Print this page

பார்ப்பனர்களின் சைமன் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு (குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.06.1928)

Rate this item
(0 votes)

சைமன் கமிஷன் பஹிஷ்காரம் என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்றும், மற்றும் பல பார்ப்பன தாசர்களின் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் என்றும் பலமுறை தெரிவித்து வந்திருக்கின்றோம். அதற்கிசைந்த வண்ணமாக தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அடிக்கடி குட்டிக் கரணம் போட்டு வருவதையும் பகிஷ்காரத்திற்கு புது புது வியாக்கியானங்கள் சொல்லி வருவதையும் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கின்றோம். திரு. சீனிவாசய்யங்கார் தமது திட்டத்தை தூக்கிக் கொண்டு சீமைக்குச் சென்றிருப்பதைப் பற்றியும் தெரிவித்திருக்கின்றோம்.

இப்போது பார்ப்பனர்கள் பார்ப்பன சமூகத்தின் பேராலும் வருணாசிரம தர்ம சபையின் பேராலும் கமிஷனுடன் ஒத்துழைக்கும் விதமாக தங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள். கமிஷனிடம் சாட்சி சொல்லவும் தயாராயிருக்கிறார்கள். எனவே பகிஷ்கார உபதேசத்தை இந்தப் பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் இனி யாருக்கு உபதேசம் செய்கின்றார்கள் என்பதை பொதுஜனங்களே யோசித்துக் கொள்ள வேண்டுகின்றோம். அன்றியும் இப்பார்ப்பனர்களையும் அவர்களது அடிமைகளையும் நம்பி மோசம் போகாமல் ஒவ்வொரு சமூகத்தாரும் தங்கள் தங்கள் குறைகளை அவசியம் கமீஷனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதாகவும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.06.1928)

 
Read 42 times