காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது (குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.02.1928)

Rate this item
(0 votes)

சென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீஎஸ்.ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை வீசி எறிந்துவிட்டு ஓடிப் போய் விட்டார்கள் என்றும் அந்தச் செருப்புகள் ஏலம் போடப்பட்டனவென்றும் கேள்விப்பட்டோம். ஆனால் அடுத்த சில தினத்தில் அதே கடற்கரையில் பார்ப்பனர்களால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் பல பார்ப்பனரல்லாதார்களை கூலிக்குப் பிடித்துக் கொண்டு போயிருந்துங்கூட கல்லும் செருப்பும் பறந்ததோடு கலகமும் அடிதடியும் காயமும் ஏற்பட்டு விட்டதாம் காங்கிரசுகாரர்கள் தாங்கள்தான் மிக புத்திசாலிகள் என்பதாக கருதி காலித்தனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அந்த சமயம் வெற்றி கிடைத்ததுபோல் காணப்பட்டாலும் வட்டியுடன் திரும்பவும் அனுபவித்து விடுகின்றார்களேயொழிய இதுவரை ஒரு இடத்திலாவது தப்பித்துக் கொண்டதாகச் சொல்வதற்கே இல்லை.

பஹிஷ்கார இயக்கப் பிரசாரத்திற்கு ஸ்ரீசத்தியமூர்த்தி தலைவராகி விட்டார், ஸ்ரீ வரதராஜுலு வாலராகிவிட்டார். மற்றபடி ஸ்ரீமான்கள் குழந்தை, ஓ. கந்தசாமி செட்டியார், பஷீர் அகமது முதலியவர்களுக்குள்ளாகவே தேசபக்தி அடங்கிவிட்டது. இவர்கள் போகும் கூட்டங்கள் முழுவதும் இந்த கதியையே அடைந்து வருகின்றன.

 பிரசாரத்திற்கு என்று காங்கிரஸ் நாடகத்தில் மீதியான ரூபாயில் 5000, 6000 ரூபாய்களை எடுத்து வீசி எறிகின்றார்கள். இந்த ரூபாய்களுக்காக எப்போதும் கூட்டங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. இது எங்குபோய் முடியும் என்பது மாத்திரம் விளங்கவில்லை.

ஸ்ரீமான் வரதராஜுலு பேச ஆரம்பித்தவுடன் கலகம் ஏற்பட்டதென்றும், அடிதடிகள் நடந்ததென்றும் பொதுஜனங்கள் அவரைப் பேச விடாமல் உட்காரச் செய்து விட்டார்கள் என்றும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. பொது ஜனங்களால் இந்த யோக்கியதை பெற்ற ஸ்ரீவரதராஜுலு அவர்கள், ராமசாமி நாயக்கர் சர்க்கார் பிரசாரம் செய்கின்றார் என்று எழுதுகின்றார், பேசுகின்றார், வாசகர்களை சுத்த முட்டாள்கள் என்றும் எதையும் நம்பிவிடுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டு இம்மாதிரி தந்திரங்களைச் செய்கின்றார்.

 அப்படியே நாயக்கர் சர்க்கார் பிரசாரம் செய்வதாக வைத்துக் கொண் டாலும், பார்ப்பனப் பிரசாரத்தைவிட சர்க்கார் பிரசாரம் எத்தனையோ மேலானதென்பதை இவரே பலதடவை உணர்ந்திருந்தும் பேசியிருந்தும் இன்று மாத்திரம் ஸ்ரீ வரதராஜுலுக்கு பார்ப்பனப் பிரசாரம் இவ்வளவு பயனளிக்கக் கூடியதாகி விட்டதின் இரகசியமென்ன?

ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் தலைமையும் இரங்கசாமி அய்யங்கார் காரியதரிசித் தன்மையும் ஒழிந்த பிறகு ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி அய்யரின் தலைமையும் வரதராஜுலுவின் காரியதரிசித் தன்மையும் இவ்வருஷம் முழுவதும் தாண்டவமாடக்கூடும். இனி, இவர் தலைமையில் அவர் பிரசங்கமும் அவர் தலைமையில் இவர் பிரசங்கமும் மாறி மாறி நடந்ததாக பத்திரிகை கலங்கள் நிறையக் கூடும். ஆனாலும் நம்புவதற்கு தான் இனி தமிழ் நாட்டில் ஆட்கள் கிடையாது என்பதும் அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

 ஆனாலும் ஜனங்களின் முட்டாள்தனத்தில் அவர்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. பொது ஜனங்கள் சீக்கிரம் இவர்களுக்கு புத்தி கற்பிப்பார்களாக.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.02.1928)

Read 34 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.