Print this page

வரதராஜுலுவின் விஷமப் பிரசாரம் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.06.1929)

Rate this item
(0 votes)

“தமிழ்நாடு” பத்திரிகையில் திரு.வரதராஜுலு அவர்கள் ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியார் செய்திருந்த ஆலயப் பிரவேசத் தீர்மானத்தைத் திருப்பூரில் கூடிய தேவஸ்தானக் கமிட்டி மீட்டிங்கில் கேன்சில் செய்து விட்டதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமியும் சம்மதித்ததாகவும் இதனால் ராமசாமி குட்டிக்கரணம் போட்டு விட்டதாகவும் பொருள்பட அயோக்கியத் தனமாகவும், விஷமத் தனமாகவும் ஒரு செய்தியும் போட்டு அதற்காக உபதலையங்கமும் எழுதியிருக்கிறார்.

திருப்பூர் மீட்டிங்கில் அந்தத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டதாய் எழுதியிருப்பது பொய் என்றும், முதலாவது அம்மாதிரி ஒரு தீர்மானமே அன்றைய மீட்டிங்குக்கு வரவில்லை என்றும் நாம் உறுதி கூறுவதுடன், மேலும் அந்த மீட்டிங்கிற்கு திரு.ஈ.வெ.ராமசாமி போகவில்லை என்றும், அவர் அன்று பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர் மகாநாட்டு விஷயமான வேலையில் ஈடுபட்டு இருந்தார் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். எனவே இதனால் ‘தமிழ்நாடு’ பத்திரிகையின் யோக்கியதையையும் அது இதுவரை நடந்து வந்த மாதிரியையும் கோவில் பிரவேச விஷயத்தில் அதற்குள்ள பொறாமையையும், இழிகுணத்தையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதன் மூலம் நமக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதைத் தவிர, வேறு எவ்வித நஷ்டமும் உண்டாகி விடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

 

தவிர அம்மாதிரி ஏதாவது, ஒரு சமயம் தேவஸ்தானக் கமிட்டியார் அத் தீர்மானத்தை ரத்து செய்வார்களானால் கண்டிப்பாய் திரு.ஈ.வெ.ராமசாமியார், கமிட்டி வைஸ்பிரசிடெண்ட் ஸ்தானத்தையும், மெம்பர் ஸ்தானத்தையும் ராஜீநாமாக் கொடுத்துவிட்டு அத்தீர்மானத்தின் தத்துவத்தை சட்டத்தின் மூலமோ, சுயமரியாதை சத்தியாக்கிரகத்தின் மூலமோ அமுலில் கொண்டு வரும் வேலையில் இறங்குவாரே ஒழிய ‘உடம்புக்குச் சவுகரியமில்லை’ என்று சாக்குச் சொல்லிக் கொண்டு முதுகு காட்டி ஓடிவிடமாட்டார் என்பதை திரு.வரதராஜுலுவுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.06.1929)

 
Read 64 times