மச்சான் இறந்தால் நல்லதாச்சு அவருடைய கம்பளி நமக்காச்சு. குடி அரசு - கட்டுரை - 23.05.1926

Rate this item
(0 votes)

ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காருக்கு எல்லா இந்தியத்தலைமைப் பட்டாபிஷேகம் ஆகிவிட்டது. ஆனால் அது இரண்டு மாதத்திற்கு என்று சொல்லப்பட்டாலும் காயமானதென்பதுதான் நமது அபிப்பிராயம். பண்டித நேரு இரண்டு மாதத்திற்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுகிறதாய்ச் சொல்லி, தனது விசேஷ அதிகாரத்தால் ஸ்ரீமான் ஐயங்காருக்குப் பட்டாபிஷேகம் செய்து தலைமைப் பதவியை அவர் தலையில் சூட்டிவிட்டுப் போய்விட்டார். இது மகாத்மா ஓய்வெடுத்துக் கொண்டது போலவேதான் முடியும். “வெற்றிமேல் வெற்றி ஏற்பட்டு, இரட்டை ஆட்சி மடிந்தவுடன்” அதற்குமேல் என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்ரீமான் சி.ஆர்.தாஸ் நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்டார். சுயராஜ்யக் கட்சி வெற்றி அடைந்து காங்கிரசையே தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டவுடன் இனி நமக்கு இங்கென்ன வேலை என்று மகாத்மா ஓய்வெடுத்துக் கொண்டார். அதோடு நிர்மாணத்திட்டங்களும் ஓய்வெடுத்துக் கொண்டன. இப்போது பண்டித நேரு ராஜி ஒப்பந்தம் முடிந்தவுடன் இனி எப்படி ஜனங்கள் முகத்தில் விழிப்பது என்று ஓய்வெடுத்துக் கொண்டார். இது எதற்காகவோ தெரியவில்லை. சட்டசபையை விட்டு வெளியேறின வீரத்திற்கா? அந்த வீரத்தைக் காப்பாற்றி மறுபடியும் சட்டசபையை எட்டிப் பார்க்காமல் இருக்கிற சுத்தத்திற்கா? சபர்மதியில் பரஸ்பர ஒத்துழைப்பாளருக்கும் தங்களுக்கும் ஏற்பட்ட ராஜியை கண்ணியமாய் நடத்தி வைத்துக் கொடுத்த ஆண்மைக்கா, சத்தியத்திற்கா? எதற்கென்று அறியமுடியவில்லை.

ஆனாலும் ``நான் பரஸ்பர ஒத்துழையாதாரிடம் செய்துகொண்டு கையெழுத்துப் போட்ட ராஜியை எப்பொழுது நிறைவேற்றி வைக்க முடியவில்லையோ தன்னைப் பின்பற்றுவோர்கள் தனது வார்த்தையை எப்பொழுது மதிக்கவில்லையோ அப்பொழுதே, பண்டிதர் “சுயமரியாதை உள்ளவராயிருந்தால் தலைமைப் பதவியிலிருந்து விலகியிருப்பார். இதுதான் சுயமரியாதைக்கு லக்ஷணம்” என்று ‘குடி அரசு’ ‘சபர்மதி ராஜியின் முறிவு’ என்கிற தலையங்கத்தில் எழுதியிருந்தது. அது போலவே பண்டிதர் சுயமரியாதையைக் காட்டுவதற்கே ஓய்வெடுத்துக் கொண்டாரென்றால் நிரம்பவும் சரியென்றே சொல்லலாம். ஆனால் நமது தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்கோ “ மச்சான் இறந்தால் நல்லதாச்சு, அவருடைய கம்பளி நமக்காச்சு” என்கிற முறைப்படி பண்டித நேரு விலகினதைப்பற்றி கவலையில்லை; அவர் தலைமை ஸ்தானம் இவருக்குப் பட்டாபிஷேகமாய்விட்டதே, அதுவே போதும் என்கிற சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பிராமணர்களை, அதிலும் அய்யங்கார் கூட்டத்தை நம்பினவர்கள் இதுவரை யார் உருப்படியாகியிருக்கிறார்கள்? ஆனாலும் ஓய்வு கிடைப்பது மாத்திரம் நிச்சயம். ஸ்ரீமான்களான ரெங்கசாமி ஐயங்காரை நம்பி ஸ்ரீமான் தாஸ் ஓய்வெடுத்துக்கொண்டார்; ராஜகோபாலாச்சாரியாரை நம்பி மகாத்மா ஓய்வெடுத்துக்கொண்டார்; சீனிவாசய்யங்காரை நம்பி பண்டிதர் ஓய்வெடுத்துக் கொண்டார். அம்மூவர் சக்தியும் இம்மூவருக்குள்ளாகவே ஆவாகனமாகியிருக்கிறது. இனி தமிழ்நாட்டிற்கு ஒன்றும் குறைவில்லை. எடுத்த காரியம் யாவினும் வெற்றி. யாருக்கு? பிராமணர்களுக்கு.

இந்திய அரசியல் வாழ்வென்பது பிராமணர் வாழ்வுக்கேற்பட்டதென்று நாம் பலமுறை சொல்லி வந்திருக்கிறோம் - சொல்லியும் வருகிறோம் - இனியும் சொல்லுவோம். அனுபவசாலிகளான நமது முன்னோர் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதை நம்மில் பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது? பிராமணர்களின் செல்வாக்குப் பெருக்கும், அதிகாரப்பெருக்கும், செல்வப் பெருக்கும் பிராமணரல்லாதாரில் இதை அறிந்த பலரையும் “சூரிய சந்திரர்களை கிரகணம் தீண்டி” மறைப்பதைப் போல மறைத்துவிடுகிறது. என் செய்வது? ஜஸ்டீஸ்கக்ஷி ஏற்பட்ட காலத்தில் அந்த கக்ஷியார் இதைச் சொன்னபோது பிராமணரல்லாதாரின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு பிராமணர்களுக்கு முன்னணியிலிருந்து அதை ஒடுக்கி வீரகண்டாமணி அணிந்த நமது டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கலியாணசுந்தர முதலியார் ஆகியோர் கதி இன்று எப்படி இருக்கிறது? டாக்டர் நாயுடு அஞ்ஞாதவாசம் செய்கிறார்; என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார்; இனி என்ன பெயர் வைத்துக் கொண்டு மறுபடியும் வெளியாகலாமென்று பதைக்கிறார்; அடியோடு அவரை பிராமணர்கள் கைவிட்டுவிட்டார்கள்.

சென்னை சட்டசபைக்கு சேலம் ஜில்லா அபேக்ஷகர்களை நிறுத்த சேலத்திற்கு வந்த சீனிவாசய்யங்கார் நமது டாக்டர் நாயுடுவுக்குத் தெரிவிக்கவில்லை; அவர் வீட்டுக்கு வரவுமில்லை; அவரைக் கலந்து பேசவுமில்லை என்றால் டாக்டர் நாயுடுவைப் பற்றி இந்த பிராமணர் கள் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது புலனாகும். இந்த பிராமணர்களுடன் அவர் திரியும் போது மகாத்மா வந்தாலும் டாக்டர் வீட்டில்தான் இறக்குவது, தேசபந்து தாஸ் வந்தாலும் டாக்டர் வீட்டில் தான் இறக்குவது, இன்னும் யார் வந்தாலும் டாக்டர் வீட்டில்தான் இறக்குவது. இப்போது இந்த பிராமணர்களுக்கு அவருடைய வீடு “அதிகார வர்க்கத்தார்” வீடாய் விட்டது. டாக்டர் நாயுடு அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? இங்கொருகால், அங்கொரு கால் வைத்திருப்பதுதான். அதாவது சுயராஜியக்கட்சியை இரவு பகலாய் ஆதரித்தாலும் ஜஸ்டீஸ் கட்சியை பிராமணர்களின் ஆசைதீர திட்டினாலும், தேவஸ்தான சட்டத்தை ஆதரிக்கவும், குருகுலப் புரட்டுகளை வெளியாக்கவும் உதவியாயிருந்ததுதான் பெரிய குற்றம்.

சரி, நமது ஸ்ரீமான் திரு. வி.கலியாணசுந்தர முதலியார் கதியோ, இந்த பிராமணர்கள் பின் சென்றால்தான் அவர் பெயர் பத்திரிகையில் போடப்படும், அதுவும் அவர் ஜஸ்டீஸ் கட்சியை நன்றாய் திட்ட வேண்டும்; திட்டினதில் ஒன்று சொல்லியிருந்தால், கூட இரண்டு சேர்த்துதான் பிராமணப் பத்திரிகையில் பிரசுரிக்கப்படும்; அதற்கும் சம்மதித்தால்தான் கூடக் கூட்டிக்கொண்டு போகமுடியும்; இல்லாவிட்டால் அதுவும் இல்லை; டாக்டர் நாயுடுபோல் மூலையில் உட்கார வேண்டியதுதான்.

“அரை அந்தணர்” , “முழு அந்தணர்” என்று சொல்லப்படும் பிராமண பக்தர்கள் பிராமண விஸ்வாசிகளான இவர்கள் சங்கதியே இப்படி இருக்குமானால் “பிராமணத் துவேஷியான” ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கரை இன்னும் உலகத்தில் வைத்திருப்பதே நமது பிராமணர்களின் தர்ம சிந்தையல்லவா? மற்றவர்களைப் பற்றியும் கேட்கவேண்டுமோ? தமிழ் நாட்டில் பிராமணரல்லாதார் ராஜீய வாழ்வினால் பிழைக்க வேண்டுமென்றாலும் சரி, தேசபக்தர்களாக வேண்டுமென்றாலும் சரி, பிராமணர்களிடம் லைசென்ஸு பெறாமல் முடியாது என்கிற நிலைமையிலிருக்கிறது. ஆதலால் ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார் இவர்களின் நிலைமையை அறிந்தவர்கள் சில “குட்டி தேச பக்தர்கள்” “வயிற்றுச்சோத்து தேசபக்தர்கள்” பிராமணரல்லாதாரை திட்டுவதைப் பற்றியும் பத்திரிகைகளில் தாறுமாறாய் எழுதுவதைப் பற்றியும் கேட்கவும் வேண்டுமா? அதைப் பற்றி பேசவும் வேண்டுமா?

குடி அரசு - கட்டுரை - 23.05.1926

 
Read 34 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.