Print this page

மானமற்ற ஜாதி (குடி அரசு - கட்டுரை - 04.12.1927)

Rate this item
(0 votes)

மதுரையில் 29-11-27 -ல் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் செய்த பிரசங்கத்தில் யாரோ ஒரு காங்கிரஸ் தொண்டர் ஸ்ரீநாயக்கரை பல கேள்விகள் கேட்டதாகவும் அதனால் குழப்பமுண்டானதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இது உண்மையல்ல. நாயக்கரை யாரும் எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. ஒருவர் பண்டிதர், பண்டிதர் என்று சத்தம் போட்டார். அதற்கு அங்கு இருந்தவர் அவரை கலகம் செய்ய வந்திருக்கிறார் என்று சந்தேகப்பட்டு கண்டித்து மேடையில் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள். கூட்டம் கலையும் வரை பேசாமல் உட்கார்ந்திருந்துவிட்டு போய்விட்டார்.

அதுசமயம் நாயக்கரும் சத்தம் போட்டவரையும், அவரைக் கண்டித்தவர்களையும், அவரை கூட்டி வந்து உட்கார வைத்தவர்களையும் தக்கபடி கண்டித்துவிட்டு இம்மாதிரி சிறு விஷயங்களை நாளையதினம் சில அயோக்கிய பத்திரிகைகளும் அயோக்கிய நிருபர்களும் கூட்டத்தில் குழப்பம் என்றும் கேள்விகளென்றும் எழுதி இக்கூட்டத்தின் பெருமையைக் கெடுக்க சூழ்ச்சி செய்வார்கள் என்றும் சொன்னார். பார்ப்பனப் பத்திரிகைகளும் பத்திரிகை நிருபர்களும் பெரும்பாலும் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் என்ன பேசினார் என்பதை எழுதுவதற்கு தைரியம் இல்லாமல் ஈனத்தனமாய் நடந்து கொண்டதோடு கூட்டத்தைப் பற்றி குறை கூற பிரயத்தனப்படுவதில் கொஞ்சமாவது வெட்கப்பட்டு பின் வாங்குவதில்லை.

 இதைப் பற்றி எவ்வளவு கண்டித்தாலும் வைதாலும் அந்த ஈன ஜாதிகளுக்கு ரோஷம் மானம் வெட்கம் என்பது இல்லாமல் இத்தொழிலை விடாமல் செய்து வருகின்றனர். இவ்வளவு காலம் இவ்வளவு பெரிய அக்கிரமங்கள் செய்து கொண்டு இன்னமும் இச்சாதி உயிர் வாழ ஏற்பட்ட காரணமே அடியோடு மானத்தையும் வெட்கத்தையும் விட்டு விட்டதாலும் உலகத்திலுள்ள ஈனத்தையெல்லாம் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டதாலுமே அல்லாமல் வேறில்லை. ஒன்று இந்த ஜாதி ஒழிய வேண்டும். அல்லது இந்த ஜாதிக்கு மானம் ஏற்படும்படி செய்ய வேண்டும். இவற்றுள் இரண்டில் ஒன்று ஏற்படாதவரை இவர்கள் உள்ள நாட்டிற்கு விடுதலை இல்லை என்பது உறுதி.

(குடி அரசு - கட்டுரை - 04.12.1927)

Read 56 times