Print this page

பழிவாங்கும் குணம் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.09.1928)

Rate this item
(0 votes)

திருச்சி ஜில்லா நியாயாதிபதியவர்கள் திரு. ஞானப்பிரகாசம் என்கின்ற ஒரு தொழிலாளருக்கு 10 வருஷம் கடின காவல் தண்டனை விதித்ததாகத் தெரிய வருகின்றது.

இந்த வழக்கில் நியாயம் வழங்கப் பட்டதா அல்லது பழிவாங்கும் பேய்த் தன்மை நியாயம் வழங்கப் பட்டதா என்பது நமக்கு விளங்கவில்லை.

என்ன சமாதானம் சொன்ன போதிலும், இத் தீர்ப்பு எழுதிய நியாயாதிபதி மனிதத் தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறாரா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

 

இவ்வேலைநிறுத்தத்தில் ஏற்பட்ட சம்பவங்களின் பலனாக சற்றும் ஈவு இரக்கமற்று பழி வாங்கும் தன்மையோடு வழக்குகள் ஜோடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்கள் யாவருக்கும் வெட்டவெளிச்சமாய் தெரிந்திருக்கும்.

நியாயாதிபதிகள் என்பவர்கள் தங்களுக்கு கிரமமாய் இருக்க வேண்டிய மனிதத் தன்மையை மறைத்து விட்டு, ஏதோ சில சுயநலப் பத்திரிகைகாரர்கள் சுமத்திய அநியாயப் பழியையும், சில சுயநல அதிகாரிகள் ஜோடித்த விஷயங்களையும் ஆதரவாய்க் கொண்டு இம்மாதிரி நடப்பதென்றால் பிறகு வாயில்லா பூச்சிகளுக்கு எங்குதான் விடுதலை இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை. அஸெஸர்கள் ஏகோபித்து எதிரி குற்றவாளியல்ல என்று சொல்லியும் தண்டித்திருப்பதாய் தெரிகின்றது.

 

சட்டத்திற்கும் நீதிக்கும் பொறுப்பானவர்கள் இதற்கு என்ன பரிகாரம் செய்வார்களோ தெரியவில்லை.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.09.1928)

Read 48 times