Print this page

‘லோகோபகாரி’யின் மயக்கம். (குடி அரசு - கட்டுரை - 10.06.1928)

Rate this item
(0 votes)

31-5-28 தேதி லோகோபகாரியின் தலையங்கத்தில் மணவயது மசோதாவைப் பற்றி எழுதுகையில்,

“... .... குழந்தைகளுக்கு மணம் செய்து வைக்கும் முறையைக் கண்டித்து சில ஆண்டுகளாகவே நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது நன்று. ஆனால் இது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு அறிஞர்களின் பிரசாரத்தால் நல்லறிவு தோன்றுமாறு செய்தலே நல்வழியாகும். தற்காலத்தில் இது முடியாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இவ்விஷயத்தில் அரசாங்கத்தார் சட்டம் போடுதல் பொருத்தமுடைய செயலல்லவென்று நமக்குத் தோன்றுகிறது” என்று எழுதியிருக்கின்றது. இப்படி எழுதி இருப்பதானது சீர்திருத்தக்காரருக்கு தலையையும், அதன் விரோதிகளான பார்ப்பனர்களுக்கு வாலையும் காட்டுவது போல் இருக்கின்றது.

 ‘குடிகளால் சரி செய்து கொள்ள முடியவில்லை’ என்று தன்னாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதும் உண்மையிலேயே மனித சமூகத்துக்கு கேடு உண்டாக்குவதுமான விஷயம் சர்க்காரால் சரி செய்யப்பட நேருவதில் ‘லோகோபகாரி’க்கு உள்ள கஷ்டம் இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை.
கடைசியாக “இந்தச் சட்டம் அமுலுக்கு வரும் பொழுது வயது நிர்ணயம் முதலிய விஷயங்களில் பலவித தொல்லை விளையும்” என்று எழுதுகின்றது. மனிதன் தன் சொத்தை அடையும் விஷயத்திலும் உத்தியோகம் பெறும் விஷயத்திலும் மற்றும் அனேக விஷயத்திலும் வயது நிர்ணயம் குறிக்கப்பட்டிருக்கின்றது. இவைகளில் என்ன தொல்லைகள் விளைந்து மக்களைக் கெடுத்துவிட்டது என்பது விளங்கவில்லை. வேறு மதஸ்தர்கள் என்பவர்களுக்காகிலும் வயது கண்டுபிடிக்கும் விஷயம் சற்று கஷ்டமாக இருக்கலாம்.

இந்துக்கள் என்போர்களுக்கு அதிலும் பார்ப்பனர்கள் என்போர்க்கு வயது கண்டுபிடிப்பதில் தொல்லை விளைய காரணமில்லை என்றே சொல்வோம். ஏனெனில், அவர்கள் ஜோசியம், ஜாதகம் என்னும் ஒரு வித மூடநம்பிக்கையுள்ளவர்களானதால் கண்டிப்பாய் கணக்கு வைத்திருக்க முடியும். அதோடு சர்க்கார் பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்து வருவதால் ஜாதகத்தை புரட்டி விடுவார்கள் என்கின்ற பயமும் வேண்டியதில்லை.

எனவே இனியாவது ‘லோகோபகாரி’ச் சீர்திருத்த விஷயங்களில் இம்மாதிரி வழவழப்பையும் இரண்டு பேருக்கும் நல்லவராகப் பார்க்கும் தன்மையையும் விட்டு தைரியமாய் ஒரு வழியில் நின்று மக்களுக்கு உதவ வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 10.06.1928)

Read 66 times