பத்திரிகை நடத்துபவன் பார்ப்பானாக இருந்தால் அவனிடம் யோக்கியம் எதிர்பார்க்க முடியுமா? விடுதலை - 13-05-1969

Rate this item
(0 votes)

பத்திரிக்கைத் தொழில் பெரிதும் அயோக்கியர்களிடம் சரணடைந்துவிட்டது!

"கடவுள்" தொண்டு செய்யும் பெண்களின் தொண்டு, நம் நாட்டில் விபசாரிகள் வசம் இருந்தது போல, மக்களுக்குத் "தொண்டு செய்யும்" பத்திரிக்கைத் தொழில், பெரிதும் நம் நாட்டில் மாபெரும் அயோக்கியர்கள் வசமே அண்டி நிற்கின்றது. விபச்சாரிகளால் செய்யப்படும் கடவுள் தொண்டு பொது மக்களை ஒழுக்கக் கேடர்கள், நாணயக் கேடர்களாக ஆக்குவது போலவே, அதைவிட அதிகமாக அயோக்கியர்களால் செய்யப்படும் பத்திரிக்கைத் தொண்டும், பொது மக்களையும் நாணயக்கேடு ஒழுக்கக்கேடு உள்ளவர்களாக ஆக்கிவிடுகின்றது.

நம் நாட்டில் அரசியலிலோ சமூதாய இயலிலோ உத்தியோக இயலிலோ 100 - க்கு 5 - பேர்கள் கூட யோக்கியமானவர்களாகவோ, நாணயமானவர்களாகவோ காண முடியவில்லை என்றால், அந்த வாய்ப்பு பத்திரிக்கைக்கார அயோக்கியர்களால் நம் நாட்டுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பேயாகும்.நம் நாட்டுப் பத்திரிக்கைத் தருமம் மனுதர்மம் போல; அதாவது எந்தவிதமான அயோக்கியத்தனமான அதருமத்தைச் செய்தாவது "மனுதருமத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறும் தருமம் போல, எந்தவிதமான அயோக்கியத்தனத்தையும் செய்து பத்திரிக்கை நடத்த வேண்டும் என்கின்ற தத்துவத்தைக் கொண்டதாக ஆகிவிட்டது.நம் நாட்டுப் பத்திரிக்கைகள் பிறவியில் அயோக்கியத்தனத்தால் வாழ வேண்டியவர்களான பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டும், பார்ப்பனர்களால் நடத்தப்பட்டும் வர நேர்ந்தால் பத்திரிக்கைத் தொழிலுக்கு யோக்கியம், நாணயம் தேவை இல்லாமலும் ஏற்பட முடியாமலும் போய்விட்டது.பார்ப்பனர்கள் பிறவியில் அயோக்கியத்தனத்தால் நாணயமற்ற தன்மையால் வாழ வேண்டியவர்கள் என்று ஏன் சொல்லுகின்றேன்? என்றால்

முதலாவது: -

பார்ப்பனர்கள் தங்களைப் பிறவியிலேயே மேல் சாதிக்காரர்கள், உயர்ந்த பிறவியாளர் என்று சொல்லிக் கொண்டு அதற்கேற்றபடி மற்றைய 100- க்கு 97 - பேர்கள் மக்களைவிட, 100-க்கு 3 - பேர்களான தாங்களே உயர் பிறவியாய் வாழ முயற்சிப்பவர்கள் வாழ வழி செய்து கொள்ளுபவர்கள்.

இரண்டாவது: -

இப்படிப்பட்ட வாழ்வு வாழ, வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருட்டு, கொலை, கொள்ளை, பொய், பித்தலாட்டம், அக்கிரமம், அயோக்கியத்தனம் முதலிய எப்படிப்பட்ட கெட்ட காரியங்களையும் செய்யலாம் என்ற சமய அனுமதி பெற்றவர்கள்.

மூன்றாவது: -

தாங்கள் உயர் வாழ்வு வாழ, மற்றவர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்தி அடக்கி, கீழ்மைப்படுத்தி வைத்து இருந்தால் தான் வாழ முடியும், என்கின்ற தருமத்தைப் படிப்பினையாய் வாழ்க்கைத் தருமமாகக் கொண்டவர்கள்.

நான்காவது:-

தாங்கள் (பார்ப்பனர்கள்) எப்படிப்பட்ட அயோக்கியத்தனம், அக்கிரமம் செய்தாலும் தங்களுக்குப் பாதகமே (பாவம்) ஏற்படாது என்ற உரிமை பெற்றவர்கள்.

இப்படிப்பட்ட கூட்டத்தாரால் நடத்தப்படும் பத்திரிகைகள் மாத்திரம் அல்ல. ஆட்சி, பதவி, உத்தியோகம், அதிகாரம், ஆசிரியத் தொழில், குரு, தொழில், சமயத் தொண்டு நீதித் தொண்டு, நிருவாகத் தொண்டு முதலியவை யோக்கியமாக இருக்க முடியும் என்று நம்புவது அறிவுடைமையாகுமா?

இந்த நிலையில் நாட்டில் மனித சமூதாயத்தில் ஏன் நாணயம் இல்லை, ஒழுக்கம் இல்லை என்று கேட்பது - கவலைப்படுவது "வேப்பங்காய் ஏன் கசக்கின்றது?" என்று கேட்பதற்கே ஒப்பாகும் என்று தான் சொல்லுவேன்.

பத்திரிகைகளால் நம் நாட்டுக்கு, மனித சமூதாயத்திற்கு ஏற்பட்ட கேடு - உலகில் எந்த நாட்டிற்கும் எந்தத் துறையிலும் ஏற்பட்டிருக்கும் கேடாகும்.பத்திரிகைக்காரர்கள் மனித சமுதாய வரிசையில் எந்த வரிசையிலும் இருக்கத் தகுதியற்றவர்களே ஆவார்கள்.

இவர்களுக்கு இந்த நாட்டில் மதிப்பு இருக்கின்றது என்றால், அது அந்த அளவுக்கு இந்த நாட்டு மக்கள் மூடர்கள் அல்லாது ஒழுக்கத்தில் - நேர்மையில் கவலையற்றவர்கள் என்பதுதான் தத்துவ முடிவு ஆகும்.

அயோக்கியர்களுக்குத் தான் பத்திரிகைகளில் நல்ல இடம் என்பது ஒன்றே இந்த நாட்டில் ஏன் இவ்வளவு அயோக்கியர்கள் பெருகிவிட்டார்கள் என்பதற்குச் சரியான காரணமாகும்.

பொது மக்கள் பத்திரிகைகள் பற்றியோ பத்திரிகைக்காரர்கள் பற்றியோ சிந்திக்கும் போது,

அப்பத்திரிகை எதற்காக நடத்தப்படுகின்றது?

பத்திரிகை உரிமையாளனின் இலட்சியம் என்ன?

பத்திரிகைக்காரனின் சொந்தப் கொள்கை என்ன? நாணயம் என்ன?நடத்தையின் தரம் என்ன?

பத்திரிக்கையால் ஏற்பட்ட பலன் என்ன?

பத்திரிகை நடத்துபவன் பார்ப்பானாக இருந்தால் அவனிடம் யோக்கியம் எதிர்பார்க்க முடியுமா?

வர்த்தகனாக இருந்தால் அவனிடம் நாணயம் எதிர்பார்க்க முடியுமா?

பணக்காரனாக இருந்தால் அவனிடம் கொள்கையையோ, நேர்மையையோ எதிர்பார்க்க முடியுமா?

வயிற்றுப் பிழைப்புக்காரனாக இருந்தால் அவனிடம் கொள்கை, நாணயம், நேர்மை, ஒழுக்கம், பொதுநலம் ஆகிய குணங்களை எதிர்பார்க்க முடியுமா?

இதுவரை நம் நாட்டு மக்கள் 100 - க்கு 90 - பேர்கள் எழுத்து வாசனையற்ற பாமரர்களாக இருந்து வந்ததால், பத்திரிகைக்காரர்களே, நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, வாழ்க்கை நலம் முதலியவற்றிற்குக் கர்த்தர்களாக, எஜமானர்களாக இருந்து வந்தார்கள்.

அத்தோடு நம் நாட்டுப் பாமர மக்களிடம் மதத்தைப் புகுத்தியதால், அதுவும் பார்ப்பனர்களால், பத்திரிக்கைக்காரர்களால், வயிற்றுப் பிழைப்புப் பிரசாரகர்களால் மத்தைப் புகுத்தும் பணி நடந்து வந்ததால் மக்கள் மடையர்களாகவும், அயோக்கியர்களாவும் ஆக, எளிதில் முடிந்து விட்டது.

எப்படிப்பட்டக் கடுமையான நோய்களுக்கும் இப்போது மருந்தும் சிகிச்சை முறையும் ஏற்பட்டுவிட்டதைப் போல், எப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களை வளர்க்கும் நோய்களுக்கும் (சாதனங்களுக்கும்) ஒழியும்படியான காலம் வந்தே தீரும்.

பத்திரிகைகளுக்கு அடிமையாக இருப்பவன் கோழை - வேஷக்காரன். பத்திரிகைகளை வெறுப்பவன் அவற்றின் தன்மையை வெளியாக்குபவன் வீரன் - உண்மையானவன்.

(13-05-1969 - சென்னை - ஆபடஸ்பரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.
விடுதலை - 13-05-1969 

 
Read 17 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.