Print this page

தர்மத்தின் நிலை குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.04.1928

Rate this item
(0 votes)

நாட்டுக் கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப்பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக்கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப்படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமூகத்தாராகிய பார்ப்பனரல்லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யாவிட்டாலும் முழுதும் பார்ப்பனர்களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது.

கோவில்கள், வேதபாடசாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள்தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர்களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தபட நியாயமிருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமூகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார்களோ அந்த சமூகத்தாரை துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமூகத்தாருக்கே அதை செலவு செய்வதானால் அப்படியானவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா? ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல் கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும் பார்ப்பனரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மையையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.04.1928)

துருக்கியில் மாறுதல்

துருக்கி ராஜாங்கத்தில் அரசாங்க விஷயத்தில் மதசம்பந்தமே இருக்கக் கூடாது என்று பலமான மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இதை நாம் மனமாற வரவேற்பதுடன் இது உலக விடுதலைக்கு ஒரு பெரிய அறிகுறியென்றே சொல்லுவோம். துருக்கி ராஜாங்கம் மதத்திற்காகவே இருப்பதாக சொல்லப்படுவது. கிலாபத்து இயக்கமும் அதற்காகவே ஏற்பட்டது. அப்படிப்பட்ட அரசாங்கம் மத சம்பந்தத்தை நீக்க - மனித தர்மத்தை ஆதாரமாக வைத்து - அரசாட்சி புரிய ஏற்பட்டால் இன்றைய தினமே நாம் துருக்கிப் பிரஜையாக இருக்க பதிவு செய்து கொள்ளத் தயாராகயிருக்கிறோம்.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 08.04.1928)

Read 48 times