Print this page

இந்திய சட்டசபை வர்த்தகத் தொகுதிக்குத் தேர்தல் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.04.1029)

Rate this item
(0 votes)

இந்தியா சட்டசபைக்கு சென்னை வர்த்தகத் தொகுதிக்காக ஒதுக்கப் பட்ட ஸ்தானத்திற்கு கோவை வருணாச்சிரம ஐயங்கார் பார்ப்பனராகிய திரு. சி.வி. வெங்கிட்டரமண ஐயங்கார் அவர்களும், சென்னை பிரபல வியாபாரியாகிய ஜனாப் ஜமால் மகமது சாயபு அவர்களும் போட்டி போடுகின்றார்கள்.

திரு. அய்யங்காருக்கு அதிகமான பின்பலமும் ஆதரவும் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் இருப்பதாகத் தெரிய வருகின்றனது. இத்தொகுதியில் சுமார் 500 பேர் வரை நாட்டுக்கோட்டை நகரத்தார் கனவான்கள் ஓட்டர்களாயிருப்பதும் ராஜா சர். அவர்கள் வர்த்தக உலகத்தில் தக்க செல்வாக்குடையவராக இருப்பதுமே திரு.அய்யங்கார் அவரைப் போய் பிடித்ததற்கு முக்கிய காரணமாகும். திரு.ராஜா சர். அவர்களின் செல்வப் பெருக்கும் செல்வாக்கு வன்மையும் உலகத்தில் யாராலும் மறுக்கக் கூடியதல்ல என்பதை நாம் வலியுறுத்திக் கூறுவோம். ஆனால் அதை மக்களுக்குப் பயன்படும் முறையில் உபயோகப்படுத்தாமல் எதேச்சாதிகார வழியில் உபயோகிக்கத் துணிந்து கொண்டே போனால் யாரால் தான் சங்கடப்படாமல் இருக்க முடியும்?

 

அவர்களது சிதம்பரம் காலேஜ் பார்ப்பன அக்கிராரமாயிருக்கின்றது என்று கொஞ்ச காலத்திற்கு முன் எழுதினோம். அதை ஒருவாறு வேறு அவசரத்தில் மறந்தோம் - பிறகு சிதம்பரம் யூனிவர்சிட்டிக்கு வைஸ் சான்சலராக பார்ப்பனப் பித்துப் பிடித்த ஒரு சாஸ்திரியை நியமித்தார்கள். போதாக் குறைக்கு சட்டசபை வர்த்தகர் தொகுதிக்கு ஒரு பிரபல வர்த்தகருக்கு விரோதமாய் அதுவும் மகமதிய வர்த்தகருக்கு விரோதமாய் ஒரு பார்ப்பனரை அதுவும் அய்யங்கார் பார்ப்பனரை அதுவும் ஏற்கனவே எல்லோரும் அய்யங்கார் பார்ப்பனராக அடைந்து கிடக்கும் இடத்திற்கு மறுபடியும் ஒரு வருணாச்சிரம அய்யங்கார் பார்ப்பனரை ஆதரிப்பது என்று சொன்னால் நாம் எப்படித்தான் சமாதானமடைய முடியும்? எனவே நமது ராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் தயவு செய்து புனராலோசனை செய்து தம்மிடம் அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் மக்களுக்கு நியாயம் வழங்குவார்களாக.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.04.1029)

 
Read 50 times