Print this page

சுயமரியாதைச் சங்கங்களுக்கு ஆதரவு (குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.04.1928)

Rate this item
(0 votes)

தமிழ் நாட்டில் புதிதாய் தோன்றி இருக்கும் சுயமரியாதைச் சங்கங்களுக்கும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கங்களுக்கும் ஏறக்குறைய நாடு முழுதுமே ஆதரவு கிடைத்து வரும் விஷயம் யாவரும் அறிந்திருக்கலாம். காங்கிரசின் போது வங்காளத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்திருந்த திருவாளர் கோஸ்வாமி முதலியோர் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி பார்ப்பனரல்லாத தலைவர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தைப் பற்றியும், சுயமரியாதைச் சங்கத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசி விட்டுப் போய் இந்திய சட்டசபையிலும் பிரஸ்தாபித்தது நேயர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இப்போது சென்னை மாகாண மந்திரிகளும் முக்கியமாய் முதல் மந்திரியும் தஞ்சையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது இது சமயம் “நாட்டில் சுயமரியாதைச் சங்கங்களை ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் போன்றார்கள் ஸ்தாபித்து வருவது கேட்டு தாம் மிகவும் சந்தோஷப்படுவதாகவும் அவைகள்தாம் இப்போது வேண்டப்படுகின்றன வென்றும் சிறிதும் பயமில்லாமல் பார்ப்பனரல்லாதார் இக்காரியத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு போனால் சீக்கிரத்தில் நன்மை பிறக்குமென்றும் இவ்வேலைகள் தான் சுயராஜ்யமடையச் செய்யுமென்றும் பேசி பார்ப்பனரல்லாத இளைஞர்களையும் உற்சாகப்படுத்தி பேசினார்”(இந்த வாக்கியங்கள். 20-4-28 உ ‘சுதேசமித்திரன்’ 6-வது பக்கம் 5-வது கலத்தில் இருக்கின்றது). ஆனால் ‘தமிழ்நாடு’ பத்திரிகை சுயமரியாதைச் சங்கங்களும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கங்களும் வயிற்று பிழைப்புக்காக நடைபெறுவதாக ஜாடை ஜாடையாக எழுதுகிறது.

 எனவே ஸ்ரீ வரதராஜுலுவும் அவர் தேசிய பிரசாரமும் வயிற்றுப் பிழைப்பு பிரசாரமா, அல்லது சுயமரியாதைப் பிரசாரமும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கப் பிரசாரமும் ஸ்ரீமான்கள் ஈ. வெ. ராமசாமி நாயக்கர், கண்ணப்பர், ஆரியா போன்றவர்களின் பிரசாரமும் வயிற்று பிழைப்பு பிரசாரமா என்பதை பொது ஜனங்களே உணர்ந்து கொள்ள விட்டு விடுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.04.1928)

Read 61 times