Print this page

பொதுநலம். குடி அரசு - 5.2.1933

Rate this item
(0 votes)

அதுபோலவேதான் பொது நல சேவை என்பதும், மனித சமூக சம தர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொது நலம் என்றால் என்ன? எல்லோருக்குமே நன்மை செய்ய வேண்டுமென்பதுதான் அதன் பொருளாக முடியும். கொடுமைப்படுத்துகிற கூட்டத்துக்கும் - கொடுமைப்படுகின்ற கூட்டத்துக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும். கஷ்டப்பட்ட - படுகின்ற கூட்டத்துக்குத் தான் நன்மை செய்ய வேண்டும்.

ஆகவே நாம் ஒரு கூட்டத்தாருக்குத்தான், ஒரு வகுப்பாருக்குத்தான் நன்மை செய்கின்றவர்களாவோம். அது மற்றொரு வகுப்பாருக்கு தீமையாய்த் தோன்றலாம். நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. திருடனுக்கும் திருட்டுக் கொடுப்பவனுக்கும் எப்படி நன்மை செய்ய முடியும். " திருட்டுப்புத்தியை விட்டுவிடு, இல்லாவிட்டால் விட்டு விடும்படி செய்வேன்” என்பதுதான் திருடனுக்குச் செய்யும் நன்மையாகும். இதை நன்மையாகத் திருடன் மதிப் பானா? ஆதலால் நமது சேவை ஒரு நாளும் பணக்காரனுக்கும், முதலாளிக் கும் நன்மையாய் காணமுடியாது. அவர்களுக்கு இனியும் நன்மை செய்வது என்பது நமது கொள்கையுமல்ல. ஆகவே நாம் பொதுநல சேவைக்காரரல்ல. நாம் புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவோம். நமக்கு சீர்திருத்தக் காரர்களும், பொதுநல சேவைக்காரர்களும் பெரிய விரோதிகளே யாவார்கள். புரட்சி ஆரம்பித்த காலங்களில்தான் சீர்திருத்தங்கள், பொதுநல சேவைகள் புறப்படும். எதற்கு? புரட்சிகளை அடக்குவதற்கு. ஆகையால் நாம் எந்த வித சீர்திருத்தவாதிகளுடனும் எந்த வித பொதுநலவாதிகளுடனும் சேராமல் தனித்து நின்றே புரட்சி செய்ய வேண்டும்.

குடி அரசு - 5.2.1933

Read 130 times