Print this page

வட இந்தியாவிலும் “நாஸ்திகம்” (குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.06.1929)

Rate this item
(0 votes)

 

வட இந்தியாவிலும் “நாஸ்திகம்”

இந்தியாவில் ஆங்கில அரசாட்சியை ஒழித்துவிட்டு ருஷிய தேச ஆட்சி முறையை நிறுவச் சதியாலோசனை செய்ததாக 31 பேர்கள் மீது கொண்டு வரப்பட்ட வழக்கு மீரத்தில் விசாரணையிலிருக்கிறது. இம்மாதம் 12ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது பப்ளிக் பிராஸிகியூட்டர் “போல்ஷ்விக்காரர்கள் (எதிரிகள்) கடவுள் நம்பிக்கையை ஒழிப்பவர்கள். இவர்கள் கிறிஸ்தவக் கடவுள், மகமதியக் கடவுள், பௌத்தக் கடவுள் ஆகிய கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையெல்லாம் ஒழித்துவிட்டு இறுதியில் இந்து மதக் கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையையும் தங்கள் ஆட்சிமுறைக் காலத்தில் அழிப்பது நிச்சயம். இவர்கள் கொள்கைப்படி உலகத்திலுள்ள எல்லா மதங்களும் அழிந்துபட வேண்டும். இதற்கென இவர்கள் சர்வ மதங்களிலுமுள்ள குருக்களைக் கொன்று கோயில்களை இடித்துத் தகர்க்கும் திட்டத்தையே உழைப்புத் திட்டமாகக் கொண்டுள்ளவர்கள். கடவுளுக்கு எதிர்ப்பிரசாரம் புரியும் திட்டத்தைப் படைத்தவர்கள்......... இக் கொள்கைக்காரர்கள் தங்கள் மனோபாவங்களை வாழ்க்கையில் அநுசரித்து அதற்கேற்ற வேலைத் திட்டங்களையும் செய்து வருகிறார்கள். இதற்கென இப்படித்தான் செய்தல் வேண்டும், லட்சியங்கள் இவைகள்தான் என்றும் இவர்கள் வரையறுத்துள்ளனர்” என்று எடுத்துக் காட்டினார்.

அப்போது எதிரிகளின் வக்கீல் எதிரிகள் மீது தப்பெண்ணம் கற்பிப்பதற்காக இந்த விஷயங்களைப் புகுத்திப் பிரசாரம் செய்யப்படுகின்றது என்று கூறினார். வழக்கின் தத்துவம் எவ்விதமாயினும் உலகமெங்கும் கடவுள் மத சம்பந்தமான இத்தகைய உணர்ச்சி பரவியிருக்கிற தென்பதற்கும் அதிகமாகப் பேசப்படுகிறது என்பதற்குமே இதை எடுத்துக் காட்டினோம்.

 

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.06.1929)

 
Read 47 times