Print this page
Monday, 28 September 2020 01:47

இரயில் நிலையங்களில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டம்

Rate this item
(5 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 80

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர்-கா.கருமலையப்பன்

 

இரயில் நிலையங்களில்

இந்திப் பெயர் அழிப்புப் போராட்டம்

 

இந்தி எதிர்ப்பின் பயன் இந்தி எதிர்ப்புக்கு இது (ஆகஸ்டு கிளர்ச்சி) மூன்றாவது போராட்டமாகும். முதல் போராட்டம் 1938 இல் நடந்தது. அப்போராட்டம் 1,500 பேர்களைச் சிறைக்கு அனுப்பி, 2 பேர்களின் உயிர்களை வாங்கி, பல குடும்பங்கள் பல இன்னலடைய நேரச் செய்து, முடிவில் கட்டாயம் (கம்பல்சரி) என்கின்ற சொல் மாத்திரம் நீக்கப்பட்டது. என்றாலும், கூரை வீட்டில் தீப்பற்றியது போல், அதுமுதல் பள்ளிகளில் எல்லாம் இந்தி வாழ்ந்தும், வளர்ந்துமே வந்தது. நாட்டிலும் வடவர்கள் பொருளுதவியாலும், பார்ப்பனர்கள் முயற்சியாலும், காங்கிரசினுடைய ஆதரவாலும் இந்தி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்க்கப்பட்டே வந்தது; வருகிறது.

இந்திக் கிளர்ச்சியின் தன்மை அந்தப்படியாக இருந்த போதிலும், அந்த 1938 ஆம் வருடத்திய ஆட்சியில் நுழைக்கப்பட்ட கட்டாய இந்தி பற்றிய கிளர்ச்சியானது, தமிழ்நாட்டிற்கே (திராவிடத்திற்கே) தமிழர்களுக்கே ஒரு திருப்புமுனையாகிப் (turningpoint) பெருவாரியான பாமரர்களுக்குப் பார்ப்பனர்களின் உண்மைத் தத்துவத்தை அறியச் செய்யவும், தமிழ் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் தமிழைப் பற்றிய கவலை ஏற்படவும், தமிழனின் - தமிழ்நாட்டின் (திராவிடத்தின்) சரித்திரம் மக்கள் கவனத்திற்கு வரவும், தமிழ்நாடு சுதந்திரமாகத் தனித்தியங்க வேண்டும் என்கின்ற கொள்கையைக் காங்கிரசிலுள்ள தமிழர்கள் தவிர மற்ற பொதுமக்கள் உள்பட யாவரும் ஆதரிக்கவுமான ஒரு நிலை ஏற்பட்டது. நம் வாழ்நாளில் அதுவரை தமிழ் பற்றி, பார்ப்பனர் பற்றி ஏற்பட்டிராத ஒரு கிளர்ச்சி அச்சமயத்தில் ஏற்பட்ட, இலகுவில் மறைந்துவிட முடியாததான ஒரு உணர்ச்சியை நிலை நிறுத்தியது என்று சொல்லலாம்.

மற்றும் அக்கிளர்ச்சியானது தமிழர்களின் அரசியல், உத்தியோக இயல், மத இயல், கடவுள் இயல், கலை இயல் முதலிய பல முக்கிய இயல்களிலும் ஒரு நல்ல உணர்ச்சியும் மாற்றமும் ஏற்படப் பெரும் காரணமாக இருந்தது என்றும் கூறலாம்.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், அக்கிளர்ச்சிக்கு அப்புறமே திராவிட அதிகாரிகள், சிப்பந்திகள் முதலியவர்களும், மாணவர்கள், ஆசிரியர்கள் முதலியவர்களும் - ஏன், மந்திரிகள் முதலியவர்களுங்கூட தகுந்த அளவுக்கு ஆரியர் - திராவிடர் என்ற பேதமும், ஆரியக்கலை - திராவிடக்கலை என்ற பேதமும் உணர நேர்ந்ததோடு காரியத்திலும் நடைபெறச் சிறிது வாய்ப்பும் ஏற்பட முடிந்தது எனலாம்.

இவை மாத்திரமல்லாமல், அக்கிளர்ச்சிக்கு அப்புறமே பார்ப்பனர்களும் தங்கள் போக்கைச் சிறிதாவது மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை யாரும் மறைக்க முடியாது. பார்ப்பனர்கள் தேவார, திருவாசக, பிரபந்த மாநாட்டைத் திறப்பது, பார்ப்பன குரு சங்கராச்சாரி யார், திராவிட குரு பண்டார சந்நதி வீட்டிற்குச் சென்று கூட்டு முயற்சிக்கு ஒப்பந்தம் பேசுவதுமான காரியங்களே பார்ப்பனர்களின் போக்கு மாற்றத்திற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகும்.

மற்றும் சரிபகுதி பார்ப்பனர்கள் இருந்து வந்த மந்திரி சபையானது, 13, 15 க்கு 2 பேர், 3 பேர் என்ற அளவிற்குச் சுருங்க நேரிட்டதும், 1938 ஆம் ஆண்டு இந்தி கிளர்ச்சிக்குப் பின்புதான். எனவே, 1938 ஆம் ஆண்டைய முதலாவது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி - கட்டாய இந்தியை எடுக்கச் செய்தது மாத்திரமல்லாமல், மேற்கண்ட மற்ற காரியங்களையும் செய்ய உதவியிருக்கிறது.

அடுத்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது, 1938க்கு அப்புறம் காங்கிரஸ் இரண்டாவது தடவையாக மந்திரிசபைப் பீடம் ஏறி ஆட்சி செலுத்திய காலமாகிய 1948 ஆம் ஆண்டில் ஆகும். அந்த சமயத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட ஒரு சாக்குக் கிடைத்தது. அதன் மீது ஓர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி துவக்கப்பட்டது. அந்தக் கிளர்ச்சியும் பெருத்த ஆடம்பரமாய் மக்கள் கவனத்தைக் கவரும்படியாய் நடக்காவிட்டாலும் - அப்படி நடைபெறாததற்குக் காரணம் நாமல்ல; சர்க்காரேயாகும். ஏனென்றால், கிளர்ச்சிக்காரரை, மறியல் செய்தவர்களை மற்றும் யாரையும் சிறை பிடிக்கவில்லை. நல்ல அடக்குமுறை எடுக்கவில்லை. அதனால், மக்களுக்கு உணர்ச்சியும் உற்சாகமும் ஏற்படவில்லை. ஆனால், கிளர்ச்சி துவக்கமானதும் மாபெரும் அஸ்திவாரத்தின் மீதே துவக்கப்பட்டது.

அதாவது, 1948 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாடானது சென்னையில் (சென்ட் மேரீஸ் ஹாலில்) மறைமலையடிகள் தலைமையில், தெருக்கள் எல்லாம் அடைபடும்படி 25,000 மக்கள் முன்னிலையில், அந்த ஹாலும் அந்தத் தெருவும் அதுவரை கண்டிராத அளவு கூட்டத்தில் மகா உற்சாகத்துடன் கூடியது.

அதில் மறைமலையடிகள், தமிழ்ப்பெரியார் திரு.வி.க. அவர்கள் முதல் தோழர்கள் கதர் பிரதிநிதி நாரண துரைக்கண்ணனார், காங்கிரஸ் பிரதிநிதி ம.பொ.சி., கிறித்தவப் பிரதிநிதி ரெவரெண்ட் அருள் தங்கையா, முஸ்லிம் லீக் பிரதிநிதி அப்துல் மஜீத், டாக்டர். ஏ. கிருஷ்ணசாமி, வி.வி. இராமசாமி, மாஜி மேயர் இராதாகிருஷ்ணப்பிள்ளை, கே. ஏ. பி. விசுவநாதன் முதலிய திராவிடர் கழகத்தினர் அல்லாதவர்களும், அதன் எதிரிகளும் ஏராளமாக வந்திருந்தார்கள். இம்மாநாடு தவிர மற்றம் பல மாநாடுகள் - புலவர் மாநாடு, மாணவர் மாநாடு, பெண்கள் மாநாடு முதலிய பல மாநாடுகள் கூடி இந்தியை எதிர்த்து தீர்மானங்கள் செய்ததோடு, நேரடிக் கிளர்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் முன் வந்தார்கள். அடக்கு முறை இல்லாததால் கிளர்ச்சி சிலருக்குச் சப்பிட்டுப் போனாலும் அக்கிளர்ச்சியும் வெற்றி பெற்றது.

அதாவது, முன்னையக் கிளர்ச்சி வெற்றி போலவே இதன் பயனாகவும் சர்க்கார் கொள்கையில் இந்தி கட்டாயம் இல்லை என்று சொல்லப்பட்டு, அந்தப்படியே கட்டாயம் எடுக்கப்பட்டதாக மந்திரிகளாலேயே அறிவிக்கவும் பட்டது. இதனாலும் தமிழருக்குள் - தூண்டிவிடப்பட்ட விளக்கு போல் ஓர் அளவுக்கு விழிப்பு ஏற்பட்டது.

எனவே, இதற்கு முன் 1938 லும், 1948 லும் நடந்த இரண்டு கிளர்ச்சிகளும் அந்தக் காரியக் கொள்கையில் வெற்றி பெற்றன என்றாலும் அந்தக் காரியத்தில் முழு வெற்றி என்று சொல்ல முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்ளத் தயங்கவில்லை. ஆனால், வேறு பல காரியங்கள் அதுவும் சுலபத்தில் நீண்ட நாள் முயற்சியாலும், பிரச்சாரத்தாலும் கூட நடைபெறச் செய்ய முடியாத காரியங்கள் நடந்திருப்பதை நான் பெருமையோடு, அகக்களிப்போடு சொல்லிக்கொள்கிறேன்.

இது, அதாவது, ஆகஸ்ட் ஒன்றாந்தேதி நடப்பது 3 ஆவது இந்திக் கிளர்ச்சி என்பதோடு, அதுவும் காங்கிரசின் 3 ஆவது மந்திரிசபை ஆட்சியின் போது நடைபெறுகிற 3 ஆவது கிளர்ச்சி ஆகும்.

இக்கிளர்ச்சியானது முன்னைய கிளர்ச்சிகள் போன்றதல்ல. அவை கட்டாய இந்தி கூடாது என்பதற்காக நடத்தப்பட்டவை. அவற்றில் பார்ப்பானது வேடமே முக்கியமாய் இருந்தது. என்னைப் பொறுத்தவரை அக்குறிக்கோள் வைத்தும் அவை நடத்தப்பட்டவையாகும்.

ஆனால், இது அப்படியல்ல. கட்டாய இந்தி கூடாது என்பது மாத்திரமல்ல; அப்படியானால் குள்ளநரிக் கூட்டமெல்லாம் இதில் புகுந்து துரோகம் செய்து விட முடியும். இதற்கு யாரும் நானும் கூடத்தான் என்று சொல்லிவிட முடியும். ஆதலால், இந்தக்கிளர்ச்சி கட்டாய முறைக்கு மாத்திரமல்லாமல் அரசியலிலும், சமுதாய இயலிலும், கல்வி இயலி லும், அரசாங்க ஆதரவில், அரசாங்க நடப்பில் திராவிட நாட்டில் (தமிழ் நாட்டில்) இந்தி தலைகாட்டக் கூடாது என்பதற்கு ஆகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இரயில் பலகைகளில், போஸ்ட் ஆபிசுகளில், கார்டு கவர்களில், போஸ்ட் முத்திரைகளில் கட்டாயமாக இந்தியைச் சர்க்கார் புகுத்துகிறார்கள்? அவர்கள் ஆட்சி முறையில் குழாயில் தண்ணீர் வருவதுபோல் வந்து, இந்தி புகுந்துகொண்டு இருக்கிறது. இதை எப்படிக் கட்டாயமாகப் புகுத்துதல் என்று சொல்ல முடியும்?

முன்பு ஆங்கிலேயன் ஆட்சியினால் தான் சர்வம் ஆங்கிலமயமாக்கப்பட்டது. இதில் கட்டாயம் எதுவும் இல்லையே! இந்நாட்டிலுள்ள எல்லாப் பார்ப்பனரும் ஆங்கிலத்தை வரவேற்றார்கள்; அதற்காக ஆங்கி லேயனுக்கு நன்றி செலுத்தினார்கள்; ஓடி ஓடி, முக்கி முக்கிப் படித்தார்கள். அதைப் பற்றித் திராவிடன் கவலைப்படவே இல்லை. நல்ல திராவிடன், செல்வத் திராவிடன், நமக்கு எதற்கு ஆங்கிலம்? என்று சொல்லிவிட்டான். ஆங்கிலத்தால் பதவி, உத்தியோகம், வருவாய் கிடைக்கின்றன என்று கண்டதும் சிறிது படிக்க ஆரம்பித்தான் அதற்கும் பார்ப்பான் முட்டுக்கட்டை போட்டு ஆங்கிலத்தைத் தனக்கே ஆக்கிக் கொண்டான்.

பிறகு, திராவிடன் கிளர்ச்சி செய்தான். அக்கிளர்ச்சியைப் பார்ப்பானால் அடக்க முடியவில்லை. எப்படியோ, ஆங்கிலேயன் போய்விட்டான். அந்த இடத்தில் பார்ப்பான் உட்கார்ந்தான். அவன் உட்கார்ந்து, ஆங்கிலத்திற்குப் பதிலாக, அந்த இடத்தில் இந்தியை வைத்தான். இந்தியாவில் பதவி மாத்திரமில்லாமல் ஆட்சியையே தனக்கு நிரந்தரமாகத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளத் திட்டமிட்டுக் கொண்டான். இப்போது நாம் இந்தியை மொழி காரணமாகவே வெறுக்கவில்லை. இந்தி மூலம் ஆட்சியையும், பதவியையும் நிரந்தரமாகத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளும் முயற்சியை எதிர்க்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகச் சுருக்கை நகர்த்தி நம் கழுத்தை அறுக்கும் கொலை பாதகத்தை எதிர்க்கிறோம். இதற்குத் தமிழர்களை - திராவிடர்களைத் தவிர வேறு யாரும் சம்மதிக்கமாட்டார்கள்.

இந்தியக் காங்கிரஸ், இந்திய சோசலிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்டு, இந்திய வெங்காய இஸ்டு யாரும் - 'இந்திய' என்கின்ற பெயரைத் தலையில் கொண்ட எந்தக் கட்சியாரும், பார்ப்பனக் கூலிகள்; வடநாட்டான் கூலிகள்; இவர்களது மறுபதிப்புகள் - திராவிடர் உழைப்பில் உண்டுகளிக்க இருக்கும் காதக எதிரிகள். ஆதலால், இவர்கள் எல்லோருடையவும், ஆதிக்கத்தையும் சுரண்டலையும் சேர்த்து எதிர்க்கும் எதிர்ப்பே இந்த இந்தி எதிர்ப்பு ஆகும்.

உதாரணம் வேண்டுமானால், இவர்கள் எல்லோரும் கட்டாய இந்தியை நாங்களும்தான் எதிர்க்கிறோம் என்பார்கள். கற்பழிப்பு என்றால் பலாத்காரமாகச் செய்தல் என்பது மாத்திரம்தானா? மற்ற வகைகளில் நெருக்கடி, தடுக்கமுடியாத தன்மை, திருட்டுத்தனமயமாக்குதல், சிறிது, சிறிதாக இணங்க வைக்கச் சந்தர்ப்பங்களை உண்டாக்குதல் முதலிய காரியங்களால் நடத்தினால் அது கற்பழிப்பு ஆகாதா என்று கேட்கிறேன்.

ஆதலால், இந்த நாட்டில் இந்தி எதிர்ப்புக்கு இந்த நாட்டு ஸ்தாபனங்களும் - அதுவும் தமிழினத் திராவிடனைத் தவிர வேறு இனத்தானும், சாதியானும் அறவே கலந்தில்லாத ஸ்தாபனங்களும், வட நாட்டார் சம்பந்தமே இல்லாத ஸ்தாபனமும், அதுவும் அதில் கலந்துள்ள தமிழர்களும்தான் சேரமுடியும், தொண்டாற்ற முடியும். மற்றவர்கள் இதை ஒழிக்க, எதிர்க்க, சூழ்ச்சிகளைத்தான் செய்வார்கள். அதுவும், 'சோறு இல்லை, துணி இல்லை, கூலி இல்லை, வரி அதிகம், ரோட்டில் புழுதி; இவைகளையெல்லாம் விட்டுவிட்டு - இதற்கு என்னடா அவசியம்? என்று மொடா' வயிற்றில் அடித்துக் கொண்டு 'ரோலர்' கல்போல் ரோட்டில் 'புரளுவார்கள். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து, 'இவைகள் எல்லாம் ஏன் இல்லாமல் போயின? யாரால், எதனால் இல்லாமல் போயின?' என்று ஒரு கேள்வி கேட்டால், இது பிற்போக்குச் சக்தி' என்று சொல்லிவிட்டு 'அண்டர்கிரவுண்டு ' ஆகிவிடுவார்கள்.

ஆனாலும், இப்போது நமக்கு வேறு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. யூனியன் ஆட்சியில் டெல்லி தவிர, அதிலுள்ள பார்ப்பன ஆதிக்கக்காரர்களும், சில யூனியன்களும் - அவர்கள் கூலிகளும் தவிர, மற்ற இராஜ்யக்காரர்கள் அநேகமாக எல்லோருமே இந்தியை எதிர்க்கிறார்கள்; எல்லா நாட்டிலும் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றிவிட்டது. இதையெல்லாம் விட நம் நாட்டுப் பார்ப்பனர்கள் பலரும் இந்தியை வெறுத்தவர்கள் போல், இந்தி புகுத்துவதை இஷ்டப்படாதவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். போராட்டம் நீடித்து நடக்க நல்ல ஆதரவுகளும் வளர்கின்றன; நல்ல அறிகுறியும் கொண்ட நல்ல சமயமாக இருக்கிறது.

- விடுதலை - தலையங்கம்; 27.07.1952.

இந்தி அழிப்புக் கிளர்ச்சி

ஆண்டுதோறும் ஆகஸ்டு 1 ஆம் தேதியில் நடந்து வரும் இரயில்வே நிலையப் பெயர்ப் பலகைகளிலுள்ள இந்திப் பெயர்களை அழிக்கும் கிளர்ச்சியை இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று வைத்துக் கொள்வது நலமென்று கருதுகிறேன். ஏனெனில், ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று குடியாத்தத்தில் அசெம்பிளி உபதேர்தல் நடைபெறப் போகிறது. அது மிகவும் முக்கியமானதும் நமது சில நலன்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியதுமான தேர்தலாயிருப்பதால் இவ்வாண்டு 1 ஆம் தேதி இந்தி அழிப்பின் காரணமாக ஏதாவது காரியங்கள் அல்லது குழப்பங்கள் நடப்புக்கு விரோதமாக ஏற்பட நேருமேயானால், அது ஒரு சமயம் தேர்தலைப் பாதித்துவிடுமோ என்கிற எண்ணத்தாலும் எதிரிகள் தேர்தல் பாதிக்கும்படியான அளவுக்குக் கலவரம் செய்யவேண்டுமென்று கருதி ஏதாவது தொல்லை விளைவிப்பார்களோ என்பதாகவும் கருதி எல்லாவற்றுக்கும் தயாராய் இருப்பதற்கான ஏற்ற நாளாக இருக்க ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை 1954 ஆம் ஆண்டின் இந்தி அழிப்பு நாளாக ஏற்பாடு செய்திருக்கிறேன்.

ஆதலால், கழகத் தோழர்களும், மற்றும் இந்தி எதிர்ப்பில் கவலையுள்ள மற்ற தோழர்களும், இந்தி அழிப்பை ஆகஸ்டு 8 ஆம் தேதியன்று வழக்கம் போல் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்த வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

இந்தி அழிப்புச் சுற்றுப் பிரயாணமாக ஆகஸ்டு 4 அல்லது 5 ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் இரயில்வே பிரயாணமாக நானும் சில தோழர்களும் புறப்பட்டு ஒவ்வொரு ஸ்டேசனிலும் வழக்கம்போல் நண்பர்களைக் காண இருக்கிறேன்.

ஆகையால், இப்பொழுதிருந்தே இதற்கேற்ற கமிட்டி வகையறா ஏற்பாடுகளைச் செய்து பெயர் முதலியவற்றைத் தெரிவிக்க வேண்டிக் கொள்ளுகிறேன்.

- விடுதலை - தலையங்கம்; 17.07.1954.

ஆகஸ்டு கிளர்ச்சியில்

உன் பங்கு என்ன?

ஏறக்குறைய தமிழ்நாட்டில் 500 இரயில்வே ஸ்டேசன்கள் இருக்கின்றன. இவற்றுள் நீ எந்த ஸ்டேசனில் உள்ள இந்திப் பெயரை அழிக்கத் தெரிந்தடுத்து இருக்கிறாய்?

நீ திராவிடன் அல்லது சென்னை இராஜ்யத்தான் அல்லது தமிழ் நாட்டான் என்பதைச் சந்தேகமற உணருகிறாயா? உன் நாட்டுமொழி தமிழ் என்பதையும் நீ தமிழன் என்பதையும் உணருகிறாயா?

அப்படியானால் உன் கடமை என்ன? இந்தி மெல்ல மெல்ல உன் நாட்டில் உன்படுக்கை அறையில் புகுந்து கொண்டது.

இந்தி படிக்காதவனுக்குப் பாஸ் இல்லை. இந்தி படிக்காதவனுக்கு உத்தியோகம் இல்லை.

இந்தி தெரியாதவனுக்குப் பார்லிமெண்ட்டில் இடம் இல்லை. தெரியாவிட்டால் வெளியே போ என்கிற நிலைமை வந்துவிட்டது.

இந்தநிலையில் உன் கடமை என்ன? உன் நாட்டிற்கு, உன் மொழிக்குத் துரோகம் செய்து வடவனுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பது திராவிடன் பண்பா?

ஆகஸ்டு 8 ஆம் தேதி ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லு. ஆம் என்றால் ஜே இந்தி என்று சொல்லு.

இல்லாவிட்டால் இந்தி ஒழிக என்று தாரில் புரூசை நனைத்து இந்திப் பெயரை அழி! அழி! அழி!

- விடுதலை ; 05.08.1954.

நீதிமன்றத்தில் கூறவேண்டிய

வாக்குமூலம்

ஆகஸ்டு கிளர்ச்சியில் ஈடுபடுகின்ற தோழர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டால் கீழ்க்கண்ட அறிக்கையை மட்டும் எழுத்து மூலமோ வாக்குமூலமோ தெரிவித்துவிட்டால் போதும் என்று அறிவித்துக் கொள்கிறோம்.

'நான் குற்றவாளியல்ல; திராவிட நாட்டில் இந்தியை அரசியல் மொழியாகவோ, தேசிய மொழியாகவோ, உத்தியோக மொழியாகவோ, யூனியன் சர்க்கார் புகுத்துவதையும் நடைமுறையில் கொண்டு வருவதையும் திராவிட மக்களாகிய நாங்கள் விரும்பவில்லை என்பதையும், எங்கள் விருப்பத்துக்கு விரோதமாகச் சர்க்கார் தங்கள் ஆதிக்கத்தின் மூலம் இந்தியைப் புகுத்துகிறார்கள் என்பதையும், இந்தச் செய்கையை வெறுக்கிறோம் என்பதையும் சர்க்காருக்கும், வெளி இராஜ்யக்காரர்களுக்கும் தெரிவிப்பதற்கு அறிகுறியாகவே அமைதியான முறையில் சட்ட வரம்புக்குட்பட்டு இந்தக் காரியத்தைச் செய்தேன்; நான் குற்றவாளியல்ல'

- விடுதலை ; 06.08.1954.

பார்ப்பன ஆதிக்கத்திற்கான கட்சி

காங்கிரஸ்

தலைவரவர்களே ! தாய்மார்களே! தோழர்களே!

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் இரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்து வந்ததற்கேற்ப இந்த ஆண்டும் இந்தி அழிப்புச் செயலைச் செய்திருக்கின்றோம். இந்த நிகழ்ச்சி ஆகஸ்டு 1 ஆம் தேதியே நடந்திருக்க வேண்டியது. ஆனால் ஆகஸ்டு 1 ஆம் தேதி குடியாத்தம் உபதேர்தல் நடக்கிற நாளானபடியால் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஏற்பட்டு அதன் காரணமாகத் தேர்தல் பாதிக்கப்படுமோ என்கிற காரணத்தால் 8 ஆம் தேதிக்கு மாற்றி வைத்தோம்.

தோழர்களே! இந்த நம்முடைய இந்தி எதிர்ப்பு இன்று நேற்று நாம் செய்து வருகிற காரியமல்ல. பிரச்சார முறையில் 20, 25 ஆண்டு காலமாகவே நாம் இந்தியை எதிர்த்து வந்திருக்கிறோம்.

நான் காங்கிரசிலே இருந்த காலத்தில் காங்கிரசின் கொள்கைக்கேற்ப இந்தியை ஆதரித்து வந்தேன். மோதிலால் நேருவைக் கொண்டு ஈரோட்டில் ஓர் இந்திப் பிரச்சாரப் பள்ளியை என்னுடைய சொந்த இடத்தில் சொந்தச் செலவில் திறந்து 20, 30 மாணர்வகளுக்கு இலவசமாகச் சாப்பாடு போட்டு, இந்தியைக் கற்றுக் கொடுக்கும்படியாக ஏற்பாடு செய்தேன்.

நான் காங்கிரஸ் ஸ்தாபனமானது பார்ப்பன ஆதிக்கத்துக்காகவே - பார்ப்பன நலத்துக்காகவே நடைபெற்றுவருகிற ஒரு ஸ்தாபனம் ஆகும் என்று கண்டு, அந்த ஸ்தாபனத்தில் இருக்கிற பெரும்பாலோர் சுய நலத்துக்காகவும் தங்கள் காரியானுகூலத்துக்காகவும் இருக்கிறார்கள்; இன்னும் சிலர் காங்கிரஸ் உள்ளபடியே சுயராஜ்யத்துக்காகப் பாடுபடு கிறது என்கிற கருத்துக் கொண்ட காங்கிரசை உண்மையிலேயே தேச ஸ்தாபனம் என்பதாக முட்டாள்தனமாகக் கருதிக் கொண்டு இருக்கிறா கள் என்பதாகக் கண்டு, இத்தனை நாளாக அப்படிப்பட்ட ஒரு முட்டாளாக நாம் இருந்த தன்மைக்காக வருந்தி, நம்முடைய நாட்டுக்கு, நம்முடைய மக்கள் சமுதாயத்துக்கு என்று நாம் ஏதாவது பணிபுரிய வேண்டும் என்கிற கருத்தில் காங்கிரசை விட்டு வெளியேறிய காலம் முதற் கொண்டு, இந்த இந்தி எதிர்ப்பு என்பதைச் சுயமரியாதை இயக்கத்தின் ஒரு கொள்கையாகக் கொண்டு, பணியாற்றி வருகிறேன். அதுவும் இந்த இந்தி மொழி என்பதன் மூலம் பார்ப்பனர்கள் நம்மை நிரந்தர அடிமைகளாக - பச்சைச் சூத்திரர்களாக ஆக்கவே கொண்டு வருகிறார்கள்; இந்தி மொழியை இந்த நாட்டில் செயல்படுத்துகிறார்கள் என்று நன்றாக உணர்ந்து எதிர்த்து வந்திருக்கிறேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதின் காரணமாக அத்தகைய ஆட்சிக்கு விரோதமாக இன்று திடீரென்று நினைத்துக் கொண்டு செய்கிற காரியம் அல்ல; 20, 25 ஆண்டு காலமாகவே பிரச்சார முறையில் செய்து வந்த காரியத்தையே இன்று செயல் முறையில் செய்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான். அதுவும் காங்கிரசுக்காரர்கள் சுயராஜ்யம் வரும் என்பதாகக் கனாக்கூடக் காணாத காலத்திலிருந்தே எதிர்த்தேன்.

1942 ஆம் வருட ஆகஸ்டுக்குப் பின்னர்தான் காங்கிரசுக்காரர்களுக்குச் சுயராஜ்யம் வரவேண்டும் என்கிற நினைப்புத் தோன்றியது; அதற்கு முன்பு அந்த நினைப்பே இல்லை. ஆகஸ்டு கிளர்ச்சிக்குக் கொஞ்சநாள் முந்திகூட காந்தியார் கூறினார்: சுயராஜ்யத்தின் நிழலைத் தான் நாங்கள் கேட்கிறோம். அதாவது குடியேற்ற நாட்டு அந்தஸ்தைத் தான் கேட்கிறோம்' என்பதாகச் சொன்னார். அதற்குமுன் காங்கிரஸ் எப்படி இருந்தது என்றால் ஏதோ வெள்ளைக்காரர்களுக்குக் கொடுக்கிற உத்தியோகம் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று உத்தியோகம் கேட்பதாகத்தான் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், அப்பொழுது காங்கிரஸ் மாநாட்டில் முதலாவதாக இராஜவிசுவாசத் தீர்மானம்தான் போடுவார்கள்; பிரிட்டிஷ் சக்கரவர்த்தி நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கும் தீர்மானமும் போடுவார்கள்; அத்தோடு, என்றென்றைக்கும் நிரந்தரமாகப் பிரிட்டிஷ் இராஜாவே எங்களுக்கு இராஜாவாக இருக்கவேண்டும் என்பதாகக் கடவுளை வேண்டித் தீர்மானங்கள் போடுவார்கள்; இவ்வளவு தீர்மானங்களையும் போட்டுவிட்டு உத்தியோகத்தில் எங்களுக்கும் இடம் கொடுங்கள் என்று கேட்பார்கள்; இப்படித்தான் காங்கிரஸ் முன்னெல்லாம் நடைபெற்று வந்திருக்கிறது. அப்புறந்தான் படிப்படியாக வந்து, 42 லே காந்தியார் Quit India என்று சொன்னார். நாம் இந்தியை 42க்கு முன்பிருந்தே - 1926 முதற்கொண்டே எதிர்த்து வந்திருக்கிறோம். சென்ற முறை தோழர் ஆச்சாரியார் அவர்கள் பதவியில் இருந்தபோது இந்தியைக் கட்டாயப்பாடமாகக் கொண்டு வந்தபோது நாங்கள் அதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தோம். அதற்காகப் பலபேர் சிறைக்குச் சென்றார்கள். எனக்கும் 2 வருடக் கடுங்காவல் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, என்னுடைய காரை ஏலத்தில் விட்டும், ஆன காரியங்கள் எல்லாம் நடந்தும் கடைசியில் கட்டாய இந்தி ஒழிந்தது.

தோழர்களே! இன்று இந்த இந்தி எந்த அளவுக்கு இந்த நாட்டில் வந்து விட்டது என்றால் தபால் முத்திரைகளில் இங்கிலீஷில் ஒரு முத்திரையும் இந்தியில் ஒரு முத்திரையுமாக போடப்படுகிறது. இங்கிலீஷ் முத்திரை இருப்பதால் இப்போது ஏதோ ஊர்ப்பெயரை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் கொஞ்சநாளில் இங்கிலீஷில் அடிப்பதை நிறுத்திவிட்டு இந்தியில் மாத்திரமே போட்டுவிடுவார்கள். அப்புறம் நம்முடைய நிலைமை என்ன ஆவது என்று யோசித்துப் பாருங்கள். இன்னும் இந்தி தெரிந்தால் தான் உத்தியோகம் என்கிறார்கள். வேலைக்குப் பொறுக்கும் பேட்டியின்போது கேள்வியோடு கேள்வியாக உனக்கு இந்தி தெரியுமா? என்று கேட்கிறார்கள். இந்தி தெரியாது என்றால் வெளிப்படையாக இந்தி தெரியாததால் வேலைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லாமால் இதை உள்காரணமாய் வைத்துக் கொண்டு, வேறு ஏதாவது காரணங்காட்டித் தள்ளி விடுகிறார்கள்.

மற்றும், சமீபத்தில் கல்வி மந்திரி சுப்பிரமணியம் அவர்கள் பரீட்சைக்கும் இந்தி பாடமாக இருக்கும் என்பதாக ஒரு உத்தரவு கொண்டு வந்தார். நாம் சத்தம் போட்டவுடன் இல்லை இல்லை' என்று சொல்லி விட்டார்கள். காமராசர் எலக்ஷனைக் கருதி இந்தப்படி மாற்றிக் கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை. இந்திக்கு இந்த நாட்டில் இப்போது ஆதிக்கம் வரவர அதிகமாக வளர்ந்து கொண்டே வருகிறது. இன்னும் கொஞ்சநாளில் இந்தி தெரியாவிட்டால் உத்தியோகம் இல்லை என்கின்ற நிலைமை வந்துதான் தீரும் என்பதோடு நாளைக்கு வியாபாரிகள் எல்லாம் இந்தியிலேயே கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவேதான், நம்மைப் பேராபத்துக்கு ஆளாக்குகிற நம் பின் சந்ததிகளை வாழா வெட்டிகளாக ஆக்குகிற இந்த இந்தியை நாம் இந்த நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டியாக வேண்டும் என்கிறோம். இந்தக் கருத்தில் மூன்றாவது முறையாக நாம் இந்தி எழுத்துக்களை அழித்திருக்கிறோம். இரண்டு வருட காலமாக ஆச்சாரியார் அவர்கள் ஆட்சியில் இருந்த போதும் அவர் விட்டு விட்டார். தோழர் காமராசர் அவர்களும் ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட மத்திய சர்க்கார் அமைச்சர், இரயில்வே துணை மந்திரி அளகேசன் அவர்களும் இதனால் ஒன்றும் கஷ்டம் இல்லை; அவர்கள் அழித்தால் திரும்பி நாங்கள் எழுதிவிடுகிறோம் என்பதாகச் சொல்லி இருக்கிறார். இப்படியே நாம் அழிப்பதும் திருப்பி அவர்கள் எழுதுவதுமாக விளையாட்டுப்போல நடந்து கொண்டிருக்க நாமும் விட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்தத் தடவையும் திருப்பி எழுதுவார்களேயானால் அடுத்த ஆண்டு நாம் வேறு ஏதாவது மாதிரியாக, அதாவது இன்னும் கொஞ்சம் முன்னாலே போவதான தன்மையிலே கிளர்ச்சியை நடத்த வேண்டி இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- விடுதலை ; 11.08.1954.

இந்தியும் நானும்

தலைவரவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இந்தி விளைவிக்கும் கேட்டை முன்னரே அறிந்து சொல்லியுள்ளேன். நான் காங்கிரசை விட்டு விலகிய 1925 ஆம் ஆண்டிலேயே தமிழ் நாட்டில் தமிழர்களின் இலட்சியங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்தேன். அப்பொழுதிலிருந்தே இந்தி நமக்குக் கேட்டை விளைவிக்கும் பொருட்டே புகுத்தப்படுகிறது என்பதாகக் குடி அரசில் எழுதி வந்திருக்கிறேன். அப்போது, இப்போது உள்ளதைப் போன்று, சுயராஜ்ய அரசாங்கமில்லை. வெள்ளைக்கார அரசாங்கம் இருந்த அப்பொழுதே, இந்தியைக் காங்கிரசுத் திட்டத்தில் ஒன்றாகப் பிரச்சாரம் செய்தனர். அப்போது அதற்குப் பெயர் தேசிய மொழி என்று சொல்லிவந்தனர்.

ஏனெனில், அப்பொழுது வடமொழியின் மீது பொதுமக்களுக்கு வெறுப்புண்டாகும் நிலை ஏற்பட்டதேயாகும். ஜஸ்டிஸ் கட்சியினால் பார்ப்பன ஆதிக்கம் குன்றி வந்த காலம் அது. சமுதாயத் துறையில் பார்ப்பனர்களிடம் நம் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு எப்படியும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அடக்க வேண்டும் என்று முயற்சித்த ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக் காலம் அது. சமஸ்கிருதத்தினிடம் மக்களுக்கு மனக் கசப்பு ஏற்பட்டு, அது பார்ப்பன மொழி, வடநாட்டவரின் மொழி என்றெல்லாம் உணர்ச்சியோடு கூடி வெறுத்தனர். இதனால் பார்ப்பனர்கள் சமஸ்கிருதத் தைத் தங்களின் சூழ்ச்சியின்படி புகுத்துவதற்கு இல்லாமற் போய் விட்டது.

என்றாலும், அவர்கள் ஒரே கல்லில் இரண்டு பட்சிகளை அடித்தது போன்று, மக்களுக்குச் சமஸ்கிருதத்தின் மீதுள்ள வெறுப்பு உணர்ச்சியை உணர்ந்து கொண்டு வெகு தந்திரமாக இந்தியைப் புகுத்த முற்பட்டனர். இந்தி, இந்தியாவில் பெரும்பான்மையோரால் பேசப்டும் மொழி என்றும், எனவே இதையே மற்ற சிறுபான்மை மக்கள் கற்றுணர்ந்து கொள்வது சுலபமாகும் என்றெல்லாம் காரணம் கூறினர். இதனால் நம் பிள்ளைகளைக் கல்வியில் தேறாமல் செய்வதும் சுலபமாகும் என்று பார்ப்பனர் நினைத்துச் செய்தனர்.

இதற்குக் காந்தியாரும் உடன்பட வேண்டியதாயிற்று. அவர் எவ்வளவு பெரிய மனிதரானாலும், அறிவாளியானாலும், பொதுநலத் தொண்டரானாலும் - அவர் வட நாட்டவர் என்பது மட்டும் உறுதி. அவருக்குத் தன்னாட்டைத் தவிர, தென்னாட்டின் நிலைமையை எப்படி உணர முடியும்? அப்படித் தென்னாட்டின் நிலைமையை உணர வேண்டுமானால் ஆச்சாரியார், சத்தியமூர்த்தி போன்றவர்களால்தான் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இந்து, சுதேசமித்திரன், தினமணி, எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பனரின், வட நாட்டவர்களின் பத்திரிகைகள் மூலம்தான் தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் மூலமும் இப்பத்திரிகைகள் மூலமும் நம்முடைய கருத்துக்கள் வெளியாவதற்கில்லை என்பது தெரிந்ததே. எனவே, காந்தியாரும், தென்னாட்டவர்களின் கருத்தை உணர முடியாது போய்விட்டார்.

மேலும், பார்ப்பனர்கள் காந்தியாரைப் பிடித்தற்குக் காரணமே தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பார்ப்பனர்களின் ஆட்சிக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கேயாம். இது அவர்களின் இரகசியத் திட்டம் என்றாலும் எனக்குத் தெரிய வேண்டிய காரணம் என்னவென்று கேட்கலாம். நான் அப்பொழுது பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்தேன். அவர்களின் அந்தரங்க விஷயங்கள் அத்தனையும் தெரிந்து கொள்ளும்படியான முக்கியஸ் தனாகவும், காங்கிரசில் தலைவனாகவும் இருந்தவன். காங்கிரசின் அடிப்படைத் தந்திரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியாமல் இருக்க முடியாது. காங்கிரசின் திட்டங்களை என்னால் நிறைவேற்றும் படியாகவும் இருந்தது. அத்திட்டங்களில் ஒன்றான இந்தியைப் பரவச் செய்யும் விஷயத்தில் மிகவும் அக்கறையோடு முயற்சி எடுத்தவன் நான். அப்போது தனிப்பட்டவர்களால் பொருள் சேர்க்கப்பட்டு, அதன் மூலம் இந்திப் பிரச்சார ஸ்தாபனங்களை உண்டாக்கி, இந்தி கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால், காங்கிரசின் பேரால், காங்கிரசின் செலவில் முதன் முதலில் இந்தியை இங்குக் கற்றுக் கொடுக்கும்படிச் செய்தவன் நான். மேலும், என்னுடைய சொந்தச் செலவில் இந்தியைப் பரவச் செய்தேன்.

1922 ஆம் ஆண்டு பிற்பகுதியில் எங்கள் ஊருக்கு வடநாட்டில் இருந்து டாக்டர் அன்சாரி, விட்டல் பாய் பட்டேல், பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ் பிரமுகர்கள் விஜயம் செய்தார்கள். அப்போது இங்கிருந்த காங்கிரசுக்காரர்களுக்குள்ளேயே சட்டசபை செல்ல விரும்பு வோர்கள் என்றும், சட்டசபை செல்ல விரும்பாதவர்கள் என்றம் இருபிரிவுகள் இருந்தன. இவற்றை ஒருவழிப்படுத்தவேண்டும் என்பதற்காக ஒரு கமிட்டி எற்படுத்தி, அதன் சம்பந்தமாக முடிவு செய்யும் பொருட்டு, மேற்கண்ட வடநாட்டவர்கள் இங்கு வந்தார்கள். அவர்கள் எங்கள்இல்லத்தில் தான் வந்து தங்கினர். நான் அதுசமயம் அவர்கள் என் வீட்டிற்கு வந்து சென்ற ஞாபகார்த்தமாக ஏதாவது புதிய காரியம் ஒன்றை ஆரம்பித்து வைக்கலாம் என்று ஆசைப்பட்டேன்.

அப்போது எனக்கு எல்லாவற்றையும் விட இந்தி சம்பந்தமாகத் தான் ஆவல் ஏற்பட்டு இந்தியை இன்று முதல் சில பிள்ளைகளுக்கு நம் செலவிலேயே கற்றுக் கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன்.

அன்று முதல் 30 பேர்கள் கொண்ட ஒரு பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஆசிரியருக்கும் 15 பிள்ளைகளுக்கும் காங்கிரசின் செலவும்; 15 பிள்ளைகளுக்கு, உணவு, தங்கும் வசதிகளெல்லாம் என்னுடைய செலவும் ஆகும். என் தகப்பனாரின் சமாதிக்குப் பக்கத்தில் உள்ள கட்டடத்திலேயே அப்பள்ளி நிறுவப்பட்டதுடன், அந்தச் சமாதி டிரஸ்ட் செலவிலேயே 15 பேருக்குச் சாப்பாடும் போட்டு வந்தேன். இப்படி 2 வருடங்கள் வரை அதை நடத்தினேன். இது மட்டுமின்றி போகிற இடங்கள் தோறும் இந்தியைப் பற்றிப் பெருமையாக ஏதேதோ பேசுவதுண்டு. இப்படி இந்தியைப் பற்றிக் கவலை கொண்டு அதை நம் நாட்டில் கொண்டு வந்து பரவச் செய்தவர்களில் நானும் ஒருவன்.

எனவேதான், நான் வெள்ளையன் இந்நாட்டைவிட்டுப் போகுமுன்னமேயே - இந்நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கும் என்ற எண்ணம் கனவிலும் தோன்றாத காலத்திலேயே நான் இந்தியை ஒழிக்க வேண்டும் என்று கூறினேன்.

என் எண்ணத்திற்கு மாறாகவே, இந்தியை வட நாட்டார் இங்குப் புகுத்தி, அவர்களின் நாகரிகங்களைப் புகுத்த முயற்சித்தனர். இந்தியை அரசியல் மொழியாகவும் கொண்டுவரச் சட்டமியற்றினர்.

- விடுதலை ; 01.08.1955. 

Read 814 times