எப்படியும் காங்கிரசுக்குத் தமிழ் நாட்டில் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதும், அதில் உள்ள நாணயம் எவ்வளவு என்பதும், அதில் எவ்வளவு தூரம் வகுப்புவாதம் இல்லை என்பதும் ஆகியவைகளை மாத்திரம் பொதுஜனங்கள் இனியும் அறிந்து கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் காட்டுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.07.1929)

 
 
Read 62 times