ஓர் மறுப்பு - “ நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது” (குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927)

Rate this item
(0 votes)

‘தமிழ்நாடு’ பத்திரிகையில் “ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் முதலானவர்கள் கனம் முதல் மந்திரியை வந்து சந்தித்து உபசரித்தார்கள்” என்றும், ‘சுதேசமித்திரனி’ல் “ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் டாக்டர். சுப்பராயனைக் கண்டு பேசினார்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.  இந்த இரண்டு பத்திரிகைகளும் முறையே ‘மந்திரிக்கு  உபசாரம்’, ‘மந்திரிகளின் பிரசாரம்’ என்ற தலைப்புகளின் கீழ் இதை எழுதி இருக்கின்றன.  எனவே இதைப் படிக்கிறவர்கள் சந்தேகப்படக்கூடும்.  என்னவெனில் மந்திரி சுப்பராயன் முதலியவர்களின் அக்கிரமமான நடத்தைகளை ஆதரிப்பதற்காகவும், மேன்மை தங்கிய கவர்னர், கவர்னர் பதவிக்கு லாயக்கில்லை,  ஆதலால் அவரை திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டுமென்று கோவை மகாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்த ஒருவன் அதே மந்திரிக்கு ரயிலில் உபசாரம் செய்தார் என்பதாக ஏற்படுமானால் அவருக்கு (தீர்மானம் கொண்டு வந்தவருக்கு) எவ்வளவு யோக்கியப் பொறுப்பு இருக்கும் என்பதாக ஜனங்கள் நினைக்கக்கூடும் என்பதற்காகவும், மந்திரி தனது வேலையை காப்பாற்றிக் கொள்ளும் முறையில் அவர் செய்யும் பிரசாரத்தில் நமக்கு பங்கு இருந்தது என்று பலர் நினைக்க இடமுண்டாகும் என்கிற எண்ணத்தின் பேரிலும், அந்த இரண்டு பத்திரிகைகளின் கூற்றையும் மறுக்கக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். 

எனது நண்பர் ஸ்ரீமான் பி.டி. ராஜன் அவர்கள் தான் 26 -ந்தேதி மெயிலில் நீலகிரியிலிருந்து வருவதாக தந்தி கொடுத்திருந்ததால் அவரை வரவேற்க நான் ரயிலுக்குப் போயிருந்தேன்.  அப்போது ஸ்ரீமான் ராஜன் அவர்களும், டாக்டர். சுப்பராயன் அவர்களும் ஒரே வண்டியில் இருந்ததால் ஒருவருக்கொருவர்  வந்தனம் செய்து கொண்டோம்.  “நீலகிரி மலையில் மழை உண்டா” என்று கேட்டேன்.  மந்திரி ‘ஆம்’ என்றார்.  இதே மாதிரி மந்திரி கேட்ட ஒரு கேள்விக்கு நான் ‘ஆம்’ என்றேன்.  இதற்குள் ஸ்ரீமான் ராஜனவர்களின் சாமான்கள் வண்டியிலிருந்து இறக்கப்பட்டு விட்டதால் இருவரும் டாக்டர். சுப்பராயனிடம் பயணம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டோம். மந்திரி இலாகா நியமனத்திற்காகவும், அவ்விலாக்காவிலுள்ள ஆவலாதிகளுக்காவும், பலர் அங்கு வண்டிக்குள்ளாகவே கூடி விட்டார்கள்.  இதுதான் நடந்த விஷயம்.  இவற்றை திரித்து நிரூபர்கள் பத்திரிகைகளுக்கு எழுதி இருப்பது சரியல்லவென்றே கண்டிக்கிறேன்.

 

மந்திரிகளை நான் பார்ப்பது எனது நிலைக்கு உயர்வு தாழ்வு என்றாவது கருதி நான் இம்மறுப்பை எழுதவில்லை.  அவசியம் நேர்ந்தால்,  அல்லது நண்பர்கள் என்கிற முறையில், ஒருவரை ஒருவர் காணவும், அளவளாவவும் கடமைப்பட்டவர்களேயாவோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் விஷமத்தனமான தலையங்கமிட்டு ஜனங்கள் தப்பர்த்தம் கொள்ளும்படி எழுதியிருப்பதால் மறுக்க நேரிட்டதற்கு வருந்துகிறேன்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927)

 
Read 22 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.