Print this page

மதுவிலக்கு பிரசாரத்திற்கு 400000 ரூ (குடி அரசு - அறிவிப்பு - 10.03.1929)

Rate this item
(0 votes)

நமது மாகாணத்தில் உள்ள சுமார் 4 கோடி பார்ப்பனரல்லாத மக்களும் ஏறக்குறைய ஏகமனதாய் இருந்து பல நாட்களாகக் கிளர்ச்சி செய்து வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை சென்னை அரசாங்க உத்தியோகத்தில் ஒருவாறு அமுலுக்கு கொண்டு வர முயற்சித்து தைரியமாய் வாதாடி வெற்றி பெற்ற நமது சுகாதார மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுபானத்தில் பெரிதும் கஷ்டமும் நஷ்டமும் அடையும் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் நன்மையை உத்தேசித்து மது விலக்கு பிரசாரம் செய்வதற்கு என்று இவ்வருஷத்திய வரவு செலவு திட்டத்தில் நான்கு லட்சம் (4,00,000) ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இதைக் கண்ட நமது எதிரிகளான கன்மனப் பார்ப்பனர்கள் மதுபானம் நின்றுவிட்டால் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமே எனக் கருதி சட்டசபையில் அத்தீர்மானம் நிறைவேறாமல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களான கனவான்கள் இப்பார்ப்பனர்களின் சூட்சிக்கும் விஷமத்திற்கும் பயந்து ஏமாந்து போகாமல் தைரியமாய் உறத்து நின்று பிரசாரத் தொகையை அனுமதித்து நிறைவேற்றி வைப்பதுடன் மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்களும் நம் மதுபானத்தினால் கஷ்டப்படும் மக்கள் சார்பாக நன்றி செலுத்தவும் கடமைபட்டிருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்துகின்றோம்.

(குடி அரசு - அறிவிப்பு - 10.03.1929)

 
Read 48 times