Print this page

அரசியல் புரட்டு (குடி அரசு - தலையங்கம் - 14.08.1927)

Rate this item
(0 votes)

இதுகாலை இந்திய நாட்டை சுயமரியாதை அடைய முடியாமலும் விடுதலை பெற முடியாமலும் உண்மையாய் தடுத்துக் கொண்டிருப்பவை எவை என்பதாக ஒரு அறிஞன் யோசித்துப் பார்ப்பானேயாகில் இந்துமத இயக்கமும் இந்திய அரசியல் இயக்கமுந்தான் என்பதாகவே முடிவு செய்வான்.

நம் மக்களின் சுயமரியாதைக்கு இடையூறாயிருப்பது இந்து மதம் என்பதை அநேக தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம். இது போலவே இந்திய அரசியல் இயக்கத்தால் நமது விடுதலை தடைப்பட்டு அடிமைத்தன்மை பலப்பட்டு வருவதையும் பலதடவை பேசியும் எழுதியும் வந்திருப்பதுடன், இவ்விரண்டும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கும் சுயநலத்திற்கும் பார்ப்பனர்களால் நமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டதென்பதையும் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். எனினும், இதுசமயம் அரசியல் புரட்டைப் பற்றியே இத்தலையங்கம் எழுதுகிறோம். உதாரணமாக அரசியல் இயக்கம் தோற்றுவித்த காலத்திலேயே இதை தோற்றுவித்தவர்கள் கருத்தென்னவென்பதை யோசித்தால் விளங்கும். அதாவது அரசாங்க உத்தியோகத்தில் இந்தியர்கள் சமஉரிமை பெறவும், அரசாங்க அதிகாரத்தில் பங்கு பெறவும், அரசாங்கத்தையே நடத்திக் கொடுப்பதற்கு கட்டுப்பட்டு அரசாங்க சேவை செய்யவுமே தான் கருத்துக் கொண்டு நமது மக்கள் பேரால் சில படித்தவர்கள் என்னும் பார்ப்பனர்கள் அரசியல் இயக்கங்களை ஆரம்பித்தார்களே ஒழிய வேறில்லை.

 

இவ்வியக்கம் தோன்றிய நாள் தொட்டு அதன் உத்தேசப்படியே உத்தியோகங்களும் அதிகாரங்களும் ஏராளமாக பெருகவும், அவைகள் அவ்வளவும் பார்ப்பனர்கள் அடையவும் ஏற்பாடு ஆகி வருகிறதை யார் மறுக்கக்கூடும், பார்ப்பனரல்லாதார் யாராவது இவ்வுத்தியோகங்களிலோ, அதிகாரங்களிலோ பங்கு பெற ஆசைப்பட்டு விட்டால், அந்த க்ஷணமே பார்ப்பன அரசியல் மாற்றமடைந்து விடுகிறது. பார்ப்பனரல்லாதாருக்குள் கக்ஷி உண்டாக்கி விடப்படுகிறது. பார்ப்பனரல்லாதார் மீது தேசத்துரோகமும், வகுப்பு துவேஷமும் கற்பிக்கப்பட்டு விடுகிறது. பார்ப்பனரல்லாதாரும் தங்கள் தங்கள் சமூகத்துக்கு துரோகம் செய்து, சமூகத்தை காட்டிக்கொடுத்து, சமூகத் தலைவர்களையும் கொள்கைகளையும் கொலை செய்தாலொழிய உத்தியோகம் சம்பாதிக்க முடியாத நிலையில் பார்ப்பனர்கள் ஆக்கி விட்டார்கள். யாராவது பார்ப்பனர்களை லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனரல்லாதார் சமூக நலத்தைக் கோரி உழைப்பதின் மூலம் ஏதாவது உத்தியோகம் பெற்று விட்டால் அந்த உத்தியோகத்தை அழிப்பதற்கு எவ்வளவு பிரயத்தனங்கள் வேண்டுமானாலும் செய்து அதை அழித்துவிடுகிறார்கள்.

 

சாதாரணமாய் யோசித்துப் பார்ப்போமானால் பார்ப்பனர்கள் என்ன அக்கிரமங்கள் செய்தாலும் அவர்கள் எப்படியாவது உத்தியோகம் பெற்று தங்கள் வகுப்பு நலத்தை பெருக்க அதை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள். பார்ப்பனரல்லாதார் எவ்வளவு நியாயமாய் நடந்தாலும் அவர்களுக்கு உத்தியோகம் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் அதை தங்கள் வகுப்பு நலத்துக்கு நடத்த விடுகிறதில்லை.

இதற்கு உதாரணம் “மகாத்மா காந்தியால் தேசம் பாழாகி விடுகிறது அராஜகம் வலுத்து விடுகிறது. அவரை ஜெயிலில் பிடித்துப்போட வேண்டும்” என்பதாக மகாகனம் சீனிவாச சாஸ்திரியும், சர்.சங்கர நாயரும் ஆகிய இருவருமே சொன்னார்கள்.

 

ஆனால் கனம் சீனிவாச சாஸ்திரிக்கு µ 4000 ரூபா சம்பளமுள்ள உத்தியோகம் கிடைத்தது. அடுத்த சீர்திருத்தத்தில் கவர்னர் வேலையும் கிடைக்கப் போகிறது. சர். சங்கர நாயருக்கோ கேசு ஏற்பட்டு 2 லட்ச ரூபா கையிலிருந்த பணம் செலவாயிற்று; யாதொரு உத்தியோகத்திற்கும் லாயக்கில்லாமலும் போய்விட்டார்.

தவிர, பிரிட்டிஷாருக்கும், ஜர்மானியருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்கா கவர்மெண்டாருக்கு, இங்கிலீஸ் கவர்ன்மெண்டுக்கு விரோதமாய் கடிதம் எழுதின கூட்டத்தைச் சேர்ந்தவர் சர்.சி.பி. ராம சாமி அய்யர். ஆனால் அவருக்கு மாதம் 2000 ரூபா சம்பளமுள்ள அட்வொகெட் ஜனரல் வேலையும் பிறகு மாதம் 5500 ரூபா சம்பளமுள்ள நிர்வாக சபைசட்ட மெம்பர் வேலையும், இரண்டு தடவை ஜினீவாவுக்கு இந்தியப் பிரதிநிதியாய் போகும் பதவியும், திரும்பி வந்து சட்ட மெம்பர் வேலை காலாவதியானதும், இந்திய கவுன்சில் சட்ட மெம்பர் வேலைகூட கிடைக்கக் கூடிய யோகமும் இருந்து வருகிறது. பஞ்சாப் படுகொலையை ஆதரித்த, கனம் நரசிம்மேஸ்வர சர்மாவுக்கு மாதம் 6500 ரூபா சம்பளமுள்ள இந்திய கவுன்சில் வேலையும் கொடுக்கப்பட்டது.

ஒத்துழையாமையை வைத ஸ்ரீமான் டி. ரங்காச்சாரியாரின் பிள்ளை குட்டிகளுக்கெல்லாம் 1000, 500 சம்பளமுள்ள உத்தியோகங்களும் கொடுக்கப்பட்டது. அவருக்கு இந்தியப் பிரதிநிதியாய் வெளிநாடுகளுக்குப் போகத் தகுந்த பாக்கியமும் கிடைத்தது. அடுத்த சட்ட மெம்பர் வேலைக்கு அஸ்திவாரக் கல்லும் நாட்ட முயற்சி நடந்து வருகிறது.

 

“ஒத்துழையாமை சட்ட விரோதம், காந்திக்கு மூளை இல்லை, தேசத்திற்கு சிறைக்கு போய்விட்டு வந்தவர்களை வகுப்புத் துவேஷத்திற்காக சிறைக்கு அனுப்ப வேண்டும்” என்று சொன்ன ஸ்ரீமான் சீனிவாசயங்கார் காங்கிரஸ் தலைவர், இந்திய அரசியல் தலைவர் முதலிய பெருமைகளோடு விளங்குகிறார்.

ரிஷி மூலம், நதிமூலம் கேழ்கக்கூடாது என்பதுபோல் நமது ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு இவைகள் யாருக்கும் தெரிய முடியாதவர், யாரும் கேட்கவும் கூடாது என்கிற பெருமை படைத்த ஸ்ரீமான் சத்தியமூர்த்தியவர்கள் எவ்வளவு தூரம் தேசத்துக்காக ஊதியம் இல்லாமல் பாடுபட்டவர் எவ்வளவு தூரம் சொந்தமான அபிப்பிராயமுடையவர் எவ்வளவு தூரம் நாணையமானவர் என்பது அறியாதார் ஒருவருமிருக்க மாட்டார்கள். அப்பேர்பட்டவர் இன்று சென்னை மாகாண அரசியல் தலைவராய் விளங்குவதோடு சர்க்காரை எதிர்க்கும் கட்சி தலைவராயும் இருப்பதோடு கவர்னர் பிரபுவையும், கவர்னர் ஜனரல் பிரபுவையும் நேரில் பார்த்துப் பேசக் கூடியவராயும், அடுத்த காங்கிரசுக்கு அரசியல் திட்டம் ஏற்படுத்துபவராகவும் இருக்கிறார். இவர்களெல்லாம் அரசியலின் பேரால் பெரிய மனிதர்களானவர்கள் அல்லவா?

 

இது தவிர, “உத்தியோகம் கூடாது” என்று வேஷம் போடுகிற நம்நாட்டு அரசியல் பார்ப்பனர்களின் குடும்பத்தார்களாகிய ஒரு அய்யங்கார் இன்ஸ்பெக்டர் ஜனரல் ஆப் பஞ்சாயத்து என்பதாக ஸ்ரீமான் என்.கோபால் சாமி அய்யங்கார் µ 2000 ரூ. வாங்கிக் கொண்டிருக்கிறார் மற்றொரு அய்யங்கார் ஸ்ரீமான் வி.டி. கிருஷ்ணமாச்சாரியார் பரோடா திவானாக µ 3000 ரூ வாங்கிக் கொண்டிருக்கிறார், மற்றொரு அய்யங்கார் ஸ்ரீமான் டி. விஜயராகவாச்சாரியார் µ 3000 ரூ. சம்பளம் வாங்கிக்கொண்டு டில்லியில் இருக்கிறார். மற்றொரு பார்ப்பனர் ஸ்ரீ.டி. ராகவய்யர் என்பவர் µ 2000 ரூ. வாங்கிக் கொண்டு ரிவினியூ போர்டு மெம்பர் கூட்டப் பார்க்கிறார். மற்றொரு பார்ப்பனர் ஸ்ரீமான் பி. சீதாராமய்யர் என்பவர் µ 2000 ரூ. வாங்கிக் கொண்டு கவர்மென்ட் காரியதிரிசியாய் இருக்கிறார். இன்னம் எத்தனையோ பார்ப்பனர், கலெக்டர், ஐகோர்ட் ஜட்ஜி முதலிய பெரிய உத்தியோகங்களில் µ 1000, 2000, 3000 வீதம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒருவராவது இந்த உத்தியோகங்கள் பெறுதற்குப் பார்ப்பன சமூகத்தைக் காட்டிக் கொடுத்தாவது பார்ப்பன சமூகங்களின் அக்கிரமமான கொள்கைகளைக் கண்டித்தாவது தங்கள் சகோதரர்களான பார்ப்பனர்களை வைதாவது ஒரு சிறு உத்தியோகமும் பெறவேயில்லை. ஆனால், நம்மவர்கள் ஒரு சிறு முனிசிபல் கவுன்சிலர் வேலை பெறவேண்டுமானால் என்ன செய்தால் கிடைக்கிறது என்பது நேயர்களுக்குத் தெரியும்.

பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு பார்ப்பனரல்லாதாரை வைதால் தான் கிடைக்கிறது. உதாரணமாக இப்போதைய மந்திரிகள் தங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு தூரம் பார்ப்பனர்களுக்கு கையாளாக இருந்தால் முடிகிறது என்பதைப் பார்த்தால் தெரியும். அன்றியும் ஸ்ரீமான்கள் டி.ஏ. ராமலிங்கம் செட்டியாரும் வெள்ளியங்கிரிக் கவுண்டரும் முறையே எவ்வளவு எவ்வளவு படித்தவர்கள் எவ்வளவு பெரிய குடும்பத்தார்கள் கவர்ன்மெண்டுக்கு எவ்வளவு தூரம் நல்ல பிள்ளைகளாய் இருந்தவர்கள் இப்படியெல்லாம் இருந்தும் ஒரு µ 2000 ரூபாய் உத்தியோகத்திற்கும் ஒரு சட்டசபை முதலிய சிறு பதவிகளுக்கும் எவ்வளவு பெரிய கொலை பாதகம் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. தங்கள் சமூகத்தார் கூடி ஒரு ஒழுங்குபடியான சபையின் மூலம் விதிப்படியான பிரதிநிதிகள் கூடி செய்த தீர்மானத்தை அழிப்பதற்கு எவ்வளவு பிரயத்தனங்கள் செய்கிறார்கள். இன்னும் ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது ஒரு பதவியோ உத்தியோகமோ வேண்டியிருந்தால் இன்னமும் என்ன என்ன செய்யும்படி ஏற்பட்டு விடுகிறது என்பவைகளைப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. இதுகளுக்கெல்லாம் காரணம் அரசியல் புரட்டுத்தானா அல்லவா? இந்த உத்தியோகங்கள் அரசியல் புரட்டுகளினால் உண்டானதுகளா அல்லவா? இதுகள் பார்ப்பனரல்லாதார் கழுத்தைத் திருகுகிறதா இல்லையா? இவற்றை எதற்காக சொல்லுகிறோம் என்றால் நமது நாட்டு அரசியல் இயக்கம் வெறும் புரட்டும் அயோக்கியத்தனமும் கொண்டது என்பதையும் அது பார்ப்பனர்கள் பிழைக்கவும் பார்ப்பனரல்லாதாரை அழிக்கவுமான நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்டு அந்தப்படியே நடந்து வருகிறது என்பதையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் யோக்கியமான பார்ப்பனரல்லாதார் அரசியல் மூலம் தேசத்திற்கோ, சமூகத்திற்கோ நன்மை செய்யமுடியாது என்பதையும் வெளியாக்கச் செய்யவும் எப்படியாவது இம் மாதிரியான அரசியல் இயக்கங்களை ஒழித்தாலல்லது நாட்டிற்கு விடுதலையோ நமது சமூகத்திற்கு சுயமரியாதையோ கிடைக்க மார்க்கமில்லை என்பதை ஜனங்கள் அறியவும் இதை எழுதுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 14.08.1927)

Read 18 times