Print this page

“கோவில் பிரவேசம்” குடி அரசு - செய்தி விளக்கம் - 19.08.1928)

Rate this item
(1 Vote)

தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விட வேண்டுமென்பதும், பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும், உள்ளே போய் சுவாமி தெரிசனம் செய்வதாலோ, தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது ஜனங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

அக் கோயில்களின் நிபந்தனைகள் மக்கள் சுயமரியாதைக்கு இடையூறாகவும், உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு ஆதாரமாகவும் இருப்பதால் இவைகளுக்கு ஆதாரமான சகலத்தையும் ஒழிக்க வேண்டுமென்றே கருதி இதை செய்யத் தூண்டுகின்றோமேயல்லாது, சாமி என்று ஒன்று இருந்தால் அங்கு தான் இருக்கக் கூடுமென்றோ, அந்தக் கல்லுச்சாமிக்கு பக்கத்தில் போவதால் அதிக லாபம் கிடைக்குமென்றோ நினைத்திருக்கும் படியான அவ்வளவு முட்டாள்தனத்துடன் நாம் கோவிலில் எல்லோருக்கும் சம உரிமை கேட்கவில்லை.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 19.08.1928)

***

சுயமரியாதை போதனாமுறைப் பாடசாலை

ஈரோட்டில் சுயமரியாதைப் பிரசாரத்திற்கு போதனாமுறைப் பாடசாலை ஏற்படுத்துவதாய் ‘குடி அரசி’லும் ‘திராவிடனி’லும் வெளியிட்டிருந்தபடி நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருப்பவைகளில் சுமார் 20 பேர்களுக்கு மட்டும் சில நிபந்தனைகள் கண்டு தனித்தனியாக கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் தயவு செய்து உடனே அதில் கண்ட விபரங்களுக்கு பதில் எழுதிவிட்டு இவிடமிருந்து வரும் படி கடிதம் வந்தால் ஆவணி மாதம் 15 ம் தேதி வாக்கில் இவிடம் இருக்கத் தயாராயிருக்க வேண்டும். படுக்கை, புராணம், சாஸ்திரம் என்பதான புஸ்தகங்கள் முதலிய அவரவர்களுக்கு வேண்டிய சவுகரியமான சாமான்களுடன் வர வேண்டியிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - அறிவிப்பு - 19.08.1928)

***

திரு. வேதாசலம்

திரு. வேதாசலம் அவர்களின் சென்னை ராயபேட்டை குகாநந்த நிலைய ஆண்டு விழா வைபவத்தின் அக்கிராசனப் பிரசங்கத்திலும் திருவாளர் தண்டபாணி பிள்ளை, கண்ணப்பர், ராமனாதன் ஆகியோர்களின் வாதங்களின் போதும் பேசிய விஷயங்களைப் பற்றி வெளியான “தமிழ்நாடு”, “திராவிடன்” பத்திரிகையில் கண்ட விஷயங்களுக்கு திரு வேதாசலம் அவர்களின் சமாதானமோ, மறுப்போ ஒரு வாரத்தில் வராத பக்ஷத்தில் நாம் அதன் ஆராய்ச்சியை தெரிவிப்பதாக எழுதியிருந்தோம், அந்தப்படி இதுவரை அவரால் யாதொரு மறுப்போ சமாதானமோ இதுவரை வராததால் திரு. வேதாசலம் என்னும் தலைப்பில் அவற்றை ஆராய்ந்து எழுதி வருவோம் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்த நிலையில் மற்றவர்கள் எழுதும் வியாசங்களுக்கு போதிய இடமளிக்க முடியாமைக்கும் வருந்துகின்றோம்.

(குடி அரசு - அறிவிப்பு - 19.08.1928)

 
Read 76 times