கடவுளை நம்ப முட்டாளே போதும். விடுதலை - 25.12.1959

Rate this item
(0 votes)

என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமா னால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ, இல்லையென்றோ சொல்ல முன் வரவில்லை. அதுபோலவே நீங்கள் அனை வரும் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று கூறவில்லை. இன்னொன் றும் சொல்கிறேன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரணமாக ஒரு முட்டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லையென்று மறுத்துக்கூற ஒரு அறிவாளி யால்தான் முடியும். மறுப்பதற்கான பல ஆதாரங்களைச் சொல்ல வேண்டும்; சிந்தித்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும்.

உலகில் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுமார் 100 கோடி மக்கள் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர் கள் சற்றுக் கூடுதலாக இருப்பார்கள். நாம் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உடையவர்களா? அப்படியானால் முகம்மதியர், கிறித்துவர் இவர்கள் நிலை என்ன? கிறித்துவர், முகம்மதியர்க ளுக்கு கடவுள் ஒன்று தானே! கிறித்துவர், முகம்மதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கி யமான கடவுள் என்கிறான்; அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான். ஒழுக்கமே உருவானவர், கருணையை உடை யவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன். 

அவனுக்கு ஒரே ஒரு கடவுள் என்றால் நமக்கு எத்தனை ஆயிரம் கடவுள்கள்? அவர்களின் பெயர்களை எழுத வேண்டு மென்று ஆரம்பித்தால் மைதான் தீர்ந்துவிடுமே தவிர பெயர்கள் முடிவடையாதே! அதற்கெல்லாம் என்ன ஆதாரம்? யாராவது ஒரு பார்ப்பானைக் கேளுங்கள் எப்படி அந்தக் கடவுள்கள் ஏற்பட்டன, எப்போது, எங்கே என்று கோடிக்கணக்கிலா நமக்குக் கடவுள்கள் இருப்பது? நாங்கள் தலையெடுத்து இதையெல்லாம் கேட்காமல் விட்டிருந்தால் மைல் கற்கள், பர்லாங்குக் கற்கள் எல்லாம் கடவுள்களாகி இருக்குமே. படுத்தி ருக்கிற அம்மிக்கல்லை எடுத்து நிறுத்திவைத்து குங்குமம் மஞ்சள் பூசி விட்டுவிட்டால் அதுவும் ஒரு கடவுள். இதையெல் லாம் யார் கேட்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் சிறிதளவாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

யானை, பன்றி, மீன், காக்கை, எருமை, பாம்பு இந்த உருவமுள்ளது எல்லாம் நமக் குக் கடவுள்கள், இவைகள் எல்லாம் .எதற் காக? புற்றைக் கண்டால் பால் ஊற்றுகிறான்; கழுகு ஆகாயத்தில் பறந்தால் கன்னத்தில் அடித்துக் கொள்கிறான்; மாட்டைப் பார்த் தால் கும்பிடுகிறான். ஒரு கடவுளுக்கு யானை முகம், மூன்று முகம் 5 முகம், 10 முகம், பானை வயிறு; இன்னொரு கடவுள் ஆயிரம் தலையுடையாள், இரண் டாயிரம் கையுடையாள். இந்த கடவுள்களுக்கெல்லாம் என்ன வேலை?

எதற்காக கடவள் அம்சங்களைக் குறைவாக அவமானமாக நம்மிடையே புகுத்த வேண்டும்? இதைப்பற்றி யார் சிந்தித்தார் கள்? 1500 வருடங்களுக்கு முன்பு புத்தர்தான் கேட்டார். முதலில் அறிவுக்கு வேலை கொடு, சுதந்திரமாக இருக்கவிடு, எதையும் ஏன்? எப்பொழுது? எப்படி? என்று கேள் என்றார்; மகான் சொன்னார்; ரிஷி சொன்னார், கடவுள் சொன்னாரென்று எதையும் நம்பிவிடாதே என்றார். அவர் பேச்சை யார் கேட்டார் கள்? புத்தர்களை நாட்டை விட்டே ஓட்டினார்கள். அவர்கள் பெண்களை கற்பழித்தார்கள். வீடுகளைக் கொளுத்திப் போட் டார்கள். கொன்று விடுவேன் என்று அவரது சீடர்களைப் பயமுறுத்தினார்கள். ஏன் புத்தர் பிறந்த இடத்தில் அவர் கொள்கைகள் இல்லை? வெளிநாடுகளில் எப்படி பரவியது? பரவியதற்குக் காரணம் என்ன?

அதற்குப் பிறகு வள்ளுவர் சொன்னார், எதிலும் உன் அறிவுக்கு வேலை கொடு என்று. அவர் சொன்னது எங்கே போயிற்று? எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் போட் டார்கள். பரம் முட்டாள்தனமான மனுதர்மம், பகவத்கீதை, இராமாயணம், பாரதம் இவைகளைத்தானே மக்கள் கையாண் டார்கள்? எத்தனை பேருக்குத் தெரியும் குறளைப்பற்றி? பழைய தமிழ் நூல்களைப்பற்றி யாருக்குத் தெரியும்? இப்படித் தானே மகான் சொன்னார். ரிஷி சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார், வெங்காயம் சொன்னார் என்று நம் எல்லோ ரையும் படுகுழியில் தள்ளிவிட்டார்கள். அமெரிக்கா, துருக்கியில் இராமாயணக் கதையைச் சொன்னால் அங்கிருப்பவர்கள் எல் லாம் சிரிக்க மாட்டார்களா?

சங்கராச்சாரியார் ஒரு மாத காலமாகச் : சுற்றினார். அவரைப்பற்றி நம்மவனே அருள்வாக்கு என்று எழுதுகிறான். சங்கராச் சாரியாருக்கு அத்வைத மதம், இரண்டு கட வுள் கிடையாது. ஒரே ஒரு கடவுள் அதுவும் நான்தான் என்பார். உண்மையிலேயே சங்க ராச்சாரியாருக்கு கடவுள் கிடையாது. வேண் டுமானால் கேட்டுப் பாருங்கள். அவர் கடைப்பிடிப்பது மாயாவாதம், பூசுவது திருநீறு, பூசை செய் வது ஒரு பெண் கடவுள். இதுபோல்தான் தவிர வேறு என்ன?

கடவுளுக்கு பிறப்பேது இறப்பேது? நம் கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இராமன் நவமியில் பிறந்திருக்கி றான். சுப்ரமணியன் சஷ்டியில் பிறந்திருக்கிறான். கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான் என்கிறான். இறப்பு பிறப்பு கொண்ட வர்கள் எல்லாம் கடவுள்களா? இதையெல்லாம் இந்த 1958ஆம் வருடத்திலே கூட ஏன், எதற்கு என்று கேட்க ஆள் இல்லையே இதற்கெல்லாம் நாம்தானே பணம் கொடுக்கிறோம். எதற்காக கடவுளுக்குப் பூசை போட வேண்டும், உணவைப் படைக்க வேண்டும்? நம்முடைய ஆள் பணம் கொடுத்தால் பார்ப்பான் கடவுள் சிலையை சிங்காரிக்கிறானே தவிர அந்தப் பார்ப்பான் ஒரு நாளைக்காவது கடவுளை சிங்காரித்ததுண்டா? இவ்வளவு செய்தும் நாம் எல்லோரும் தாசிமகன், வேசிமகன், சூத்திரன் தானே? 

கடவுளுக்கு எதற்காக மனைவி? அப்படித்தான் ஒரு பெண் டாட்டியோடு விடுகிறாயா? பூதேவி ஒருத்தி, சீதேவி ஒருத்தி இரண்டு பெண்டாட்டி பற்றாமல் தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு ஓடுகிறான். எதற்காக கடவுளை துலுக்க நாச்சியார் என்கிற தாசி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும்? இங்கிருக்கின்ற முகமதியர்கள் மைனாரிட்டிகள் மெஜாரிட்டியாக இருந்திருந்தால், எங்கள் சாதிப் பெண் உங்கள் கடவுளுக்குத் தாசியா என்று உதைப்பான், ஒரு தடவை தான் திருமணம் கடவுளுக்கு செய்கிறாயே, பிறகு வருடா வருடம் வேறு எதற்கு? முன் வருடம் செய்த மனைவியை யார் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்? செய்து வைத்த திருமணம் ரத்தாகி விட்டதா? அப்படியானால் எந்தக் கோர்ட்டில் தீர்ப்பு நடந்தது? இம்மாதிரி காரியங்களையெல்லாம் செய்து நீங்கள் சாதித்தது என்ன ?

கிறிஸ்துவரையும் முகமதியரையும் உங் கள் கடவுள் எப்படிப்பட்டவர் என்று கேட் டுப் பாருங்கள். அன்பாலும் அருளாலும் ஆனவன் ஆண்டவன் என்று கூறுவார்கள். நம் கடவுள்களைப் பாருங்கள்; ஒரு கடவுளி டம் கோடரி இருக்கும், மற்றொரு கடவுளிடம் வில், அம்பு இருக்கும். இப்படித்தானே சூலாயுதம், மழு, அரிவாள், சக்கரம் என்று கசாப்புக் கடையில் இருப்பது போல இருக்கிறது? எதற்காக இந்தக் கருவிகள்? அன்பே உருவான கடவுளுக்கு - கரு ணையே வடிவான கடவுளுக்கு எதற்கு இதெல்லாம்? ஆச்சாரி யார், ஒரே கடவுள்தான் நம்மையெல்லாம் படைத்தார்; நடுவில் யாரோ இப்படிச் செய்துவிட்டார்கள். அதற்கு நாங்கள் என்ன செய்வது? என்று சொல்லுகிறார். அப்படியானால் அவர்கள் செய்துவிட்டுப் போய்விட்டால் உனக்கு எங்கே போய்விட்டது புத்தி? ஏன் இதையெல்லாம் சீர்திருத்தக்கூடாது?

அன்புமிக்க தோழர்களே! இதுமாதிரியான கேடான காரியங்க ளைப்பற்றி எனக்குமேல் நிறைய அநேகருக்குத் தெரியும். ரொம்பப் பேர் படித்திருக்கிறார்கள். ஆனால் என் போல் வெளியே சொல்ல முடியவில்லை. எங்கே தங்கள் வயிற்றில் மண்விழுந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். ஏன் ஒவ்வொருவனும் எதற்கெடுத்தாலும் கடவுள் கடவுள் என்கிறான்?
சதிரானால், பாட்டுப்பாடினால் எல்லாக் காரியங்களுக்கும் கட வுள் பெயராலேயே செய்கிறார்கள்.

இது மாதிரியான கொடுமைகளை நீக்க நாட்டில் ஆள் இல்லையே, 1000, 2000 வருடமாக சூத்திரன், வேசிமகன் என்று இருக்கும் பட்டத்தை நீக்க இந்த நாட்டில் இருக்கிற கட்சிகள் என்ன பரிகாரம் செய்தன? மனிதர்களுள் பிரிக்கும் சக்தியை எதிர்த்து எந்த கட்சி என்ன செய்தது?

(14.2.1958 அன்று கோவையில் நடைபெற்ற மாபெரும் வரவேற்பு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி).
விடுதலை - 25.12.1959

Read 55 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.