பிராமணர்கள் அகந்தையும் சென்னை நகர பரிபாலன சபையும். குடி அரசு கட்டுரை - 14.02.1926

Rate this item
(0 votes)

காங்கிரசின் பெயரையும், காந்தியடிகள் பெயரையும், ஜெயிலுக்குப் போய் கஷ்டப்பட்ட தேசபக்தர்களின் பெயரையும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணத்தையும், சில பிராமணரல்லாத வயிற்றுப்பிழைப்புத் தலைவர்களின் சமூகத் துரோகத்தையும், கஞ்சிக்கு வகையற்ற சில தொண்டர்களின் காலித்தனத்தையும் ஆதாரமாய் வைத்துக்கொண்டு சென்னை நகர பரிபாலன சபையாகிய கார்பொரேஷனுக்குப் போன சுயராஜ்யக்கட்சி மெம்பர்களில் சில கனவான்கள், கார்பொரேஷனையே குட்டிச் சுவராக்குவதோடு இந்தியர்கள் சுய ஆட்சிக்கு கொஞ்சமும் அருகரல்லர் - மானமுடையவரல்லர்- விடுதலை அடையத் தகுதியற்றவர் என்பதை வைரக்கல்லில் பொன் எழுத்தால் எழுதப்பாடுபட்டு வருகிறார்கள்.
சுயராஜ்யக் கட்சியார் என்று சொல்லிக்கொண்டு கார்பொரேஷனுக்குச் சில பிராமணரல்லாத கனவான்கள் போயிருந்தபோதிலும், அதற்குப் பிராமணர்கள் பணமும் பிராமணப் பத்திரிகைகளின் பிரசாரமுமேதான் முக்கியமாயிருந்தபடியால், இவர்களும் அப்பிராமணர்கள் தாளத்திற்குத் தகுந்தபடி ஆட வேண்டியதாய்ப்போயிற்று. அதன் பலனாகவே கார்பொரேஷன் கமிஷனரான ஸ்ரீமான் வெங்கிட்டநாராயண நாயுடு என்கிற பிராமணரல்லாத கார்பொரேஷன் கமிஷனர் ஒருவரை எப்படியாவது ஒழித்து அந்த ஸ்தானத்தில் ஒரு பிராமணரையோ அல்லது தங்கள் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடும் பிராமணரல்லாத ஒரு சமூகத் துரோகியையோ கொண்டுவந்து வைக்கத் தங்களால் கூடுமான அக்கிரமங்களையெல்லாம் செய்து வருகிறார்கள். இதைப்பற்றி பிராமணப் பத்திரிகைகளில் வரும் விஷயங்களைப் பார்த்தாலே அதன் சிறுமைக்குணம் நன்றாய் விளங்கும்.


கார்பொரேஷனுக்கு மெம்பராய் போயிருப்பவர்கள் யோக்கியதையையும், தாங்கள் என்னென்ன விதமான நடவடிக்கைகளால் இந்த ஸ்தானம் பெற்றோம் என்கிற விஷயத்தையும் தங்கள் நெஞ்சில் கையை வைத்துப் பார்ப்பார்களானால் இவ்வித சிறுமைக்குணத்திற்கு தாங்கள் அருகர்கள்தான் என்பதைத் தவிர வேறொன்றும் விளங்காது. ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா சம்பளத்தின்மீது பொறாமைப்பட்டு அவர் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று ஸ்ரீமான் சத்தியமூர்த்தி பிராமணர் சட்டசபைக்கு ஒரு தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறார். அல்லாமலும், கார்பொரேஷன் கமிஷனரை சர்க்கார் நியமிக்கக்கூடாது, தாங்களே (தங்கள் அடிமையை) நியமிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானமும் கொண்டு வந்திருக்கிறார்கள். அல்லாமலும், அற்ப விஷயங்களையெல்லாம் வேண்டுமென்றே அதிகப்படுத்தி கார்பொரேஷன் சபையை ஒடக்கால் தெரு மாதிரி செய்கிறார்கள்.


கமிஷனர் வீட்டில் ஒரு குழாய் மாற்றி வைத்ததற்காகவும், அவர் வீட்டில் இருந்த தண்ணீர் தேக்கத்தை கார்பொரேஷன் சிப்பந்திகளைக் கொண்டு வெளியாக்கியதற்காகவும்,இந்தியர்களின் யோக்கியதையை பாதிக்கும்படியாய் ஆயிரக்கணக்கான கேள்விகளும் பிராமணப்பத்திரிகை களில் “இந்தக் கமிஷனர் இனி உதவாது” என்கிற தலையங்கத்தின் கீழ் இழிவுப்பிரசாரங்களும் நடக்கிறது. இந்த உத்தியோகத்தில் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணாவுக்கு முன் இருந்த ஐரோப்பியர், இந்தியர் முதலிய கமிஷனர்கள் காலத்தில் இருந்த சம்பளமும்- நியமனமும் முனிசிபல் சிப்பந்திகள் குடும்ப சகிதமாய் கமிஷனர்கள் வீட்டுக்குப் போய் வேலை செய்ததும், அவர்கள் இஷ்டம் போல் எல்லாம் ஆடினதும் இவர்களுக்கு கொஞ்சமும் கவலையை உண்டு பண்ணவேயில்லை. ஆனால் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா பிராமணரல்லாத இந்துவாகிவிட்டதால் பிராமணர்களுக்குப் பொறுக்கமுடியவில்லை. மற்றபடி பிராமண அதிகாரிகள் ஒவ்வோரிடங்களில் செய்யும் கொடுமைகள் கணக்கு வழக்கில்லை .


உதாரணமாக, சென்ற ஒரு வருஷத்திற்குள்ளாக கவர்மெண்டு பிராமண அதிகாரிகளில் சிலர் ராமகிருஷ்ணா ஹோம் நிதி என்னும் பெயரால், நாடகமாடிக் கொண்டு ஆங்காங்குள்ள சர்க்கார் சிப்பந்திகளைக் கொண்டு 1000, 5000, 10000 ரூபாய்களுக்கு டிக்கட் விற்றுக் கொடுக்கும்படி செய்து, கிராம அதிகாரிகளையும், குடித்தனக்காரர்களையும், வியாபாரிகளையும் நெருக்கி டிக்கட் 1 - க்கு 10 ரூ. வீதம் ஆள் ஒன்றுக்கு 2,4-5,10 டிக்கட்டுகள் வீதம் கட்டாயப்படுத்தி அவர்கள் தலையில் கட்டி, தெண்டம் வசூல் செய்வது போல் பணம் வசூல் செய்தார்கள்- செய்கிறார்கள்-செய்யவும் போகிறார்கள். இதைப்பற்றி கேட்பதற்கு ஒரு பிராமணனையும் காணோம். ஒரு சுயராஜ்யக் கட்சி மெம்பரையும் காணோம். ஏன்?


நாடக அதிகாரி பிராமணர் - வசூலிக்கும் அதிகாரிகள் பெரும்பாலும் பிராமணர்கள் - இந்தப்பணத்தை அநுபவிப்பதும் ராமகிருஷ்ணா மடம் என்று சொல்லப்படும் பிராமண ஆதிக்கமுள்ள பிராமண மடம். இது நிற்க, கவர்னர் முதலியவர்களுக்கும் ஐ.ஊ.ளு. உத்தியோகஸ்தர்களும் ஆகிய வெள்ளைக்காரர்கள் இதைவிட அதிகமாகச் செய்வதை கேட்பதற்கும் ஆளில்லை. ஏனென்றால் பெரும்பாலும் இந்த பிராமணர்களே இருந்து பல ஆபாசங்களை நடத்திக்கொடுக்கிறார்கள். இம்மாதிரி நாம் எழுதுவதால் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணாவோ மற்றும் பல பிராமணரல்லாத அதிகாரிகளோ பொதுச் சொத்தையனுபவிக்க வேண்டும். அதைப் பிராமணர்கள் விட்டுவிடவேண்டும் என்பது நமது அபிப்ராயமல்ல.


குரோதத்தையும், துவேஷத்தையும், பொறாமையையுமே முக்கியக் காரணமாக வைத்துக்கொண்டு அற்ப விஷயங்களில் பிரவேசித்து ஒரு மனிதன் பிராமணரல்லாதாரராய் இருப்பதால் அவரைக் கெடுக்க வேண்டும் என்கிற குஷியின் பேரில் செய்யும் அயோக்கியத்தனமான காரியங்களை நாம் கண்டிக்காமல் இருக்க முடியாது. அல்லாமலும், நமது பிராமணர்களுக்குக் கார்பொரேஷனில் கொஞ்சம் செல்வாக்கு ஏற்பட்டவுடன் ஒரு பிராமணரல்லாத அதிகாரியை அதுவும் லஞ்சம் லாவணம், பொய் புரட்டு இல்லாத கண்டிப்புவாதியானவரும் கெட்டிக் காரரும் என்று பிராமணர்களாலேயே சொல்லப்பட்டு வந்தவரான ஒரு முக்கியஸ்தரையே ஒழிக்கப்பார்ப்பார்களானால், இவர்கள் கைக்கு மந்திரி உத்தியோகமும் சட்டம் செய்யும் அதிகாரமும் வந்துவிட்டால் கபடம், சூது அறியாத பிராமணரல்லாத பாமர மக்களின் தலையெழுத்து என்ன ஆகும் என்பதைப் பிராமணர்கள் பின்னால் கவிபாடிக்கொண்டும், அவர்களை தலைவராக்கிக் கொண்டும் பிழைக்க நினைக்கும் பிராமணரல்லாத குள்ள நரிகளையும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து பிராமணர்களுக்கு ஆக்கம் தேடிக்கொடுத்து பதவி அடைய நினைக்கும் பிராமணரல்லாத சுயகாரியப் புலிகளையும் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.


குடி அரசு கட்டுரை - 14.02.1926

 
Read 19 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.