பிராமண அகராதி வினா - விடை. குடி அரசு - உரையாடல் - 02.05.1926

Rate this item
(0 votes)

வினா : ஆச்சிரமம் என்றால் என்ன?

விடை : காந்தர்வ விவாகமும் ராக்ஷச விவாஹமும் நடக்கு மிடங்கள்.

வினா : சுயராஜ்யம் என்றால் என்ன?

விடை : பிராமணர்கள் உத்தியோகமும் பதவியும் அதிகாரமும் பெறுவதுதான் சுயராஜ்யம்.

வினா : பிராமணரல்லாதார்களுக்கு உத்தியோகமும் பதவியும் அதிகாரமும் வந்தால் அதற்குப் பெயரென்ன?

விடை : அது அதிகார வர்க்கத்தின் ஆட்சி அல்லது அன்னிய ஆட்சி.

வினா : தேச சேவை யென்றால் என்ன?

விடை : பிராமணர்கள் பின்னால் திரிந்துகொண்டு ஜஸ்டிஸ் கட்சியைத் திட்டுவது போல் பிராமணரல்லாதாரைத் திட்டுவதும், பிராமணர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ‘தலைவர்’, ‘தமிழ்நாட்டுக் கர்ணன்’, ‘கலியுகக் கர்ணன்’, ‘மகாத்மாவின் சிஷ்யர்’ என்று சொல்லி பிராமணரல்லாதாரை வஞ்சித்து பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதுதான் தேச சேவை ஆகும்.

வினா : தேசத் துரோகம் என்றால் என்ன?

விடை : பிராமணரல்லாதார் நன்மையைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் தேசத்துரோகமாகும்.

வினா : பிராயச்சித்தமில்லாத, மன்னிக்க முடியாத தேசத்துரோகம் என்றால் என்ன ?

விடை : பிராமணர்களுடைய சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும், அயோக்கியத்தனங்களையும் வெளியிலெடுத்துச் சொல்லுவதும் எழுதுவதும் மன்னிக்கமுடியாத துரோகமாகும்.

வினா : மதுவிலக்குப் பிரசாரம் என்றால் என்ன?

விடை : தான் மதுவருந்திக் கொண்டும், தனது மரத்தில் கள்ளு முட்டி கட்டித்தொங்கவிட்டுக்கொண்டும், தனது பத்திரிகைகளில் ஒவ்வொரு மனிதனும் வீட்டில் சாராயம் வைத்திருக்க வேண்டுமென்று எழுதிக்கொண்டும், தன்னை சட்டசபைக்கு அனுப்பினால் மதுவை ஒழித்து விடுகிறேன் என்று சொல்லுவதும், இப்படிப்பட்டவர் களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சொல்லுவதும் மதுவிலக்கு பிரசாரமாகும்.

வினா : சரியான ஜனப்பிரதிநிதி சபை என்றால் என்ன?

விடை : எல்லோரும் பிராமணர்களாய் அமர்ந்திருப்பதுதான் சரியான ஜனப்பிரதிநிதி சபையாகும்.

வினா : அடுத்தபடியான ஜனப்பிரதிநிதி சபை என்றால் என்ன?

விடை : பிராமணர்களும், அவர் சொல்படி கேட்கும் பிராமணரல்லாதார்களும் அமர்ந்திருப்பது இரண்டாந்தர ஜனப் பிரதிநிதி சபையாகும்.

வினா : ஜனப்பிரதிநிதி இல்லாத சபை என்றால் என்ன?

விடை : பிராமணர்கள் மெஜாரிட்டியாய் இல்லாத சபை எவ்விதத் திலும் ஜனப்பிரதிநிதி சபையாகமாட்டாது.

வினா : புத்தியுள்ள ஜனங்கள் என்றால் யார்?

விடை : பிராமணர்கள் வண்டி வண்டியாய் பொய்யும் புளுகும் அளந்தாலும் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு சரி சரியென்று பேசாமல் இருப்பவர்கள் புத்தியுள்ள ஜனங்கள்.

வினா : குழப்பக்காரர்கள், காலிகள் என்றால் யார்?

விடை : பிராமணர்கள் வண்டி வண்டியாய் பொய்யையும் புளு கையும் அளக்கும்போது குறுக்கே யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் காலிகள், குழப்பக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

வினா : தேசீயப் பத்திரிகை என்றால் என்ன?

விடை : பிராமணர்களின் படம் போட்டுக்கொண்டும், பிராமணர்களைத் தலைவர் என்றும், பிராமணர்கள் கட்சிக்கு ஓட்டு கொடுங்கள் என்றும், பிராமணர்களைப் புகழ்ந்து எழுதிக்கொண்டும், தேவஸ்தான சட்டத்தையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் கண்டித்துக் கொண்டும் அல்லது அதைப் பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டும் இருக்கிற பத்திரிகைகள்தான் தேசீயப் பத்திரிகைகள் ஆகும்.

வினா : தேசத் துரோகப் பத்திரிகை என்றால் என்ன?

விடை : பிராமணர்களின் தந்திரங்களை எடுத்து எழுதுவதும், பிராமணரல்லாதார்களின் பெருமையைப் பற்றி எழுதுவதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் தேவஸ்தான சட்டத்தையும் ஆதரித்து எழுதுவதுமான பத்திரிகைகள் தேசத் துரோகமான பத்திரிகைகள் ஆகும்.

குடி அரசு - உரையாடல் - 02.05.1926

Read 25 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.