Print this page

5000 ரூபாய் இனாம். குடி அரசு - கட்டுரை - 10.10.1926

Rate this item
(0 votes)

தமிழ்நாட்டுச் சார்பாக இந்திய சட்டசபைக்குச் சென்ற தடவை ஒருவர் தவிர எல்லோரும் ஐயங்கார் பார்ப்பனர்களாகவே நின்றார்கள். இந்தத் தடவையும் அதேமாதிரி எல்லோரும் ஐயங்கார் பார்ப்பனர்களாகவே நிற்கிறார்கள். பார்ப்பனரல்லாதார் சார்பாய் இந்திய சட்டசபைக்கு சென்னை நகரத் தொகுதிக்கு நிற்கும் ஸ்ரீமான் சக்கரை செட்டியாருக்கு விரோதமாய் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் நிற்கிறார். எப்படியாவது ஸ்ரீமான் சக்கரை செட்டியாரை தோற்கடித்துத்தான் வெற்றிபெற ஆசைப்பட்டு பணங் கொடுத்து ஆள்களைச் சேர்த்து பொய்ப் பிரசாரம் செய்கிறார். இதற்காகத் தன்னைப் பெரிய தியாகி என்று சொல்லச் சொல்லுகிறார்; தனக்கு ஓட்டுக் கொடுத்தால் சீக்கிரம் சுயராஜ்யம் வருமென்று சொல்லச் சொல்லுகிறார்.

ஆனால் ஒருவராவது இதுவரை ஐயங்கார் என்ன தியாகம் செய்தார் என்று சொல்லவில்லை. ஒருவராவது இதுவரை ஐயங்காரின் சுயராஜ்யத் திட்டம் இன்னது என்று சொல்லவில்லை. ஐயங்கார் தியாகமெல்லாம் வக்கீல் உத்தியோகத்தில் மாதம் பத்தாயிரம், இருபதாயிரம் சம்பாதித்துப் பணம் சேர்த்து வருவதோடு, காலி ஆசாமிகளுக்கும் கொஞ்சம் கூலி கொடுத்து பார்ப்பனரல்லாதார் கட்சியையும், பார்ப்பனரல்லாதார் தலைவர்களையும் திட்டும்படி சொல்லுவதும், கூட்டங்களில் கலகம் செய்யச் செய்வதும், பணம் கொடுத்துப் பிரசாரம் செய்து காங்கிரஸ் தலைவர் பதவி பெற்றதுமானவை தவிர வேறு என்ன என்ன தியாகங்கள் செய்திருக்கிறார் என்று சொல்லுகிறவர்களுக்கு 5000 ரூபாய் இனாம்.

 ஸ்ரீமான் ஐயங்காரின் சுயராஜ்யத் திட்டம் பார்ப்பனரல்லாத கட்சியை ஒழித்து, பார்ப்பனரல்லாத மந்திரிகளைத் தள்ளிவிட்டு, அந்த ஸ்தானத்தில் தாங்களும் தங்கள் இனத்தாரும் உட்கார்ந்து கொண்டு, பார்ப்பனரல்லாதார் அனுபவித்து வருவதாய்ச் சொல்லும் அதிகாரங்களையும், வேறு பதவிகளையும், உத்தியோகங்களையும் பிடுங்கிப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதைத் தவிர உண்மையான சுயராஜ்யத் திட்டம் ஏதாவது அவருள்ளத்தில் இருக்கிறதா என்று கண்டு பிடித்துச் சொல்லுகிறவர்களுக்கு 1000 ரூபாய் இனாம். ஸ்ரீமான் ஐயங்காருக்காகப் பிரசாரம் செய்கிறவர்களிலாவது மேடைமேல் நின்று பேசுகிறவர்களிலாவது பத்திரிகையில் எழுதுகிறவர்களிலாவது ஸ்ரீமான் ஐயங்காரிடம் கூலி வாங்காமல் பேசுகிற எழுதுகிற ஒரு நபரையாவது காட்டுபவர்களுக்கு 1500 ரூபாய் இனாம்.
இப்போது அவர் கூலி கொடுத்து பொய்ப் பிரசாரம் செய்விக்கும் ஆள்களையாவது, கூட்டத்தில் கலகம் செய்விக்கும் ஆள்களையாவது நவம்பர் மாதம் 8-ந் தேதி (எலெக்ஷன்) ஆனபிறகு கிட்டத்தில் சேர்ப்பார் என்று ரூபிப்பவருக்கு 2000 ரூபாய் இனாம்.

சென்னைவாசிகளே! சக்கரை செட்டியாரின் தோல்வி பார்ப்பனரல்லாதாரின் தோல்வியாகும். ஐயங்காரின் வெற்றி பார்ப்பன ஆதிக்கத்திற்கு வெற்றி ஆகும். ஆதலால் வீணாகக் கூலிக்கு மாரடிப்பவர்கள் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள்.

குடி அரசு - கட்டுரை - 10.10.1926

Read 54 times