Print this page

மதுரை அமெரிக்கன் காலேஜ் மாணவர்களுக்குள் சுயமரியாதை உதயம் (குடி அரசு - செய்தி விளக்க குறிப்பு - 06.03.1927)

Rate this item
(0 votes)

சென்ற வாரம் சென்னை பச்சையப்பா ஆஸ்ட்டலில் பார்ப்பனரல்லாத வாலிபர்கள் தங்களுக்கு பார்ப்பனரல்லாத சமையல்காரரையே வைத்து சமையல் செய்து சாப்பிட்டு வருவதும் அதன் காரணங்களையும் எழுதி மற்ற காலேஜ் பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம். அதற்கிணங்க இவ்வாரம் மதுரை அமெரிக்கன் காலேஜிலுள்ள பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் தங்களுக்குள் பார்ப்பன சமையல்காரரைத் தள்ளிவிட்டு பார்ப்பனரல்லாத சமையல்காரரை வைத்து சமைத்து சாப்பிடுவதுடன் வகுப்பு வித்தியாசமில்லாமல் தங்களுடன் கூட உட்கார்ந்து சாப்பிட சம்மதிக்கும் மாணவர்களையெல்லாம் சேர்த்து ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடத் தீர்மானித்து அந்தப்படி நடத்தி வருகிறார்கள் என்பதைக் கேட்க மிகவும் சந்தோஷமடைகிறோம்.

 

மதுரை காலேஜில் இப்படி நேர்ந்ததற்கு ஒரு தகுந்த காரணமும் சொல்லப்பட்டது. அதாவது அக்காலேஜ் மாணவர்களில் இரண்டொரு பார்ப்பன மாணவர்களுக்கும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் மிகவும் நேசமாய் இருந்ததோடு மாமிச உணவு முதல் கொண்டு வித்தியாசமில்லாமல் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டு வருவது வழக்கமாய் இருந்து வந்தது. சமீபத்தில் ஒரு நாள் அக்காலேஜ் மாணவர்கள் சிலர் கூடி ஒரு சமபந்தி போஜனம் ஒன்று நடத்தினார்கள். இதற்கு முன்னே சொன்ன அதாவது மாமிசம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்ப்பன வாலிபர்களையும் அழைக்கப்பட்டதாம். அவர்கள் பார்ப்பனரல்லாதாருடன் கலந்து உட்கார்ந்து சாப்பிட மறுத்துவிட்டார்களாம். இதன் பேரில் மற்ற பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கும் சுயமரியாதை உதயமாகி இனி பார்ப்பன சமையல்காரர் சமைக்க சாப்பிடுவதில்லை என்றும் தங்களுக்குள் எல்லோரும் ஒன்றாய் இருந்து சாப்பிடுவதென்றும் தீர்மானித்துக் கொண்டார்களாம். ஆகவே எப்படியாவது மக்களுக்கு சுயமரியாதை உதயமாவதைப் பார்த்து சந்தோஷமடைகிறோம். இனி மற்ற ஹாஸ்ட்டல் மாணவர்கள் எப்போது பின்பற்றுவார்களோ?

(குடி அரசு - செய்தி விளக்க குறிப்பு - 06.03.1927)

 
Read 56 times