Print this page

இன்னும் அடி. (குடிஅரசு - செய்தி விளக்கம் - 04.03.1928)

Rate this item
(0 votes)

சைமன் கமிஷன் அர்த்தாலின் போது பார்ப்பனர்களை அடிக்க ஆரம்பித்தது இன்னும் நிற்கவில்லை என்று தெரிகிறது. அதாவது சென்ற வாரத்தில் ஒரு உத்தியோகப் பார்ப்பனரை யாரோ சில காலிகள் வழிமறித்து நன்றாய் புடைத்தார்களாம்! ரிக்ஷா வண்டிக்காரன் பயந்து ஓடினதற்கு ஓடாதே! ஓடாதே! உன்னை நாங்கள் அடிக்க வரவில்லை, இந்தப் பார்ப்பனனைத் தான் அடிக்க வந்தோம் என்று காலிகள் சொன்னார்களாம்! ஆனால் சிலர் அந்தப் பார்ப்பனரை அடிப்பதற்கு காரணம் வேறு விதமாகவும் சொல்லிக் கொள்ளுகிறார்களாம்! அதாவது ஆபீசில் உத்தியோக தோரணையில் அவர் செய்யும் கொடுமையால் இம்மாதிரி ஏற்பட்டதென்கிறார்களாம். எப்படி இருந்தாலும் இது மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது. எனவே இதை அடக்காமல் இருப்பது யோக்கியமல்ல.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.03.1928)

சைமனுக்கு பார்ப்பனர்களின் விருந்து

ஸ்ரீமான் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்கின்ற பார்ப்பனர் சைமன் கமிஷனுக்கு ஒரு விருந்து வைத்து, பார்ப்பனர்களுக்கும் அழைப்பு அனுப்பி எல்லா பார்ப்பனர்களையும் அறிமுகம் செய்து வைத்ததோடு, அவரிடம் பார்ப்பனப் பிரசாரமும் செய்யப்பட்டு விட்டது. இதைப் பற்றி பேசுவோர் யாருமில்லை. தேசீய வீரர்களும் தேசீயப் பத்திரிகைகளும் தங்களை மறைத்துக் கொண்டன. பார்ப்பனரல்லாதார் யாராவது பகிஷ்காரப் புரட்டில் கலவாவிட்டால் அல்லது பகிஷ்கார புரட்டர்களின் யோக்கியதையை வெளியாக்கினால் அதற்கு பெயர் பக்தர்கள் பரவசமாம், அல்லது சர்க்கார் தாசர்களாம். என்னே அரசியல் அயோக்கியத்தனம்!

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 04.03.1928)

சைமனுக்காக சட்டசபை பகிஷ்காரம்

சைமன் சென்னையில் இருக்கும் தினத்தன்றே நமது தேசீய வீரப்புலிகள் சட்டசபைக்குப் போய் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பிரயாணப்படி வாங்கி வந்துவிட்டார்கள். காங்கிரஸ் சட்டசபைக் கக்ஷிக்காரர்களின் சட்டசபை பகிஷ்காரக் கூச்சலுக்கு இதைவிட வேறு என்ன யோக்கியதை வேண்டும். இவர்களை நம்பி எத்தனையோ சோணகிரிகள் இன்னமும் ஏமாந்து போகிறார்கள் என்றால் இவர்களுக்கு என்ன மாதிரி சுயராஜ்யம் கொடுப்பது என்பது நமக்குப் புரியவில்லை.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 04.03.1928)

அதிசய விருந்து

ஈரோட்டிற்கு சென்ற வாரம் முதல் மந்திரி வந்திருந்த சமயம் ஒரு விசேஷம் நடந்தது. அதாவது கோவை ஜில்லாவில் உள்ள கொங்கு வேளாள கனவான்களுக்குள்ளாகவே சிலர், அதாவது பட்டக்காரர்கள் என்கின்ற கனவான்கள் அந்தச் சமூகத்தார் பந்தியில்கூட உட்கார்ந்து உணவருந்தும் வழக்கம் இதுவரை நடந்ததில்லை. ஆனால் முதல் மந்திரிக்கு அளித்த விருந்தின்போது பட்டக்காரர்களில் மிக செல்வாக்குப் பெற்றவரும், ஈரோடு தாலூகா போர்டு பிரசிடெண்டுமான பழய கோட்டை பட்டக்காரர் ஸ்ரீராய் பஹதூர் நல்லதம்பிச் சர்க்கரை மன்றாடியார் அவர்கள் தாராளமாக இந்து முஸ்லீம் கிருஸ்தவர்கள் ஆகிய கனவான்கள் அடங்கிய கூட்டத்தில் கலந்து சமமாய் இருந்து விருந்துண்டார்கள். இது மிகவும் முற்போக்கான காரியமாகும். இதைப் பின்பற்றியாவது அச்சமூகத்தில் மற்ற சாதாரண கனவான்கள் நடந்து கொள்ளக் கூடாதா? என்று ஆசைப்படுவதுடன் ஸ்ரீபட்டக்காரர் அவர்களையும் அவர்களது தாராள நோக்கத்தை பாராட்டி மனதார வாழ்த்துகின்றோம்.

(குடிஅரசு - செய்தி விளக்கம் - 04.03.1928)

 
Read 58 times