புது வருஷ விஷயமாய் நாம் எழுதுவதில் அரசியல் விஷயத்திற்கு பிரதானம் கொடுத்து எழுத வரவில்லை; ஏனெனில் அரசியல் விஷயத்தை மிகுதியும் அலட்சியமாய்க் கருதுவதே ‘குடி அரசின்’ கொள்கை என்று பொதுஜனங்கள் எண்ணும்படி இருக்கவேண்டும் என்பதே நமது கவலை. ஆனாலும் அரசியலின் பேரால் மக்கள் ஏமாற்றப்படும் நிலைமை ஏற்படும்போது அலட்சியமாய் இருப்பதற்கில்லாமல் அதன் புரட்டுகளை வெளியாக்கவேண்டிய நிலையில் அரசியலைப் பற்றியும் எழுத நேரிடுகின்றது. மற்றப்படி தேசீயம் அரசியல் என்கின்றவைகள் எவ்வளவுக்கெவ்வளவு மக்களால் மறக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரத் தில் விடுதலை உண்டு என்பது நமதபிப்பிராயம். நிற்க, இந்த தலையங்கத்தில் நாம் எழுத புகுந்ததெல்லாம் புது வருஷத்தின் நிலை நமது முயற்சிக்கு எவ்வளவு பயனளிக்கக் கூடியதாயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளவேதான். எனவே நாம் யோசித்து பார்க்கும் அளவில் புது வருஷத் தில் நமக்கு பல இடையூறுகள் தோன்றலாம் என்பதாகவே அறிகின்றோம். அவ்விடையூறுகளை லட்சியம் செய்யாதவரை பலனுண்டாகும் என்றும் லட்சியம் செய்து அதற்காக ஏதாவது இணங்க இடம் தந்தால் காரியம் கெடக்கூடும் என்றும் அறிகின்றோம்.
இந்த சமயம் நமது முயற்சிக்கு எவ்வித உதவியும் ஆதரவும் அனுதாபமாவது இருப்பதாகக் காண முடியவில்லை. ஆனாலும் எதிர்ப்புக்காரர்களுக்கும் போதிய பலமோ ஆதரவோ இருப்பதாகவும் தெரியவில்லை. ஆரம்பத்தில் நாம் வெள்ளைக்காரருடன் வாதாடி மக்களின் இடுக்கண்களை விடுவிக்கக் கிளம்பினோம். அதில் இறங்கியதன் பலனாய் வெள்ளைக்காரரைவிட பார்ப்பனர்களிடமே மிகுதியும் வாதாட வேண்டியிருக்கின்றது என்று கருதினோம். அதில் இறங்கியதன் பயனாய் பார்ப்பனர்களைவிட நம்மவர்களிடமே வாதாடவேண்டியதாய் பல விஷயங்கள் காணப்படுகின்றன. இதை ஒரு உதாரணமாக விளக்க வேண்டுமானால், நமது விடுதலையை வெள்ளைக்காரர்கள் பறித்துக் கொண்டுபோய் வைத்திருக் கிறார்கள் என்று உணர்ந்து, அவர்களிடம் இருந்து அதைப் பிடுங்கி வர முயற்சித்ததில் நமது விடுதலையை அவர்கள் தங்கள் வீட்டில் வைத்துப் பூட்டிக் கொண்டு அதற்கு காவலாக நமது பார்ப்பனர்களையே காவல் காக்க வைத்திருக்கின்றார்கள் என்பதும் நமது பார்ப்பனர்களும் மிக்க எஜமான விஸ்வாசத்துடன் வெள்ளைக்காரர்களுக்கு காவல் காத்து வருகிறார்கள் என்பதும் நன்றாய் உணர்ந்து விட்டோம்.
இந்த முயற்சியில் தீவிரமாய் ஈடுபட்டதின் பலனால் ³ காவல்காரர்களை உண்டாக்கவும் போஷிக்கவும் நம்மவர்களே ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள். நம்மவர்களே அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து வளர்த்து வலுவுண்டாக்கி நமது விடுதலையைக் கைப்பற்றி இருக்கும் வெள்ளைக்காரர் களின் காவலுக்கு அனுப்பி வருகிறார்கள். ஆகவே நமது போஷணையை நிறுத்திக் கொண்டால் பார்ப்பனர்கள் வெள்ளைக்காரனுக்குக் காவலனாய் இருக்க முடியாது என்பதும், பார்ப்பனர்களின் காவல் ஒழிந்தால் வெள்ளைக் காரர்கள் நமது விடுதலைக்கு விரோதமாய் இருக்க முடியாது என்பதும் நமது முடிவு. எனவே அப்பார்ப்பனர்களுக்கு எவ்வெவ் வழியில் நியாயமற்ற போஷணை கிடைக்கின்றதோ அவ்வவ் வழிகளையெல்லாம் அடைத்துத் தீரவேண்டும் என்கின்ற முயற்சியில் இறங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இம் முயற்சி தான் சிலருக்கு நாம் நம்மவர்களுடன் போரிடுவதாகக் காணப்படுகின்றது.மத விஷயத்திலும் சாஸ்திர புராண விஷயத்திலும்கூட ‘குடி அரசு’ கை வைத்துவிட்டது என்று மதபக்தர்கள் என்போர்கள் சத்தம் போட நேரிட்ட தும், தேசீய விஷயத்தில் கூட கையை வைத்து விட்டது என்று தேசபக்தர்கள் என்போர்கள் சத்தம் போட ஏற்பட்டதும் இதனால்தானேயல்லாமல் வேறல்ல.
இதை நாம் வெளியிடும்போதும் மாற்றும்படி மக்களை வேண்டிக் கொள்ளுகின்றபோதும் மதக்காரர், சாஸ்திரக்காரர், புராணக்காரர் என்பவர்கள் நம்மீது பாய்கின்றார்கள். அப்படிப் பாய்கின்றபோது மதத்தைப் பற்றியும், சாஸ்திரத்தைப் பற்றியும், புராணத்தைப் பற்றியும் இவைகளின் மூலம் தானாகவே ஏற்படும் பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றியும் நாம் சொல்லும் விஷயங்களுக்கு ஒரு சிறிதும் சமாதானம் சொல்லாமலும், பதிலளிக்கக் கருதாமலும், வேண்டுமென்றே அவைகளை மறைத்துவிட்டுக் கடவுள் போச்சே என்று துக்கப்படுகிறவர்கள் போலவும், கடவுளைக் காப்பாற்றப் பிறந்திருக்கிறவர்கள் போலவும் வேஷம் போட்டுக் கொண்டு வெளியாகி ‘குடி அரசு’ நாஸ்திகம் போதிக்கின்றது என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டு மனமறிந்த பித்தலாட்டம் என்கின்ற பூமியின் மீது நின்று கொண்டு நம்முடன் போர் தொடுக்க வருகின்றார்கள். இக்கூட்டமும் இப்போரும் இப்புது வருஷத்தில் பலப்படும் என்பதே நமதபிப்பிராயம். இக்கூட்டத்தாருக்கு உண்மையில் கடவுளிடத்தில் நம்பிக்கை இருக்குமானால் ‘குடி அரசு’ கடவுளை ஒழித்துவிடமுடியும் என்கின்ற பயமும் தங்களால் தான் கடவுளைக் காப்பாற்ற முடியும் என்கின்ற எண்ணமும் ஒருக்காலமும் ஏற்பட நியாயமே இருக்காது என்றாவது அல்லது இவர்கள் போருக்கு கிளப்பியிருக்கும் கருத்து கடவுள் மறைந்து போவார் என்று இல்லாமல், இவர்களது மதமும், சாஸ்திரமும் புராணமும் என்பவைகள் மறைந்து போகுமோ என்பதான பயமாய்த்தான் இருக்க வேண்டும் என்றாவது பொதுமக்கள் நினைப்ப தில்லை. ஆகவே சாஸ்திரத்தையும் புராணத்தையும் காப்பாற்ற ஆசைப் பட்டுக் கடவுள் பேரில் சாக்கிட்டுக் கொண்டு வெளிக்கிளம்பும் கோழை போரை லட்சியம் செய்யாமல் இருந்தாலொழிய நமக்கு வெற்றி மார்க்கம் ஏற்படுவது அரிது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில் மதம் சாஸ்திரம் புராணம் என்பவைகளைப்பற்றி இப்போது எங்கு பார்த்தாலும் ஜனங் களுக்குள் அதிருப்தியும், அவநம்பிக்கையும், எதிர்ப்பிரசாரங்களும் ஏற்பட்டிருப்பதை இக்கூட்டத்தார்கள் உணர்ந்து பார்க்கட்டும்.
அரசியல் தலைவர் என்பவரும் வடநாட்டு ஆரியருமான மோதிலால் நேரு என்பவர் சமீபத்தில் பிரான்சு தேசத்தில் இந்திய வாலிபர்களிடம் பேசும்போது “வகுப்பு வித்தியாசங்கள் அடியோடு அழியத்தக்க உணர்ச்சிகளை வளர்க்க வேண்டும் என்றும் அதற்காக மதத்தையும் மறக்கத் தயாராயிருக்க வேண்டும்” என்றும் பேசியிருக்கின்றார்.
நாஸ்திகம்
நாஸ்திகம் என்றால் என்ன என்பதையும் மக்களுக்கு வெளிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்:-
முதலாவது நாஸ்திகம் என்கின்ற சொல் எந்த பாஷையில் உள்ளது? அதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன? நாஸ்திகம் என்கின்ற சொல் எந்த பாஷையிலுள்ளதோ அந்த பாஷையில் நாஸ்திகம் என்பதற்கு என்ன பொருள் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பவைகளை யெல்லாம் யோசித்துப் பார்த்தால் அறிவாளிகள் இந்த நாஸ்திகம் என்கின்ற பூச்சாண்டிக்குப் பயப்படமாட்டார்கள்.
நிற்க, கடவுளை நம்புகிறவன் நம்பாதவன் என்கின்ற கேள்வி பிறக்குமானால், அந்தக் கேள்வியானது கடவுள்தன்மை இன்னது என்று அறியாதவர்களிடமிருந்துதான் புறப்பட வேண்டும். ஆதலால் அதைப்பற்றி நமக்கு ஒரு சிறிதும் கவலையில்லை என்று சொல்வதோடு சைவம் என்றும், வைணவம் என்றும், ஸ்மார்த்தம் என்றும் மற்றும் பலப்பல விதமாகவும் பல பேராகவும் மதங்களைப் பிரித்துக் கொண்டு உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துத் தன்தன் மதமே பெரிது அதனதன் ஆதாரங்களே சத்தியமானது என்று பிடிவாதம் கொண்டு என்றென்றைக்கும் ஒத்துப்போக மார்க்கமில்லாமல் வாதங்களைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அனாவ சியமான பொழுது போக்குகளும் நேரக்கேடுகளும் ஒழிய வேண்டும்.
முடிவாக நாம் புது வருஷத்தின் பேரால் பொது மக்களைக் கேட்டுக் கொள்வதென்னவென்றால் வெள்ளைக்காரரின் தற்காலத்திய ராஜீய பாரம் நமக்கு - நமது நாட்டுக்கு - நமது நாட்டு ஏழை மக்களுக்குப் பெரிய ஆபத்தாய் இருக்கின்றது. இவ்விபத்தான ராஜ்ஜிய பாரத்தை நமது நாட்டுப் பார்ப்பனர்கள் நடத்திக் கொடுத்து பங்கு வாங்கிப் பிழைத்து வருகிறார்கள். அப்பார்ப்பனர்க்கு நமது மக்கள் மதத்தின்பேரால் சாஸ்திரத்தின் பேரால் புராணத்தின் பேரால் புராணச் சாமிகளின் பேரால் அடிமைப்பட்டு ஆக்கம் தேடிக்கொடுத்து வருகின்றார்கள். எனவே இவைகளை சரிப்படுத்த அஸ்தி வாரத்திலிருந்து வெட்டி எறிய வேலை செய்ய வேண்டியது நமது கடமை. அஸ்திவாரத்தில் கொஞ்சம் தாக்ஷணியம் பார்த்து ஒரு சிறு வேரை விட்டு விட்டாலும் மறுபடியும் அது படர்ந்துவிடும். ஆதலால் தயவு செய்து ஒவ்வொருவரும் ஒரே மூச்சாய் கொஞ்சமும் தாக்ஷண்ணியமோ குருட்டு நம்பிக்கையோ பிடிவாதமோ இல்லாமல் உரத்து நின்று உதவி செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம். இது வெற்றி பெற்றால் தான் நமது நாட்டுக்கு மாத்திரமல்லாமல் மனித சமூகம் முழுவதுமே சாந்தி உண்டாகும் என்று விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 08.01.1928)