பார்ப்பனப் பட்டங்களின் இரகசியம் குடி அரசு - கட்டுரை - 03.02.1929)

Rate this item
(0 votes)

பார்ப்பனப் புரட்டுகளின் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் ஆகியவைகளில் மிகுதியும் பொதிந்து கிடப்பது பட்டங்களே ஆகும். அதாவது தேவர், சுரர், அசுரர், ரிஷி, முனி, ராக்ஷதர், ஆழ்வார், நாயனார் போன்ற வார்த்தைகளேயாகும். இவ்வார்த்தைகள் கொண்ட பட்டமுடையவர்கள் தான் இப்போதும் மக்களுடைய நீதிக்கும் வாழ்க்கைக்கும் ஆதார மானவைகள் என்று எழுதி வைத்திருக்கும் அநேக விஷயங்களுக்கும் கர்த்தாக்களாய் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லுவது பெருத்த தோஷங்களாகக் கற்பிக்கப்பட்டும் இருக்கின்றன. எனவே இப்பட்டங்கள் யாருக்கு எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கின்றது என்று பார்த்தால், பார்ப்பனர்களுடைய நன்மைக்கு ஆளாயிருக்கின்றவர்களுக் கெல்லாம் சாதாரணமாய்க் கிடைத்து விடுகின்றது. அவர்களுக்கு விரோத மாய் இருக்கின்றவர்களுக்கும் அசுரன், ராக்ஷதன் என்கின்ற பெயர்கள் கிடைத்து விடுகின்றன.

ஆனால் இவர்களால் உயர்ந்த பட்டங்களாகிய தேவர், முனிவர், ரிஷி போன்ற பட்டம் பெற்றவர்களுக்கும் தாழ்ந்த பட்டங்களாகிய ராக்ஷதர் அசுரர் போன்ற பட்டம் பெற்றவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா என்று பார்த்தால் நடவடிக்கையில் ஒழுக்கத்தில் உயர்ந்த பட்டம் பெற்றவர்களை விட தாழ்ந்த பட்டம் என்பதை பெற்றவர்களே பெரிதும் சிறந்தவர்களாயிருக்கின்றார்கள். ஆனால் உயர்ந்த பட்டத்திற்கும், தாழ்ந்த பட்டத் திற்கும் பார்ப்பனர்கள் சொல்லும் காரணங்கள் என்னவென்றால், தேவர்களுக்கு இடையூறு செய்தவர்கள் இராக்ஷதர்கள் என்றும் சுரர்களுக்கு இடையூறு செய்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப் படுவதைத் தவிர வேறு காரணங்கள் கற்பித்திருப்பதாக எங்கும் காணக் கிடைக்கவில்லை.

 

சமீப காலத்தில் திலகருக்கு ரிஷிப் பட்டமும் டாக்டர் சுப்ரமணிய அய்யருக்கு முனீந்திரர் பட்டமும் அரசியல் உலகில் பார்ப்பனர்களால் இடப்பட்டது. ஆனாலும் இவைகள் பார்ப்பனச் சட்டப்படி வைதீக உலகத்தில் செல்லாததாக இருக்கலாம். ஆனால் இந்த வாரப்பத்திரிகையில் சங்கராச்சாரி ஆழ்வார் மகாராஜாவிடம் அவரது உடலவ்வளவு எடை வெள்ளி வாங்கிக் கொண்டு அவருக்கு ஒரு ராஜரிஷிப்பட்டம் அளித்திருப்பதாகவும் அதற்காக மறுபடியும் ஆழ்வார் ராஜா ஒரு பெரிய மகாவிஷ்ணு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு பதினாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து லக்ஷப் பிராமண போஜனம் செய்ய ஆழ்வார் மகாராஜா தீர்மானித்திருப்பதாகவும் வெளியாகி யிருக்கின்றது.

 

ரிஷி என்பது பெரிய பட்டம். அது இந்தியா முழுமைக்கும் “மேல் லோகத்திற்கும்” “கீழ் லோகத்திற்கும்”கூட பாத்தியப்பட்டது. அப்படிப்பட்ட பட்டம் பெற்ற ஆழ்வார் மகாராஜாவைப் பற்றி நம் நாட்டு மக்களில் யாருக்கா வது ஏதாவது தெரியுமா? ரிஷிகளுக்குச் சொல்லப்படும் பெருமைகள் போல ஆழ்வார் ராஜாவிடம் என்ன பெருமைகள் இருக்கின்றன? அவர் யாருக்கு என்ன நன்மை செய்தார்? சங்கராச்சாரிக்குப் பணம் கொடுத்திருப்பார். இவருக்குத் தன்னளவு எடை வெள்ளி கொடுத்திருப்பார். பார்ப்பனர்களுக்கு வயிறு வெடிக்க சாப்பாடும், கஞ்சாவுக்கும் பூரணாதி லேகியத்திற்கும் தாராளமாய் தக்ஷணையும் கொடுத்திருப்பார், இதைத் தவிர வேறு என்ன செய்தார்?

 

இதுபோலவே கொஞ்ச காலத்திற்கு முன் தென்னாட்டு சங்கராச்சாரிகளில் ஒருவர் ரூபாய் 10000 பெற்றுக் கொண்டு ஒருவருக்கு தீர்த்தபதி என்ற பட்டம் கொடுத்தாராம். மற்றொரு நாட்டுக் கோட்டையாரிடம் 7000 ரூபாய் பெற்றுக் கொண்டு தர்ம பூஷணம் என்று பட்டம் கொடுத்தாராம். மலையாளத்துப் பார்ப்பனர்கள் தங்கத்தில் மாடு செய்து அதன் வயிற்றில் கொஞ்ச நேரம் மலையாளத்து ராஜாவை இருக்கச் செய்து பிறகு அவரைப் பிராமணராக்கி விட்டு தங்கமாட்டை வெட்டி பங்கு போட்டுக் கொள்ளுகிறார்கள். பிறகு ராஜா கோவிலுக்குள்ளும் விடப்படுகின்றார். பார்ப்பன பந்தியிலிருந்து சாப்பிடவும் அனுமதிக்கப்படுகின்றார். இதுபோல் இன்னமும் எத்தனையோ பட்டங்கள் வழங்கப்பட்டு அவைகள் நம்மவர்களால் வாலாக ஒட்ட வைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் சர்க்கார் கொடுக்கும் பட்டத்தை மாத்திரம் சர்க்கார் தாசர்களுக்குப் பிரசாதம் என்றும், தேசத் துரோகம் செய்ததற்குச் சன்மானம் என்றும், சிலர் சொல்லுகின்றார்கள். சர்க்கார் பட்டம் சர்க்கார்தாசர்களுக்கு சன்மானமானால் பார்ப்பனர்கள் தரும் பட்டத்திற்கு என்னவென்று பெயர் வைப்பது?

ராவணன் ராக்ஷதனானதற்கும், விபீஷணன் ஆழ்வார் ஆனதற்கும் காரணம் என்ன? பார்ப்பனப் புராணப் படியே பார்த்தாலும், ராவணனோ மகா சிவபக்தனாம், வேதம் படித்ததினால் பிராமணன் என்றுகூட சொல்ல வேண்டியவனாம்! ஒழுக்கத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கி கடவுள்களுக்குத் திருப்தி செய்து அரிய பெரிய வரங்கள் பெற்றவனாம். ஆனால் அவன் செய்த தப்பிதம் என்னவென்றால் தேவர்களுக்கு இடுக்கண் செய்ததுதானாம். இதுபோலவே இராக்ஷதர்கள் என்பவர்கள் மீது சுமத்தப்பட்ட தப்பிதங்க ளெல்லாம் மிகுதியும் தேவர்களுக்கு திருப்தியாய் நடந்து கொள்ளுவது தானே ஒழிய வேறு ஒன்றையும் பார்ப்பனப் புராணங்களிலேயே காண முடியவில்லை.

எனவே, தேவர்கள் என்றால் யார் என்று கவனிப்போமானால் தேவலோகத்தில் உள்ளவர்கள் தேவலோகமோ நமக்குத் தெரியாததும் நமது புத்திக்கும் அறிவுக்கும் படாததுமாக இருப்பதால் அதைப்பற்றி நாம் எடுத்துக் கொள்ளும் கவலை வீணானதாகும். ஆனால் பூதேவர்களைப் பற்றிய ஆராய்ச்சி அவ்வளவு வீணானது ஆகாது. ஏனெனில் பூதேவர்கள் என்பவர்கள் பிராமணர்கள்; பிராமணர்கள் என்பவர்களை நமது பார்ப்பனர்கள் தாங்கள்தான் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆகையால் அதைக் கண்டுபிடிப்பது கஷ்டமானதல்ல. ஆனதால் நமது பூதேவர்களான பார்ப்பனர்களும் தமது பட்டங்கள் வழங்குவதில் தேவர்கள் என்பவர் களையே பின்பற்றி தங்களுக்கு இதமாய் இருப்பவர்களுக்கு ராஜரிஷி, பிரம்மரிஷி, ஆழ்வார், முனிவர், நாயன்மார்கள் முதலிய பட்டங்களும் தங்கள் நலத்திற்கு இடையூறாய் இருப்பவருக்கு ராக்ஷதர், அசுரர், சூரன் முதலிய பட்டங்களும் வழங்குவதைப் பார்க்கின்றோம்.

இன்றைய தினமும் நம்மவர்களிலேயே பலர் “ரிஷிகள் சொன்னார்கள், முனிவர்கள் சொன்னார்கள், ஆழ்வார்கள் சொன்னார்கள், நாயன்மார்கள் சொன்னார்கள்; அப்படிப் பட்டவர்கள் சொன்னதை மறுக்கலாமா? கண்டிக்கலாமா? யுக்தியினால் தர்க்கிக்கலாமா? அப்படித் தர்க்கிப்பது நாஸ்திகமல்லவா?” என்றும் வாது புரிய வருகின்றார்கள். ஆனால் இவர்களை “ரிஷிகள் என்றால் என்ன? முனிகள் என்றால் என்ன? ஆழ்வார்களின் யோக்கியதை என்ன? நாயன் மார்களின் நாணயம் என்ன?” என்று கேட்டு விட்டால் நிலத்தைப் பார்த்துக் கொண்டு தலையைச் சொரிந்து கொள்ளுகின்றார்கள். நாயன்மார்கள் பேராலும், ஆழ்வார்கள் பேராலும், ரிஷிகள், முனிவர்கள் பேராலும் தங்கள் வாழ்க்கையையே ஏற்படுத்திக் கொண்ட சிலர், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு, தமக்கே புரியாமல் எதையாவது உளறிக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றுவதில் வெகு கவலை உள்ளவர்களாய் இருக்கின்றார்கள். நமக்கு இக்கூட்டத்தாரின் எவ்வித ஏமாற்றமான வயிற்றுப் பிழைப்பைப் பற்றியும் கவலை இல்லை. ஆனால் இதை நம்பும் பாமர மக்களின் கதி என்ன ஆவது என்கின்ற கவலைதான்!

அண்ணனை எதிரிக்கு காட்டிக் கொடுக்காமல் இருந்தால் விபூஷணன் ஆழ்வாராக ஆகியிருக்க முடியுமா? யாகத்தையும் வேதத்தையும் ஆதரிக்காமல் இருந்தால் நால்வர்கள் நாயன்மார்களாக ஆகியிருக்க முடியுமா? புத்தர் விக்கிரகத்தை உடைக்காமல் இருந்தால் திருமங்கை மன்னன் ஆழ்வாராக ஆகியிருக்க முடியுமா? வர்ணாசிரம தர்மத்தைப் பிரசாரம் செய்யாமலிருந்தால் திரு.காந்திக்கு “மகாத்மா” பட்டம் இன்னமும் நிலைத்திருக்குமா? இந்து மதத்தைப் பிரசாரம் செய்யாமலிருந்தால் நரேந்திரநாதர், சுவாமி விவேகானந்தராயிருப்பாரா? மற்றவர்களைப் பற்றிச் சாவகாசமாய்க் கவனிக்கலாம்.

(சித்திரகுப்தன் என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை - 03.02.1929)

Read 82 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.