Print this page

நமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் கஷ்டம் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.11.1928)

Rate this item
(0 votes)

“திராவிடன்” பத்திரிக்கை 26.10.28ல் தலையங்கத்தில் எழுதுவதாவது:-

“நம் மாகாணத்தில் பார்ப்பன ஆசிரியர்களின் கொடுமையால் பார்ப்பனரல்லாத மாணவர்கள் படுந்துயரை என்னவென்று எடுத்துரைப்பது? பார்ப்பன ஆசிரியர்கள் பார்ப்பனரல்லாத மாணவர்களை வகுப்புகளில் சரியாய் நடத்துவது கிடையாது; பாடம் செவ்வனே சொல்லிக் கொடுப்பதும் கிடையாது. ஒரு மாணவன் “குடி அரசு” படிக்கின்றவனாகவோ, அன்றி “திராவிடன்” படிக்கின்றவனாகவோ அல்லது “ஜஸ்டிஸ்” படிக்கின்றவனாகவோ இருந்து விட்டால் அவன் பாடும் திண்டாட்டந்தான். அதுவும் இராமசாமி நாயக்கர் பிரசங்கத்திற்குப் போய்விட்டால் இன்னும் திண்டாட்டம். அவன் எவ்வளவு கெட்டிக்காரனாக விருந்தபோதிலும் அவனை பரீக்ஷையில் மொட்டையடித்து விடுவார்கள்.

 

இத்தகைய கொடும் நிகழ்ச்சிகள் இம்மாகாணத்தில் பல இடங்களில் நேர்ந்துள்ளனவென்பதை நாம் அறிவோம். இன்று லால்குடி போர்டு ஹைஸ்கூலில் அப்பள்ளிக் கூடத்துப் பார்ப்பன ஆசிரியர்களால் பார்ப்பனரல்லாத மாணவர்கள் எவ்வளவு கொடுமையாக நடத்தப்படுகின்றார்கள் என்பதை ஒரு கமிட்டியார் விசாரணை செய்வார்களாயின் திரு. நாவேல் அவர்கள் சைமன் கமிஷன் முன்பு கூறியது உண்மையென்பது புலனாகிவிடும்.”

இந்த வாக்கியங்களை நாமும் முழுமனதோடு ஆதரிக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம். ஏனெனில் நாமும் லால்குடிக்கும் அதுபோன்ற பல ஊர்களுக்கும் சென்றிருந்த காலையில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் அவ்வப் பாட சாலையில் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் துன்பங்களைக் கேட்டதில் நமது நெஞ்சமும் குமுறுகிறது.

 

லால்குடி பள்ளிக்கூடத்தின் கொடுமைக்கு ஒரு சிறு உதாரணம் மாத்திரம் கூறி மேலே சொல்லுவோம். அதாவது லால்குடி பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த வாசக சாலைக்கு ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் போர்டார் செலவில் வரவழைக்கப்படுகின்றன. ‘திராவிடன்’, ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையும் வரவழைக்க வேண்டுமென்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் கையொப்பமிட்டு தலைவர்களுக்கு அனுப்பியும் பல வேண்டுகோள்கள் பல மாதக்கணக்காகியும் மதிக்கப்படாமலிருப்பதோடு சுயமரியாதையில் பற்றுள்ள மாணவர்கள் உபாத்தியாயர்களால் வெறுக்கப் பட்டு வருகின்றனர்.

எனவே ஜில்லா தாலூக்கா போர்டு தலைவர்களும் முனிசிபல் தலைவர்களும் தாங்களும் தங்கள் மக்களும் தலைவர்கள் பதவியை அனுபவிப்பதற்கு மாத்திரம் அந்த ஸ்தாபனங்கள் இருக்கின்றதாகக் கருதி அதற்கேற்ற காரியங்களுக்கே தங்கள் முழு நேரத்தையும் அறிந்து செலவழிக்காமல் சத்தியத்திற்கும் நாணயத்திற்கும் ஒரு சிறிது பாகத்தையாவது செலவிடும்படி வேண்டுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.11.1928)

 
Read 65 times