பிராமணர்கள் சூழ்ச்சி. குடி அரசு துணைத் தலையங்கம் - 10.01.1926

Rate this item
(0 votes)

“ஸ்ரீமான். சத்தியமூர்த்தியின் தன்னை அறியா மெய்யுரைகள்”

ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அவர்களின் ராஜீய வாதத்தைப் பற்றி நாம் அநேக விஷயங்களில் மாறான அபிப்ராயம் கொண்டிருந்தாலும், அவருக்கு ஆவேசம் வரும் காலங்களில் தன்னை அறியாமலே ராஜதந்திரத்தைக் கையாளாமல் உண்மையைக் கொட்டிவிடுகிறார் என்கிற சந்தோஷம் நமக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. சமீப காலத்திற்கும் இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு உண்மையை தாராளமாய் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று மிகவும் முக்கியமானது. இது பிராமணரல்லாத பொது ஜனங்கள் நன்றாய் அறிய வேண்டிய விஷயம். அதாவது, காங்கிரஸ் தினம் என்று டிசம்பர் 26- சென்னை சவுந்தர்ய மகாலில் ஸ்ரீமான். யூ.ராமராவ் அக்ராசனத்தின் கீழ் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி பிராமணரல்லாதார் மகாநாட்டைப்பற்றி பேசுகையில் ஒரு பெரிய ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார். அது வருமாறு:-

“ஸ்ரீமான் யாதவர் இங்கு வந்து வகுப்புத் துவேஷத்தை மூட்டப் பார்த்தார். சட்ட மெம்பர் ( மனு.சர். ஊ.ஞ. ராமசாமி அய்யர்) தாம் பிராமணரென்று பயந்து சட்டப்பிரகாரம் கவனிக்காது விட்டுவிட்டார். இவருக்கு தைரியமில்லாவிடில் தம் பதவியை ராஜீனாமா செய்துவிட்டு ஒரு பிராமணரல்லாதாரைக் கொண்டு ஏன் தக்கது செய்திருக்கக் கூடாது.”

(இது 27.12.25 சுதேசமித்திரன் அனுபந்தம் 7-வது பக்கம் 4-வது கலம் 24-வது முதல் 32-வது வரிவரையில்) என்று பேசியிருக்கிறார். இவ்வுரைகளின் மூலம் பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் பிராமணர்கள் தங்கள் அதிகார பதவியை எப்படி உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதையும், தாங்களாகச் செய்யப் பயப்படுகிற சந்தர்ப்பங்களில் என்ன விதமான வழியைக் கையாளுகிறார்கள் என்கிற விஷயத்தையும், பகிரங்கமாய் எடுத்துக்காட்டிவிட்டார். இது கல்பாத்தி விஷயத்தில் தங்கள் அதிகாரம் எப்படி உபயோகப்படுத்தப்பட்டது என்பதும், தாங்கள் கொஞ்சம் பயப்பட வேண்டிய சந்தர்ப்பமாகிய காஞ்சீபுரம் மகாநாட்டில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் வகுப்புவாரித் தீர்மான விஷயத்தில் ஒரு பிராமணரல்லாதாரைக் கொண்டு அத்தீர்மானம் ஒழுங்குக்கு விரோதமானது என்று தள்ளும்படி செய்ததும், எப்படி தக்கது செய்யப்பட்டது என்பதும் வாசகர்கள் உணர்வதற்குச் சரியான சந்தர்ப்பம் என்று நினைக்கிறோம்:-

இந்த இரண்டு விஷயத்திலும் இருவகையில் தாங்கள் வெற்றி அடைந்ததை மனதில் வைத்துக்கொண்டே வெற்றிமுரசு அடிக்கும் ஆனந்தத்தில் உண்மையைக்கக்கிவிட்டார். இதைப்பற்றி பிராமணரல்லாதார் சார்பாக நாம் நன்றி செலுத்துகிறோம். ஆனாலும், சட்ட மெம்பரையும், காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவரையும் வெளியாக்கி சந்தியில் இழுத்து விட்டுவிட்டதினால் அவர்களின் மனக்கசப்புக்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஆளாகாமல் இருக்க முடியாதே என்பதற்கு நாம் மிகவும் வருந்துகிறோம்.

தவிர “மதுவிலக்கு விஷயத்தில் பிராமணரல்லாத மந்திரிகள் என்ன சாதித்து விட்டார்கள்” என்று அடிக்கடி பிராமணப்பத்திரிகைகளான இந்து, சுதேசமித்திரன், சுயராஜ்யா முதலியவை பாமர ஜனங்களுக்கு பிராமணரல்லாதார் கட்சியின் பேரில் வெறுப்புண்டாகும்படி தங்கள் பத்திரிகையின் மூலம் விஷமப் பிரசாரம் செய்வது யாவரும் அறிந்த விஷயம். போதாக்குறைக்கு காஞ்சீபுரம் மகாநாட்டிற்குப் பிறகு என்று சொல்லிக்கொண்டு ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரும் மதுவிலக்கு என்கிற பெயரைச் சொல்லிக் கொண்டு ஸ்ரீமான் ஊ. ராஜகோபாலாச்சாரியாரும் புறப்பட்டிருக்கிறார்கள். ஸ்ரீமான் ஆச்சாரியாருக்குப் பதில் சொல்லும் வகையில் மதுவிலக்கைப் பற்றி ஸ்ரீமான் ளு. சத்தியமூர்த்தி பேசுகையில் “நாம் சுயராஜ்யம் பெற்றாலொழிய குடியை ஒழிக்க சட்டம் ஏற்படுத்த முடியாது” என்று சொல்லியிருக்கிறார். இதனால் இப்பத்திரிகைகள் பிராமணரல்லாத மந்திரிகள் பேரில் குறைகூறும் கூற்றுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை வாசகர்களே அறிந்து கொள்ளலாம்.

குடி அரசு துணைத் தலையங்கம் - 10.01.1926

 
Read 22 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.