பஞ்சாயத்து. குடி அரசு கட்டுரை - 16.08.1925

Rate this item
(0 votes)

ஒத்துழையாமை திட்டத்தில் சர்க்காரும் பொதுஜனங்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய பாகம் ஒன்று உண்டு. அதாவது, விவகாரங்களைக் கோர்ட்டுக்குப் போய் பைசல் செய்து கொள்ள நினையாமல் உள்ளூர் பஞ்சாயத்தார் மூலம் வழக்குகளைப் பைசல் செய்து கொள்வது, இருகட்சிக்காரருக்கும் அனுகூலம் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். இந்த யோசனை கொஞ்சமும் புதிதானதல்ல ஆதியில் ஜனங்கள் பஞ்சாயத்து மூலமாய் தான் தங்கள் வழக்குகளை பைசல் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு மனிதரும் தனக்குத் தானே பஞ்சாயத்தாராகத்தான் இருந்திருக்கிறார்.

இந்த தன்னுடைய பஞ்சாயத்தை ஒப்புக்கொள்ளாத காலத்தில் மனிதன் பலாத்காரத்தினால் அதை அமுலுக்குக் கொண்டுவரப் பார்க்கிறான். இது ஒருவருக்கொருவர் இரத்தம் சொரியக் கொண்டு வந்துவிட்டதினால், தனக்குத் தானே பஞ்சாயத்தாராக இருக்கக்கூடாது என்று அறிந்து மூன்றாவது மனிதரை பஞ்சாயத்தாராக ஏற்படுத்திக்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. அது நாளாவட்டத்தில் வளர்ந்து கிரமமான உபயோகமான பஞ்சாயத்தாக ஏற்பட்டது. பொதுஜனங்கள் தற்கால நிலையில் வக்கீல்களின் ஆசை வார்த்தைகளையும் கோர்ட்டின் அக்கிரமங்களையும் நம்பியே பஞ்சாயத்தை அலட்சியம் செய்து வருகிறார்கள். வக்கீல்களும் கோர்ட்டுகளும் அயோக்கியத்தனமான முறையில் காரியங்களை நடத்துகிறவரையில் ஜனங்களுக்குப் பஞ்சாயத்தில் இஷ்டம் ஏற்படாது, ஏனெனில் கோர்ட்டுகளில் கிரமத்திற்கு விரோதமான அதிக லாபத்தை சம்பாதித்துவிடலாம் என்கிற ஆசை கிரமத்தை ஒப்புக்கொள்ளவோ, கிரமப்படி நடக்கவோ மனிதனைக் கட்டுப் படச் செய்வதில்லை. நியாயம் செய்வதனாலும் நியாயப்படி நடப்பதனாலும் கோர்ட்டுகளுக்கும் வக்கீல் களுக்கும் வேலையே ஏற்படாது.

செலவு செய்து நியாயம் சம்பாதிப்பதற்கு பதிலாய், ஜனங்கள் செலவில்லாத நியாயத்தை சம்பாதிக்க பஞ்சாயத்திற்குத்தான் போவார்கள். இருவரில் ஒரு கட்சிக்காரனுக்காவது கோர்ட்டில் நியாய விரோதமான லாபத்தை அடையலாம் என்கிற ஆசை இல்லாவிட்டால் கண்டிப்பாய் கோர்ட்டுகள் அடைபட்டே போய்விடும்.

பொதுவாக நமது நாட்டுப் பஞ்சாயத்துக்கு முட்டுக்கட்டையாய் இருப்பது வக்கீல்களும் கோர்ட்டுகளுமே அல்லாமல் ஜனங்களின் அறியாமை என்று நாம் ஒருக்காலும் சொல்லவே மாட்டோம்.

குடி அரசு கட்டுரை - 16.08.1925

Read 17 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.