Print this page

இதற்கு என்ன பெயர்? (குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.03.1927)

Rate this item
(0 votes)

கோயமுத்தூர் நகர பரிபாலன சபையில் பார்ப்பன கவுன்சிலர்களின் துவேஷங்களும் உபத்திரவங்களும் கோயமுத்தூர் முனிசிபல் சேர்மனிடம் பொறாமை கொண்ட சில ஆசாமிகளின் விஷமங்களும் கோயமுத்தூர் விஷயங்களைப் பத்திரிகையில் கவனித்து வருகிறவர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். இப்போது அது நாளுக்கு நாள் முற்றி வருவதுடன் அப்பார்ப்பனர்களுக்கு நாளுக்கு நாள் புத்திகூட மழுங்கிக் கொண்டு வருகிறதென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. சென்ற வாரத்தில் கோயமுத்தூர் முனிசிபாலிட்டியில் ஒரு பார்ப்பனர் பார்ப்பனரல்லாத சேர்மெனைப் பற்றி ஒரு தீர்மானம் கொண்டு வந்த விஷயம், மற்றொரு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். அதாவது சேர்மனுக்கு முனிசிபாலிட்டியில் அதிகமான வேலை இருப்பதால், அவர் தனக்குள்ள கௌரவ உத்தியோகங்களில் ஏதாவது ஒன்றை ராஜினாமா கொடுத்துவிட வேண்டும் என்ற பொருள் கொண்ட தீர்மானம் கொண்டு வந்தாராம். இத்தீர்மானத்தை ஈரோடு சேர்மன் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச முதலியார் அவர்களாயிருந்தால் காலடியில் போட்டு நசுக்கி இருப்பார். ஸ்ரீமான் ரத்தினசபாபதி முதலியாரோ அவ்விதம் செய்யாமல் வேண்டுமென்றே கண்ணியமாய் அதை ஏற்றுக் கொண்டு விவகாரத்திற்கு விட்டதோடு தானும் அக்கிராசன ஸ்தானத்திலிருந்து மாறி தாராளமாய் அங்கத்தினர்கள் பேசவும் தன்பேரில் குற்றம் இருந்தால் எடுத்துக் காட்டவும் இடம் கொடுத்தார்.

ambedkar periyar 400இதைக் கொண்டு வந்தவர்கள் மூன்று வித யோக்கியதையுடையவர்கள் என்று சொல்லப்படுபவர்கள். அதாவது படித்தவர் என்பதோடு இரண்டாவது சட்டம் தெரிந்தவரென்றும் சொல்லிக் கொள்ள உரிமையுடையவர்கள். மூன்றாவது பிராமணர் என்றும் உயர்ந்த ஜாதியார் என்றும் சொல்லிக் கொள்ளும் ஆணவமும் படைத்தவர்கள். இத்தீர்மானமானது படித்த அறிவை ஆதாரமாகக் கொண்டதா? அல்லது சட்டத்தை ஆதாரமாகக் கொண்டதா? அல்லது பிராமணத் தன்மையை ஆதாரமாகக் கொண்டதா? என்று பார்த்தால் பார்ப்பனர் பிறவிக் குணம் என்று சொல்ல வேண்டியதல்லாமல் வேறென்ன சொல்லுவதென்று நமக்கு விளங்கவில்லை.

 

இத்தீர்மானத்தை அங்கிருந்த பார்ப்பனரல்லாத கவுன்சிலர் 25 பேர்களில் ஒருவராவது ஆதரிக்கவில்லை. கடைசியாக ஸ்ரீமான் சி.எஸ். சாம்பமூர்த்தி அய்யர் என்கிற ஒரு பார்ப்பனர் ஆதரித்தாராம். ஸ்ரீமான் சி.எஸ். சாம்பமூர்த்தி அய்யர் என்பவர் கோயமுத்தூர் பார்ப்பனர்களுக்கும் கொஞ்சம் புத்திசாலி என்றும், மற்ற பார்ப்பனர்களைப்போல அவ்வளவு முட்டாள்தனமாய் சிக்கிக் கொள்வதோ, காரியங்களைச் செய்வதோயில்லாமல் தந்திரமாய் நடந்து கொள்ளக்கூடிய சாமர்த்தியசாலி என்றும் பெயர் வாங்கினவர். அப்படிப்பட்டவருக்கும் பார்ப்பனரல்லாதாரிடத்தில் ஏற்பட்ட துவேஷத்தின் போதையும் பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்கிற ஆத்திரமும் அவருடைய அறிவையும் கூட மழுங்கச் செய்து அத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி செய்துவிட்டதென்றால் மற்ற பார்ப்பனர்களால் எவ்வளவு உபத்திரவம் நடந்து கொண்டிருக்கும் என்பதை வாசகர்களே கவனிக்க வேண்டும். அல்லாமலும் இந்த தீர்மானத்தில் வெறும் குறும்பு இல்லாமல் வேறு ஏதாவது கண்ணியமான கருத்து அடங்கி இருக்கிறதா? இதற்கு பார்ப்பனர்களின் துவேஷமும் உபத்திரவமுமென்று சொல்வதல்லாமல் வேறு என்ன பெயரிடுவது?

 

ஸ்ரீமான் இரத்தினசபாபதி முதலியாருக்கு சட்டசபை மெம்பர் வேலையோ, ஜில்லா போர்டு தலைவர் வேலையோ வைத்து இருப்பதானால் முனிசிபல் சேர்மனுக்கு லாயக்கில்லை என்று சொல்வதனால் மற்றவர்களின் யோக்கியதையை அவரவர்களே யோசித்துப் பார்க்கட்டும். ஸ்ரீமான் இரத்தினசபாபதி முதலியாருக்காவது அவர் சாப்பாட்டுக்கு தாராளமாக அவருடைய பெரியவர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இம்மாதிரியான பொது காரியம் தவிர அவருக்கு வேறு ஒரு வேலையும் இது சமயம் இல்லை. அதாவது விவசாயமோ, வியாபாரமோ, வக்கீல் பிழைப்போ ஆகிய இதுகளில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரு தொந்தரவும் கிடையாது. இவருக்கே இவ்வேலைகள் லாயக்கில்லை என்று சொல்வதானால் அன்றாடம் பலர் குடியைக் கெடுத்தாலொழிய ஜீவனமில்லை, சொக்காயில்லை, தலைப்பாகையில்லை, வீட்டு வாடகைக்கு மார்க்கமில்லை மற்றும் 12 மணி நேரமும் தங்கள் வயிற்றுப் பாட்டிற்கே நாணயமற்ற வழியில் உழைக்க வேண்டியவர்களும் தங்களது அறிவு, கல்வி, நேரம் முழுவதையும் அன்னியருக்கு விற்று ஜீவிக்கிறவர்களுக்கு லாயக்குண்டா? என்பதையும் அவர்கள் வசம் பொது காரியத்தை ஒப்புவிப்பது இதை விட நல்லதா? என்பதையும் வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும். ஆனால் இவற்றையெல்லாம் கவுன்சில் விவாதத்தின் போதே மற்ற கவுன்சிலர்கள் நன்றாய் எடுத்துக் காட்டி புத்தி வரும்படி செய்திருக்கிறதாக பத்திரிகையில் பார்த்தோம். ஆனாலும், பார்ப்பனரல்லாதாருக்கு எங்கேயாவது கொஞ்சம் ஆதிக்கமிருந்தால் அவ்விஷயத்தில் இவ்வளவு அக்கிரமமாகவும், யோக்கியப் பொறுப்பற்றதனமாகவும் ஒவ்வொரு பார்ப்பனரும் நடந்துகொண்டு அதை ஒழிக்கப் பார்ப்பதும், இதை யாராவது கண்டித்தால் இது பார்ப்பன துவேஷமென்று சொல்லுவதுமானால் இதன் அர்த்தமென்ன?

 

ஸ்ரீமான் சாம்பமூர்த்தி அய்யரைப்போல் பொறுப்பும், யோக்கியதையும், புத்தியும் உள்ளதாகக் கருதப்படும் பார்ப்பனர்கள் இவ்வித குறைவான காரியங்களில் தலையிடாமலும், தலையிடுபவர்களுக்கும் புத்தி சொல்லி இரு சமூகத்திற்கு ஒற்றுமை ஏற்படுவதற்கு வேண்டிய காரியங்கள் செய்ய வேண்டியதிருக்க, அதை மறந்து தானும் இதில் சரிபங்கு எடுத்துக் கொள்வதானால், பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் ஒற்றுமைக்கும் பரஸ்பர அன்புக்கும் இடம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறோம்? தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டும் ஒரு யோக்கியமான பார்ப்பனரல்லாதாராயிருப்பதால் அவரையும் அங்கு இரண்டு பார்ப்பனர்கள் இதுபோலவே கொடுமை செய்து வருகிறார்கள். பார்ப்பனப் பத்திரிகை ஆணவமானது இவற்றிற்கு உதவியாயிருக்கிறது. சேர்மனின் அக்கிரமங்களைக் கண்டிக்க ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ஒவ்வொரு ஓட்டருக்கும் வரி கொடுப்போருக்கும் உரிமையுண்டு. அதை நாம் ஒரு சிறிதும் ஆnக்ஷபிக்கவில்லை. பார்ப்பனரல்லாதார் என்கிற காரணத்திற்காக விட்டு விடும்படியும் நாம் சொல்லவில்லை. நன்றாக யோக்கியமான வழியில் கண்டிக்கட்டும். ஆனால் சேர்மனுக்கு இத்தனை கவுரவம் கூடாதென்று சொல்லுவதும், இவர் கூடாது என்று சொல்லுவதும் எவ்வளவு அல்பத்தனமும் கெட்ட எண்ணமும் என்பதுதான் நமது கேள்வி.

ஈரோட்டில் இரவு பகலாக பணம் திருட்டுப் போகிறது. சாமான்கள் திருட்டுப் போகிறது. வரிகள் கொள்ளைப் போகிறது. வரிப்பணங்கள் நாசமாகிறது. அக்கிரம வரிகள் தலைவிரித்தாடுகிறது. இவ்வளவும் செய்யும் நாணயமற்ற சேர்மனும் இங்குள்ள பார்ப்பன கவுன்சிலரும் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டு கொஞ்சுகிறார்கள். கவுன்சிலிலும் கேள்வி இல்லை, மந்திரி சபையிலும் கேள்வி இல்லை, சட்டசபையிலும் கேள்வி இல்லை. கோயமுத்தூர் சேர்மன் மீது ஒரு கவுன்சிலராவது இவ்வளவு பொறாமையுடனும் கெட்ட எண்ணத்துடனும் தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலராவது இம் மாதிரியாக ஒரு குற்றத்தையும் சொல்லாமல் மேலும் மேலும் சேர்மனைப் புகழ்ந்துகொண்டே இம்மாதிரி விஷமம் செய்வதானால் இச்சமூகத்தில் நல்ல எண்ணத்திலும் மானம் வெட்கத்திலும் இனியுமா சந்தேகம் என்றுதான் கேட்கிறோம். இது சமயம் பார்ப்பனர்களுக்கு தங்களைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்திலிருப்பதாலும் தங்களைப் பிறர் வந்து நத்தும்படியான தொழிலிலிருப்பதாலும் செல்வாக்குள்ள பத்திரிகைகள் தங்களுடையதாக இருப்பதாலும் இதுவும் செய்யலாம் இன்னும் அநேகம் செய்யலாம். இதைப்பற்றி யாராவது பேசினால் அவர்களை ஒழித்து விடலாமென்கிற ஆணவம் கொண்டாலும் கூட மக்கள் உண்மை அறிந்து தங்கள் சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம் செய்யும் உணர்ச்சி வந்தால் அப்போது இவர்கள் கதி என்ன ஆகும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். ஸ்ரீமான் சாம்பமூர்த்தி அய்யர் அவர்கள் போன்றார்கள் இம் மாதிரி விஷயங்களில் தலையிட்டிருக்காவிட்டால் இதைப்பற்றி இவ்வளவு தூரம் எழுத முன்வந்திருக்க மாட்டோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.03.1927)

 
Read 28 times