Print this page

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் (குடி அரசு - கட்டுரை - 04.09.1927)

Rate this item
(0 votes)

திருவாங்கூர் சமஸ்தானத்தில் பொது ஜனங்கள் அதாவது ஈழவர் முதலானவர்களை சில பொதுத் தெருக்களில் நடக்க விடாமல் கொடுமைப்படுத்தி வந்ததின் காரணமாக வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ததும், அது ஒருவாறு அனுகூலமாய் முடிவடைந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அதன் பிறகும் அதே ராஜ்ஜியத்தில் மற்றும் பல பொதுத் தெருக்களில் நடக்க உரிமை கொடுக்காமல் ஜனங்களை உபத்திரவப் படுத்துவதும், சிற்சில இடங்களை அந்த சர்க்கார் அனுமதித்து வருவதும் நேயர்கள் அறிந்திருக்கலாம். ஆனால் நாகர்கோவிலுக்கு அடுத்த சுசீந்திரம் என்னும் ஒரு ஊரிலும் இதே மாதிரி ஈழவர் முதலான ஜனங்களை நடக்க விடாமல் கொடுமைப்படுத்தி வந்ததை உத்தேசித்து அதில் சத்தியாக்கிரகம் சென்ற ´ ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளும் சில அதிகாரிகளுக்கு நல்ல பிள்ளை ஆக வேண்டுமென்று நினைத்தவர்களும், அந்த சத்தியாக்கிரகம் நடத்தின தலைவர்களை ஏமாற்றி, சீக்கிரத்தில் யெல்லோருக்கும் வழி திறந்து விடப்படும் என்றும், சத்தியாக்கிரகத்தை நிறுத்தி விடும்படியும் சொல்லி வஞ்சித்து சத்தியாக்கிரகத்தை திடீரென்று நிறுத்தும்படி செய்து விட்டார்கள்.

இம்மாதிரி சத்தியாக்கிரகம் நிறுத்தி சுமார் ஒன்றரை வருஷமாகியும் நாளதுவரை யாதொரு முடிவும் ஏற்படாமல் இருந்து வருவதோடு, இப்போது சர்க்கார் வேறு ரோட்டு போட்டுக் கொடுப்பதாகவும் அதற்கு ரூபா பத்தாயிரம் வரை அரசாங்கத்தாரால் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. இம் மாதிரி செய்வதற்கு அந்த ஊர்க்காரர்களும் மற்றும் அந்த சத்தியாக்கிரகத்தில் சம்மந்தப்பட்டவர்களும் அனுமதிப்பார்களேயானால் அதைவிட மானக் கேடான காரியம் வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் சத்தியாக்கிரகத் தலைவர்கள் ஊர் ஜனங்களுடனும் சுற்றுப்பக்கத்து பிரமுகர்களுடனும் தொண்டர்களுடனும் கலந்து சர்க்காருக்கு ஒரு மாத வாய்தா கண்டு ஒரு இறுதிக் கடிதத்தை அனுப்பி விட்டு அதற்குள் தேவையான பிரசாரம் செய்து தக்க ஆதரவு தேடிக் கொண்டு உடனே சத்தியாக்கிரகத்தை தொடங்க வேண்டுமென்று விரும்புகிறோம்.

 

தமிழ்நாட்டில் உற்சாகம் உள்ள பல தொண்டர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டு வீண் காரியத்தில் பிரவேசித்து அனாவசியமாய் சிறை சென்று வருகிறார்கள். இப்படி ஒரு காரியம் ஆரம்பித்தால் பலர் இவ்விடமிருந்து கூட வந்தாலும் வருவார்கள். இதை தக்கப்படி யோசிக்க வேணுமாய்க் கோருகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 04.09.1927)

 
Read 55 times