கோவைத் தீர்மானமும் மந்திரிகளின் பிரசாரமும் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927)

Rate this item
(0 votes)

கோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் பலன் என்னவானாலும் அதனால் நாட்டில் ஒரு பெரிய தடபுடல் ஏற்பட்டுவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதாவது பஞ்சாப் படுகொலையின்போது இராஜப் பிரதிநிதி அவர்களை திருப்பி அழைக்க வேண்டும், திரு ஒட்வியரைத் திருப்பி அழைத்து விட வேண்டும். திரு. டயரை தண்டிக்க வேண்டும் என்பதாக நாட்டாரெல்லோரும் ஒன்று கூடி காங்கிரசில், கான்பரசில் சந்து பொந்துகளில் எல்லாம் தீர்மானித்த காலங்களில், திரு ராஜப் பிரதிநிதிக்காவது, திரு ஒட்வியருக்காவது, திரு, டயருக்காவது ஒரு சிறு கலக்கமும் கவலையும் இல்லாமல் இத்தீர்மானங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் கோயமுத்தூர் மகாநாட்டில் “உத்தியோகம் கிடைக்காமல் ஏமாந்து போன யாரோ சிலர்” கூடி செய்தார்கள் என்று சொல்லும்படியான ஒரு திரு. கவர்னர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கவர்னரை தலையெடுக்கவொட்டாமல் இன்னம் படுக்க வைத்து விட்டது.

யார் என்ன செய்தாலும் பயப்பட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு இருந்த மந்திரிகளை ஊர் ஊராய் சுற்றி தங்கள் சொந்த செலவில் பிரசாரம் செய்யவும், மந்திரி உத்தியோகத்திற்கு எப்போது சாவு வரப்போகிறதோ என்று பயந்து அதிகாரங்களை இப்பொழுதே இன்ஷுர் செய்துவிட்டு ஒயில்சாசனம் எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஒன்றுக்கும் அஞ்சோம் என்ற பார்ப்பனர்களே, காங்கிரஸ் வாசற்படியில் வேட்டை நாய்கள் போல் காவல் காத்துக் கொண்டு வேறு யாரையும் உள்ளே விடக்கூடாது, விட்டால் நமக்கு ஆபத்து என்பதாக இரவும் பகலும் கண் விழித்துக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கொரு கால், அங்கொரு கால் வைத்துக் கொண்டு ஏமாற்றிப் பிழைக்கலாம் என்று எண்ணியிருந்த அரசியல் மேதாவிகளுக்கு உள்ளதும் போய்விடும் போலிருக்கிறதே என்கிற நடுக்கம் ஏற்பட்டு விட்டது. பார்ப்பனர்கள் காங்கிரசில் பல பொய்த் தீர்மானங்களைப் போட்டு ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றிப் பிழைக்கிறார்களே அது போல் நாமும் பொய்த் தீர்மானங்களைப் போட்டு ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றி உத்தியோகம் சம்பாதிக்கலாம் என்று இருந்த சில பார்ப்பனரல்லாதார்களுக்கும் இத்தீர்மானம் ஒரு பரீக்ஷைகாலமாய் ஏற்பட்டு விட்டது.

 

மற்றபடி சர்.சி.பி போன்ற உத்தியோகப் பார்ப்பனர்களுக்கும் ஒரு பெரிய கலக்கத்தை உண்டாக்கி விட்டது. இந்த நிலையில், அய்யோ பாவம்! ஆகாச மந்திரிகள் பயந்து தங்கள் உத்தியோகங்களை நிலை நிறுத்த ஊர் ஊராய் போய் பிரசாரம் செய்வது ஒரு அதிசயமாகுமா? ஆகாதென்றே சொல்லுவோம். அவர்கள் தங்கள் நடவடிக்கை நியாயமானது என்று நிரூபிக்க பல இடங்களில் பிரசங்கம் செய்யப் போகிறார்கள். இந்தச் சமயங்களில் நமது மக்கள் யாதொரு கலகமும் தடையும் இன்றி அமைதியாக அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்க வேண்டும். அவர் யோக்கியதையை நிரூபிக்க நாம் சந்தர்ப்பம் கொடுத்தோம் என்கிற கவுரவம் நமக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டுமே அல்லாமல் அவர்களை பேச விடாமல் தடுத்தோம் என்கிற பெயர் ஏற்படும்படி நடந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். இதுவிஷயம் நாம் பல தடவை எழுதி வந்திருக்கிறோம். ஏனெனில் இது சமயம் நமது நாட்டு வாலிபர்களின் நடவடிக்கைகள் பெரும்பான்மைக்கும் நம்மையே பொறுப்பாளியாக்குகிறார்கள். ஆனதால் நாம் இதை எழுத நேர்ந்தது.

 

தவிர, எப்படியும் இந்த மந்திரிமார்கள் நிலைத்து விடுவார்கள் போலவே தோன்றுகிறது. எப்படி என்றால், சென்ற வாரம் மந்திரிகளின் நிலையென்பதாக நாம் எழுதியிருந்த வியாசத்தின் பின் பாகம் அவ்வளவும் ஏறக்குறைய உண்மையாகவே நடந்து வருகிறது. பார்ப்பனரல்லாதார் கக்ஷி உட்பட ஒவ்வொரு கக்ஷியிலிருந்தும் பலரை மந்திரிகளும், சர்க்காரும் காங்கிரஸ் சுயராஜ்யக் கக்ஷி முதலியதுகளைச் சேர்ந்த பார்ப்பனர்களும் சரி செய்து கொண்டார்கள் என்பதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியும், சட்டசபை காங்கிரஸ் கக்ஷி உபதலைவரும், சுயராஜ்யக் கக்ஷி காரியதரிசியும், இன்னமும் என்னென்னவோ பெருமை உடையவருமான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களும் 4 நாளைக்கு முன் மேன்மை தங்கிய கவர்னர் வீட்டுக்கே நேராகப் போய் கவர்னருக்கு, “நீங்கள் பயப்பட வேண்டாம், மந்திரிகள் கலையாமலிருப்பதற்கு வேண்டிய வேலை செய்தாய் விட்டது,” என்பதாக தைரியம் சொல்லிவிட்டு வந்தாய் விட்டதாகவே தெரியவருகிறது. ஆதலால் அதைப் பற்றி யாருக்கும் இனி சந்தேகம் வேண்டியதில்லை என்பதே எமது அபிப்பிராயம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927)

 
Read 20 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.