கோயமுத்தூர் ஜில்லாவில் பஞ்சம். குடி அரசு கட்டுரை - 20.09.1925

Rate this item
(0 votes)

இந்த ஜில்லாவின் தென்பாகம் அதாவது ஈரோடு கோயமுத்தூர் இருப்புப்பாதைக்கு தெற்கேயுள்ள எல்லா தாலூக்காக்களிலும் ஜனங்கள் பஞ்சத்தால் வருந்துகின்றனர்.இவ்வருஷம் மழையில்லாததால் புஞ்சை வெள்ளாமைகள் செய்யமுடியாமல் போயிற்று. தோட்டக்கால் புஞ்சைகளில் கிணர் வற்றிப்போய்விட்டமையால் விளைவு கிடையாது. ஒவ்வொரு ஊரிலும் ஜனங்கள் தாகத்துக்குத் தண்ணீரில்லாது தவிக்கின்றனர். தென்னை மரங்களும் பனைமரங்களுங்கூட பட்டுப்போயின.கால்நடைகளுக்கு ஓலைகளையும் வேம்பிலைகளையும் முறித்துப் போட்டு மரங்களும் மொட்டையாயிற்று. மனிதர்களுக்கும் மாடுகளுக்குமாக சேர்ந்து கஷ்டம் வந்துவிட்டது.

ஒவ்வொரு குடித்தனக்காரரும் கையிலிருந்த காசும் கடன் வாங்கினதும் எல்லாம் செலவு செய்து கிணர்கள் வெட்டியும் பலனில்லாது கைக்காசுகளையும் இழந்தனர். ஏழைமக்களாயுள்ளவர்கள் ஊருக்கு 20, 30 குடிகள் பெண்டு பிள்ளைகளுடன் மலைப் பிரதேசங்களுக்கு போகிற கொடுமை பார்த்து சகிக்கமுடியவில்லை. தாராபுரம் தாலூகாவிலிருந்து மட்டிலும் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் ஓடிவிட்டன. கோயமுத்தூர் ஜில்லாக் கலெக்டரும், அதிகாரிகளும் கஞ்சித் தொட்டி வைப்பதாக கிராமங்கள்தோறும் போகின்றனர். கொலைகளும் வழிப்பறிகளும் திருடர்களும் அதிகமாக நடக்கின்றனர். காங்கயத்தில் கஞ்சித்தொட்டி வைக்க யோசனை செய்து ஜில்லாக் கலெக்டர் வந்தார் என்று கேள்விப்பட்டதும் கிராமஜனங்கள் காங்கயத்துக்கு ஓடி வந்து பார்த்துப் போகிறார்கள்.

கதர் நூல் உற்பத்தி செய்யும் வியாபாரிகளிடம் நூல் நூற்க வரும் கூட்டம் அதிகமாயிருப்பதால் வியாபாரிகள் தங்கள் சக்திக்கேற்ற அளவுதான் பஞ்சுகொடுக்க நேருவதால் அநேகம் பெண்கள் பஞ்சில்லாது திரும்பிப் போகின்றனர். ஜனங்கள் கூலிவேலைகள் கிடைக்காது அலைகின்றனர். கிராமத்திலுள்ள ஏழைக்குடிகள் ரோட்டுகளிலும், இட்டேரிகளிலும் ஏராளமாக நின்று பாம்புக்கும் தேளுக்கும் கூடப் பயப்படாது நாகதாளிப் பழத்திற்கு அலைகிறதைப் பார்க்க முடியவில்லை.

தாழ்த்தப்பட்ட குலத்து ஆண்களும் பெண்களும் சுள்ளிப்பழங்களைக் கூடைகளில் நிறப்பிக் கொண்டு போகின்றனர். இக்கொடுமைகளைப் பார்க்க வந்த அதிகாரிகளுக்கு காங்கயத்தில் கிராமதிகாரிகள் கலெக்டர் தங்கியிருந்த பங்களாவிற்கு தாராபுரத்திலிருந்து வாழை கமுகு கொண்டுவந்து கட்டிவிட்டார்கள், தண்ணீர் 15 மைலிலிருந்து கலெக்டருக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். தண்ணீரில்லாத கொடுமையைப் பார்க்க வந்தவர்கள் கண்ணுக்கு குலையோடு வாழையையும் கமுகையும் ஆற்று ஜலத்தையும் காட்டினால் அதிகாரிகள் என்ன எண்ணுவார்கள் என்பதை கிராமதிகாரிகள் உணராமற் போனது என்ன அறியாமையோ தெரியவில்லை.

குடி அரசு கட்டுரை - 20.09.1925 

 
Read 50 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.